பகுதி - 643
எச்சில் உணவை உண்டு
பதச் சேதம் | சொற் பொருள் |
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதம் அரை ஒன்றுமூரும் Advertisement
| சரோருக: தாமரை(யை ஒத்த); சிலீமுக: அம்பு (அம்பை ஒத்த); ஒன்றுமூரும்: ஒன்று உம் ஊரும்—உன் ஊரும் என் ஊரும் ஒன்றே; |
வயலும் ஒரே இடை என ஒரு கா இடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே
| வயலும் ஒரே இடை: இடையில் ஒரே ஒரு வயல்தான்; காவிடை: சோலையில் (கா=சோலை); வல்லபம்: வலிமை; |
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும்
| இதவிய: இதமான, இனிய; ததை: நெருங்கிய, நிறைந்த; லீலாசலம்: பொய்யான விளையாட்டு; |
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான்
| மூதுரை: (இந்த இடத்தில்) திருமுருகாற்றுப் படையைக் குறிக்கிறது; வெள்ளம்: பேரளவு (உதாரணமாக, சுக்ரீவனுடைய வானர சேனையின் அளவு எழுபதுவெள்ளம்); சாதம்: ஜாதம்—பிறப்பு; ஒழிந்தவாதான்: ஒழிந்த விதம்தான் என்னே; |
கதை கன சாப(ம்) திகிரி வளை வாளோடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ்
| கன: பெருமையுள்ள; சாபம்: வில்; திகிரி: சக்கரம்; வளை: சங்கு; வசிவித்த: தங்கச் செய்த; மகீபன்: அரசன்; (இதை அடுத்து வரும் தேவி என்பது யசோதையைக் குறிக்கிறது); |
கயிறோடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள
| உலூகலம்: உரல்; ஆகாய கபாலம்: வானத்தின் உச்சி; பீற: கிழிய; |
விதரண மாவலி வெருவ மகா வ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே
| விதரண(ம்): தயாளம், கொடையாளன்; மாவலி: மஹாபலி; வெருவ: அஞ்ச; வ்ருத: விரத; வெள்ள வெளுக்க: நேரடியாக, பகிரங்கமாக; நாராயண மாமன் சேய்: பிரமன்; முனிந்த: கோபித்த; |
விளை வயல் ஊடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே.
| வளை: சங்கு; |
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று வாராய்பதி காதம் காதம் அரை... தாமரையை ஒத்த முகத்தையும்; அம்பையொத்த விழிகளையும் கொண்ட வள்ளியுடைய தினைப்புனத்துக்குச் சென்று நின்றுகொண்டு, ‘என்னோடு வா; என் ஊர் (திருத்தணி) இரண்டரைக் காத தூரத்தில்தான் இருக்கிறது (என்றும்);
ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே... உன் ஊரும் என் ஊரும் ஒன்றேதான்—அருகிலேதான்—உள்ளன; இரண்டுக்கும் இடையில் ஒரு வயல்தான் இருக்கின்றது’ (என்றும்) சொல்லி, ஒரு சோலையிலே உன் வலிமைகளைத் தொலைத்து, வள்ளியின்மேல் மிகுந்த மயக்கம் கொண்டு மடல் ஏறிய* மோகம் நிறைந்த எம்பெருமானே!
இதவிய காண் இவை ததையென வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த... ‘இவையெல்லாம் உண்பதற்கு ஏற்ற இதமான நிலையில் உள்ளன’ என்று வேடனான கண்ணப்பன் கொண்டுவந்து தந்த எச்சில் உணவை உண்டு—கண்ணிலே ரத்தத்தைப் பெருக்கி—பொய்யான திருவிளையாடலை ஆடிய தூயவனான சிவனுடைய மகனே!
நாளும் இளையவ மூதுரை மலைகிழவோனென வெள்ள மெனக் கலந்து நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான்... மூதுரையான திருமுருகாற்றுப்படையில் சொல்லியிருப்பதுபோல், ‘என்றும் இளையோனே! மலைகளுக்கு உரியோனே!’ என்றெல்லாம் ஓதினால் மிகப்பெரிய அளவிலே நூறாயிரம் வகைகளாக வருகின்ற பிறப்புகளெல்லாம் ஒழிந்த விதம்தான் என்னே!
