முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 660

இயற்றமிழை விரிவாக உணர்ந்த வயலூரா!

Updated On : 10 அக்டோபர், 2017 at 9:35 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:21 PM

‘திருப்புகழைப் படிப்பவர்கள், சொல்பவர்களுடைய வறுமையையும் பகையையும் தொலைத்து வெற்றி தருபவனே’ என்று இறைவனை அழைக்கும் இந்தப் பாடல் பழனிக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 42 எழுத்துகளை உடைய பாடல்; ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய சீர்கள் ஒரே அமைப்பை உடையவை.  இவை அனைத்திலும் ஒற்றொழித்து ஐந்து-ஐந்து குற்றெழுத்துகளும்; கணக்கிலே சேராத மூன்றாவது எழுத்து வல்லொற்றாகவும் அமைந்துள்ளன.  ஏழாம் சீரில் ஒரு நெடிலோடு முடியும் நான்கு எழுத்துகளும்; எட்டாம் சீரில் நான்கு குற்றெழுத்துகளும் பயில்கின்றன. 

இந்தப் பாடலில் பயில்கின்ற ஒவ்வொரு ஈற்று பாகத்தையும் தனியாகத் தொகுத்தால் அது மட்டுமே ஒரு தனிப்பாடலாக அமைந்திருப்பதைக் காணலாம்.  இதற்குக் ‘கரந்துறைப் பாடல்’ என்று பெயர்.  மறைந்து நிற்கின்ற பாடல் என்பது பொருள்.  அப்படி இந்தக் கடைசி பாகத்தை மட்டும் தனியாகத் தொகுத்தால், பின்வரும் பாடல் கிடைக்கும்:

Advertisement

கருத்தினால் விரகுசெய்  மடமாதர்
      கலக்குமோ கனமதில் மருளாதே

ஒருத்தனாம் வகைதிரு வருளாலே
      உணர்த்துநா ளடிமையு முடையேனோ

பருத்ததோ கையில்வரு முருகோனே
      பரக்கவே யியல்தெரி வயலூரா

திருத்தமா தவர்புகழ்கு ருநாதா
      திருக்கைவே லழகிய பெருமாளே.

கருத்தோடு கூடிய சொற்களை உபாயமாகப் பயன்படுத்துகின்ற பெண்களால் மனக் கலக்கத்தை அடைந்து மோக மயக்கத்தில் விழாமல் ஒருமை அடைகின்ற நிலைமை உனது திருவருளினால் இந்த அடிமைக்கும் கிடைக்குமோ.  செழிப்பான மயிலில் ஏறிவருகின்ற முருகா!  இயற்றமிழை விரிவாக உணர்ந்த வயலூரா!  திருத்தமான பெருந்தவத்தோர் புகழ்கின்ற குருநாதா!  திருக்கையில் வேலேந்திய அழகிய பெருமாளே

என்பது இந்தக் கரந்துறையும் பாடலுக்கான பொருள்.

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
      தனத்ததன தனத்ததன
                தனத்தனா தனதன தனதானா

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
                        கடைக்கணொடு சிரித்தணுகு
                        கருத்தினால் விரகுசெய்ம டமாதர்

கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
                        கனத்தவிரு தனத்தின்மிசை
                        கலக்குமோ கனமதில்ம ருளாதே

ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
                        உனைப்புகழு மெனைப்புவியில்
                        ஒருத்தனாம் வகைதிரு அருளாலே

உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி
                        உரைக்கமறை யடுத்தபொருள்
                        உணர்த்துநா ளடிமையு முடையேனோ

பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
                        படிக்கடலு மலைக்கவல
                        பருத்ததொ கையில்வரு முருகோனே

பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
                        பணிப்பனிரு புயச்சயில
                        பரக்கவே இயல்தெரி வயலூரா

திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிகப்பகைமை
                        செயித்தருளு மிசைப்பிரிய
                        திருத்தமா தவர்புகழ்கு ருநாதா

சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
                        திருப்பழநி மலைக்குளுறை
                        திருக்கைவே லழகிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.