பகுதி - 633
பாவச் செயல்கள்
பதச் சேதம் | சொற் பொருள் |
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார் தம் Advertisement
| கோவை: கொவ்வைக் கனி; துப்பு: பவளம்; கொடியார்: கொடிபோன்ற பெண்கள்; |
கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி
| முத்த தனம்: முத்து மாலை அணிந்த தனம்; |
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே
|
|
பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும்
|
|
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா
| மாவை: மாமரத்தை (மாமரமாக நின்ற சூரனை); கைத்து: வெறுத்து; |
மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே
| சொர்க்கத்து ஒரு தத்தை: தேவலோகத்தைச் சேர்ந்த கிளிபோன்ற தேவானை; |
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே
|
|
தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே.
|
|
கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக் கொடியார் தம்... கோவைப் பழத்தையும் சுத்தமான பவளத்தையும் ஒத்த (சிவந்த) உதடுகளைக் கொண்ட பெண்களுடைய,
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனம் மேவி... அழகான கச்சை அணிந்திருப்பதும் முத்து மாலையை அணிந்திருப்பதுமான தனங்களை நாடி,
பாவத்துக்குத் தக்கவை பற்றித் திரியாதே... பாவச் செயல்கள் எனத் தக்கனவற்றைப் பற்றியபடி திரியாமல்,
பாடப் பத்திச் சித்தம் எனக்கு தரவேணும்... உன்னையே பாடிப் பரவும்படியான பக்தி நிறைந்த மனத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.
மாவைக் குத்திக் கைத்து அற எற்றிப் பொரும் வேலா... மாமரமாக நின்ற சூரனை வெறுத்து அவனை வேரோடு சாயும்படியாகப் போரிட்ட வேலனே!
மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே... மாணிக்க(த்தையும் வைரம் முதலான இதர மணிகளால் ஆன ஆபரணங்களையும்) அணிந்த தேவானைக்கு இனியவனே!
சேவல் பொன் கைக் கொற்றவ கச்சிப் பதியோனே... சேவற் கொடியை அழகிய திருக்கரத்தில் பற்றியிருக்கின்ற தலைவனே! காஞ்சிபுரத்திலே வீற்றிருப்பவனே!
தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் பெருமாளே.... தேவர்களுடைய அமரலோகத்துக்குச் சக்கரவத்தியாகத் திகழ்கின்ற பெருமாளே!
சுருக்க உரை:
மாமரமாமக நின்ற சூரனை வெறுத்து அவனை வேரோடு சாய்த்த போர் வேலனே! மாணிக்கம் முதலான நவரத்தினக் கற்களால் ஆன ஆபரணங்களை அணிந்த தேவானைக்கு இனியவனே! திருக்கரத்தில் சேவற்கொடியைப் பற்றியிருப்பவனே! காஞ்சியிலே வீற்றிருப்பவனே! அமரலோகத்தின் சக்கரவர்தியாகத் திகழ்கின்ற பெருமாளே!
கோவைக் கனியைப் போலவும் சுத்தமான பவளத்தைப் போலவும் சிவந்த உதடுகளைக் கொண்ட பெண்களுடை முத்து மாலையணிந்த மார்பகங்களை விரும்பிப் பாவச்செயல்கள் பலவற்றைப் புரிந்து திரியாமல் உன்னையே பாடிப் பரவுகின்ற பக்தி நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.