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ...(கௌமோதகி என்ற) கதையையும்; பெருமை வாய்ந்த (சார்ங்கம் என்ற) வில்லையும்; (சுதர்சனம் என்ற)சக்கரத்தையும்; (பாஞ்சஜன்யம் என்ற) சங்கையும் (நாந்தகம் என்ற) வாளையும் கையிலே ஏந்தியவனும்; நந்தகோபாலனாகிய அரசனின் தேவியான யசோதை மகிழ்ந்து வாழும்படியாக,
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள...கயிற்றோடு உரல் உருளும்படியாக இழுத்தபடித் தவழ்ந்த கள்ளனும்; மிகவும் அஞ்சும்படியாக வானத்தின் உச்சி கிழியும்படி உயரமாக வளர்ந்து,
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்தகோவே... தயாள குணமுள்ளவனான மாபலி அஞ்சும்படியாக, பெரிய விரதத்தைக் கொண்ட வாமன உருவத்தில் பகிரங்கமாக நின்றவனுமான மாமன் நாராயணனுடைய மகனான பிரமனைக் கோபித்த இறைவனே!
விளைவயலூடிடை வளைவிளையாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத . மேவுந் தேவர்கள் தம்பிரானே... விளைச்சல் மிகுந்த வயல்களினிடையிலே சங்குகள் தவழ்ந்து விளையாடுகின்ற வெள்ளிநகர்த் திருத்தலத்தில் அமர்ந்திருக்கின்ற வேலாயுதனே! (உன்னை) விரும்புகின்ற தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குபவனே!
சுருக்க உரை:
(கௌமோதகி என்னும்) கதையையும்; (சார்ங்கம் என்னும்) பெருமைபொருந்திய வில்லையும்; (சுதர்ஸனம் என்னும்) சக்கரத்தையும்; (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கையும்; (நாந்தகம் என்னும்) வாளையும்—பஞ்சாயுதங்களையும்—கையிலே ஏந்தியவனும்; நந்தகோபனுடைய தேவியான அசோதையார் மகிழும்படியாக, (இடுப்பிலே கட்டிய) கயிற்றோடு உரலையும் இழுத்தவண்ணம் தவழ்ந்த கள்வனும்; தயாள குணமுள்ள மாவலியின் முன்னால் பகிரங்கமாக வாமன உருவத்திலே வந்து தோன்றி, அச்சம்தரும் வகையிலே வளர்ந்து வானத்தின் உச்சி கிழியும்படியாக நெடிதுயர்ந்தவனுமான மாமன் நாராயணனின் மகனான பிரமனைக் கோபித்த இறைவனே! நல்ல விளைச்சலை உடைய வயல்களிலே சங்குகள் தவழ்ந்து விளையாடுகின்ற வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற வேலாயுதனே! உன்னை விரும்பும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே!
தாமரையைப் போன்ற முகத்தையும்; அம்பை ஒத்த விழிகளையும் உடைய வள்ளியின் தினைப்புனத்துக்குச் சென்று, ‘என்னோடு வா. என் ஊர் (திருத்தணி) அருகில்தான் இரண்டரைக் காத தொலைவில் இருக்கிறது. இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஒரேயொரு வயல்தான் இருக்கிறது’ என்றெல்லாம் பேசி, நின்றிருந்த சோலையில் உன் வலிமையைத் தொலைத்து மடலேறிய மோகம் நிறைந்த பெருமானே! ‘இது உண்பதற்கு இதமாக, இனிதாக உள்ளது’ என்று சொன்னபடி வேடன் கண்ணப்பன் கொண்டுவந்து தந்த எச்சில் உணவை உண்டு, கண்ணிலே ரத்தத்தைப் பெருக்கிப் பொய்த் திருவிளையாடல் ஆடிய சிவனாரின் மகனே! திருமுருகாற்றுப்படையில் சொல்லியுள்ளபடி ‘என்றும் இளையவனே, எல்லா மலைகளையும் உடையவனே’ என்றும் வாழ்த்தினால், கணக்கில் அடங்காதவையான பிறப்புகளெல்லாம் ஒழிந்தே போகின்ற ஆச்சரியம்தான் என்னே!