சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார்.
பிறப்பு: 11.12.1882
இயற்பெயர்: சுப்பையா (எ) சுப்பிரமணியன்
இறப்பு: 11.09.1921
பெற்றோர்: சின்னசாமி ஐயர் - இலக்குமி அம்மாள்
மொழிப்புலம்: தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம்
சிறப்புப் பெயர்: பாரதியார், மகாகவி, தேசியக்கவி, பாட்டுக்கொரு புலவன், புதுமைக் கவிஞன், நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா, தற்கால இயக்கியத்தின் விடிவெள்ளி, சக்தி தாசன், விடுதலைக்கவி, ஷெல்லிதாசன், மீசை கவிஞன், முண்டாசு கவிஞன்
தொழில்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
நாட்டுத் தொண்டு: சுதரந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களின் உள்ளங்களில் இவரின் பாடல்கள் விடுதலை வேட்கை என்னும் காட்டுத்தீயை மூட்டும் அக்கினிக் குஞ்சுகளாய் அமைந்தன.
சமுதாயத் தொண்டு: பெண் விடுதலைக்காவும், சாதி பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்கவும், மூடப்பழக்க வழக்கங்களையும் அடியோடு ஒழிக்கவும் போராடினார்.
இலக்கியத் தொண்டு: பாரதியார் தமிழுக்கு வளஞ்சேர்க்கும் இலக்கியங்களைப் படைத்தார்,. அவருடைய கவிதைகளில் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.
கீதையை மொழிபெயர்த்துள்ளார். ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அப்போது பாரதிக்கு 5 வயது. தாயின் இறப்புக்கு பிறகு பாட்டி பாகீரதி அம்மாளிடம் கொஞ்சம் நாள் வளர்ந்து வந்தார்.
1893 - இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு "ஷெல்லிதாசன்' என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.
1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898 - 1902 - பாரதியார் தனது அத்தையின் ஆதரவில் காசியில் வாழ்ந்தார். காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேரச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் புதுமுகத் தேர்வில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். வடமொழியோடு இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.
1902-1903 - எட்டையபுரம் மன்னர் அழைப்பிற்கிணங்க எட்டையபுரம் வந்தார். அரசவைக் கவிஞராகப் பணி புரிந்தார். 1903 இல் பணியை விட்டு விலகினார்.
1904 - மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின் அதனை விடுத்து சென்னையில் சுதேசமித்திரன் நாளிதமில் துணையாசிரியராகப் பணி புரிந்தார். மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது.
1904 - நவம்பர் முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
1905-1906 - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி -யின் நட்பு கிடைத்தது. தாதாபாய் நெளரோஜி தலைமையில் கோல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். விவேகானந்தரின் சிஷியை நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார்.
1907 - இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உடன் Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கு திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் போன்றோரைச் சந்தித்தார்.
1908 - ஸ்வதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார். தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் இந்தியா பத்திரிகையின் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். அதனால் ஆங்கிலேயே அரசு பாரதி மீது வாரண்ட் பிறப்பித்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி புதுவை சென்றார். அங்கே குவளைக் கண்ணனின் நட்பு கிடைத்தது.
1909 - பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுதியான ஜன்மபூமி வெளியானது.
1912 - பாரதி கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார். பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.
1918 - கடலூர் அருகே பாரதி கைது செய்யப்பட்டு 34 நாள்கள் கழித்து விடுதலையானார். பின்பு அங்கிருந்து கடையம் புறப்பட்டுச் சென்றார்.
1918-1920 - கடையத்தில் வசித்த பாரதி வறுமையால் மிகவும் துன்பமடைந்தார். அவருக்கு யாவரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை. மீண்டும் சென்னை வந்த சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
1921 - திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியாரைத் தாக்கியதில் அவர் நோய்வாய்ப்பட்டார்.
இதே ஆண்டு செப்டம்பர் 12 (11 ஆம் தேதி நள்ளிரவு தாண்டி, 12 ஆம் தேதி) அதிகாலை 1.30 மணியளவில் வீர தமிழனின் நா ஓய்ந்தது. எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அப்போது பாரதிக்கு 39 வயது.
1948 - எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டது.
1960 - பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
1982 - பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
1999 - எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடிய உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.(11.12.1999)
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?"
---------------------
"மாதம் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோமே"
------------------------
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,
இமைப்பொழுதும் சோராதிருத்தல்"
----------------------
"ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா"
--------------------------
"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
----------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
-----------------------
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்"
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
--------------------
"பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்"
--------------------
"ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா"
-------------------
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நி்ன்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
---------------
நெஞ்சு பொறுக்கு தில்லை - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்"
என்று அழியாப் புகழ் பெற்ற பாரதி தம் கவிதைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மூலமாக இன்றும் என்றும் நம்முடன் வாழ்கின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.