கவிதைமணி

மனித நேயம்: வாசகர்கள் கவிதை

சாதிகள் மதங்க ளில்லை; சண்டையும் பிணக்கு மில்லை; வீதிகள் ஊரென் றில்லை;விழுந்தவர் யாரென் றாலும்

தினமணி

உட்கட்சிப்  பூசல்களை உடனடியாய் நிறுத்திவிட்டு
எக்கட்சி ஆயிடினும் எல்லோர்க்கும் உதவிடுங்கள்
எக்கவுண்டன் என்ஜினியர் ஏழைபணக் காரரென்று
எல்லோரும் வெள்ளத்தில் இடர்பட்டே நிற்கின்றார் !

வில்லனொடு கதாநாயகன் வீட்டிலேயும் வெள்ளம்தான்
அல்லல் பட்டுநிற்கின்றார் அனைவருமே மனிதர்தாம்
நல்லிதயம் கொண்டபலர் நாடிவந்து உதவுகின்றார்
வெள்ளமது விரைந்தகல வேண்டிடுவோம் யாவருமே !

உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஒன்றானார் வெள்ளத்தால்
ஓலைக் குடிசையொடு  ஓட்டுவீடும் ஒன்றாச்சு
மதமுள்ள மனிதரெல்லாம் மழைவெள்ளம் நீந்துகின்றார்
மதம்கடந்த சேவைதனை மழைவெள்ளம் உணர்தியது !

ஓடுகின்ற உதரத்திலே ஒழுகிநிற்கும் கண்ணீரிலே
தேடிநின்று பார்த்தாலும் தெரிவதில்லை சாதியென்பர்
வீதிதோறும் வெள்ளம்வந்து விபரீதம் பெருகியதால்
சாதியெலாம் வெள்ளமதில் சாய்ந்துவிட்ட நிலைகண்டோம் !

குறைசொல்லல் தவிர்த்துவிட்டு குறையகற்ற முனைந்திடுங்கள்
துறைதோறும் உள்ளவர்கள் தூய்மையுடன் செயற்படுங்கள்
இறைவனது சோதனையே இதுவென்று எண்ணிநின்று
 எங்களால் இயன்றவரை எல்லோர்க்கும் உதவிடுவோம் !

-எம் . ஜெயராமசர்மா , அவுஸ்திரேலியா

==========

வாகனங்கள் புகையைக்கக்கி காற்றினை

மாசுபடுத்தின

மின்னணு சாதனங்கள்

தன் பங்கிற்கு

ஓசோன் படலத்தில்

ஓட்டையை ஏற்படுத்தின

ஏரி, குளங்களெல்லாம்

குடியிருப்புகளாயின

காடுகளை ஆக்ரமித்து

அங்கு வசிக்கும் விலங்குகளை

விரட்டியடித்தனர்

ஆதரவு தந்த பூமியைக் குடைந்து

எரிபொருளையும்

பாறையைப் பிளந்து நிலக்கரியையும்

எடுத்தனர்

வல்லரசுகள் தங்களுடைய

அணுக்கழிவுகளை

கொண்டு சேர்க்கும் இடமாகத்தான்

கடலைக் கருதி வந்தனர்

பூமிக்கோளத்தை

சின்னாபின்னப் படுத்திவிட்டு

செவ்வாய்கிரகத்தில் தஞ்சமடைய

ஆராய்ந்து பார்க்கின்றார்கள்

நாட்டின் இறையாண்மையைக்

காக்க என கூறிக்கொண்டு

அணுகுண்டுகளை பூமிக்கடியில்

சோதனை செய்து பார்க்கின்றனர்

இயற்கையிடம் சரண்புகுவது

அல்லது

இயற்கையை எதிர்த்து சமர்

செய்வது

இரண்டில் ஒன்றை

தேர்ந்தெடுக்க வேண்டிய

நிர்பந்தம் மனித இனத்துக்கு

ஏற்பட்டிருக்கிறது

கடவுளர் பூமியில்

சாத்தானாகவும் இருக்கலாம்

தேவதையாகவும் இருக்கலாம்

கடவுளிடம் தெரிவியுங்கள்

மனிதநேயமுள்ளவர்களுக்காகவாவது

இன்னும் சிறிது காலம்

காலநீட்டிப்பு கொடுங்கள்

நீரில் மிதக்கும் இந்த பூமிப்பந்திற்கு.

- ப.மதியழகன்

==============

பிறர்க்குதவும் பெருங்குணமே

மனித நேயம்.

பிழைபொறுத்துச் சகித்திடலே

மனித நேயம்.

பிறர்க்கின்னா செய்யாமை

மனித நேயம்.

பேரன்பு செலுத்துதலே

மனித நேயம்.

மறந்தும்தீங் குசெய்யாமை

மனித நேயம்.

மனிதகுலம் உய்யவழி

மனித நேயம்.

சிறந்தகுணச் சேர்க்கையதே

மனித நேயம்.

செய்நன்றி மறவாமை

மனித நேயம்.

உதவுகின்ற மனப்பான்மை

மனித நேயம்.

உள்ளன்பு கொள்வதுவே

மனித நேயம்.

இதமாகப் பேசுவதே

மனித நேயம்.

இரக்கின்ற உயிர்க்குதவல்

மனித நேயம்

மதபேதம் நினையாமை

மனித நேயம்

மன்னித்தல் பெருங்கருணை

மனித நேயம்.

நிதமிங்கே நம்வாழ்வு

நிலைத்த தல்ல.

நெஞ்சுருகப் பணிசெய்தல்

மனித நேயம்.

பேரிடரில் துணைநிற்றல்

மனித நேயம்.

பெருங்கண்ணீர் துடைத்திடலே

மனித நேயம்.

ஊருக்குள் உதவிடலே

மனித நேயம்

ஒற்றுமையை வலியுறுத்தல்

மனித நேயம்.

பாருக்குள் பகைவெல்லும்

மனித நேயம்.

பண்புகளில் பெரும்பண்பு

மனித நேயம்.

ஆருக்கும் அணிகலனாம்

மனித நேயம்.

ஆகையினால் கொள்வீரே

மனித நேயம்.

- டி.கே.ஹரிஹரன், வில்லாபுரம்,

=============

அரித ரிதுமனித னாகும் பிறப்பு

உரிய அருளமு தூறும் - பரிசினாலும்

நேயத்தே நிற்கும் நிமல னருளினாலும்

சேயனே னீயும் சிறப்பு

நேயமாக இருப்பதுதா னென்ன சொல்வீர்

நிச்சயித்த நேயத்தின் பொருளோ வென்ன

காயத்திற் குயிரான ஒன்றா மத்தை

காயகல்ப மானயொன்றை பெறவே வேண்டும்

ஆயவித்தை அறுபத்து நாலுக் கப்பால்

அத்தனையும் அறிந்துணர்ந்த ஆசான்  தானே

மாயமான மயக்கத்தை நீக்கினம்மில்

மறந்திடாது மனிதநேயம் செலுத்து வாரே

அன்பென்பார் சிவமென்பார் இரண்டும் வேறோ

அறியாதே காலமெலாம் சொல்லி மாள்வார்

என்புதோல்போர்த் தயுடலிலே உள்ளோர் என்றும்

எள்ளளவும் உயிரினது நிலையை அறியார்

இன்பொருளின்  விளக்கத்தை தேடிக் காண

ஈசனைத்தான் ஆசானாய் பெறவும் வேண்டும்

அன்னையாயும் அப்பனாயும் அவரே வந்து

அன்புவழி மனிதநேயம்

கடத்து வாரே

- சாலை கிருஷ்ணமூர்த்தி

================

வாடுகின்ற பயிர்கண்டு

வாடுகின்ற உளங்கொண்டு

வள்ளலார்தம் வாழ்க்கைவழி

காட்டினார்------அவர்

மனிதநேயப் பண்பினொளி

கூட்டினார்.

நீடுபுகழ் காந்திமகான்

நித்தியமும் அகிம்சையினைக்

கூடவருங் கொள்கையெனக்

கண்டார்------அவர்

கோவிலென மனிதநேயங்

கொண்டார்.

ஆசைவிடச் சொன்னபுத்தன்

அன்புநெறி வாழ்க்கையதன்

வாசலெனக் கண்டுமனம்

மலர்ந்தார்-----அவர்

பூசனையாய் மனிதநேயம்

புரிந்தார்.

எவரொருவர் மனிதநேயம்

இருக்கின்ற மனத்தவரோ

அவரொருவர் அகிலத்தின்

மனிதர்-----அவர்

தேவரெலாங் கொண்டாடும்

புனிதர்.

துன்பமுறும் வேளையிலே

துணைவருமோர் உள்ளந்தான்

நன்னலஞ்செய் தெய்வமெனச்

சொல்வீர்-----அந்த

நற்பண்பில் மனிதநேயங்

கொள்வீர்.

எண்ணமெலாம் மனிதநேயம்

இருககின்ற மனிதமனம்

திண்ணமது கொவிலெனக்

கொள்வீர்----நல்ல

தெய்வத்தை நேயத்தால்

வெல்வீர்.

எவ்வுயிரும் தன்னுயிராய்

எண்ணுகின்ற மனிதநேயம்

இவ்வுலகில் நிலைபெறவே

பொழியும்-----அந்த

தெவ்வுலக வானம்தன்

மழையும்.

-" இளவல் " ஹரிஹரன், மதுரை.

=============

கண்ணிருந்தும் குருடராய்

காதிருந்தும் செவிடராய்

வாயிருந்தும் ஊமையராய்

இதயத்திற்கும் பூட்டிட்டு

சாவியைத் தொலைத்து விட்டவராய்

ஊரெங்கும் தேடி அலைகிறார்

மாந்தர் - மனித நேயம் தனை !

கண்களில் கருணையும்

வார்த்தைகளில் கனிவும்

இதழ்களில் புன்னகையும்

துடிக்கும் இதயம் தனில்

தன்னலம் மறந்த கருணையும்

தனக்கென வருகையில்

கையேந்தலை விடுத்து

இயன்ற தருணமெலாம்

கைகொடுத்து வாழ்ந்தால்

நிலைத்திருக்கும் அகிலமெலாம்

மனித நேயம் !

பி.தமிழ் முகில், கனடா

==============

கனிவு ததும்பும் விழிகள்,

கள்ளமின்றி புன்னகைக்கும் உதடுகள்,

இன்சொல் பேசும் நாவு,

நல்லதே கேட்கும் செவிகள்,

சாந்தம் தவழும் முகம்,

கருணையுடன் கொடுக்கும் விரல்கள் என,

உடலின் உறுப்புகளே ஊடகங்களாகும் பொழுது

மக்கள், தம் நலம் போல் பிறர்

நலமும் பேணுவர்.

துன்பத்தில் உழலுவோர்

துயர் துடைத்திடுவர்.

தனக்கு விரும்புவதையே

பிறர்க்கும் விரும்புவர்.

விருப்பமானவற்றில் இருந்து

தானமளிப்பர்.

உயிர்களுக்கு ஊறு நேரிடின்,

உளம் கசிந்து உருகுவர்.

பிறர் மதம்,மொழி இழிவென

எண்ணாதிருப்பர்.

மதம், ஜாதி, மொழி

தாண்டி மனிதரை

மனிதராகப்  பாவிப்பர்.

இதுவே மானிட தர்மம்!

இதுவே மனித நேயம்!

-ம.அஹமது நவ்ரோஸ் பேகம். புரசைவாக்கம், சென்னை 

============

கூவமும் இருகரை புரளவும்

குடிபடை கண்டதை மருளவும்

பாவியர் மனவிருள் அகலவும்

பாசக் கதவம் திறந்ததே!

தூவிடு மாமழை பொழியவும்

தோணிகள் தெருவினில் நுழையவும்

மேவிய ஊழியில் தழையவும்

நேயமும் நெஞ்சில் பிறந்ததே!

மாளிகைக் கதவினைத் திறந்தனர்,

மக்களை வாவென அழைத்தனர்!

தூளியாய்த் தோளினைத் தந்தனர்!

தூணெனத் துணையாய் வந்தனர்!

திக்கைக் கும்பிடு வோரும் - பல

தெய்வம் தொழுதிடு வோரும்

ஒக்கக் கூடினர் ஓரிடம் - அங்கு

ஓங்கி வளர்ந்தது மானிடம்!

வீட்டில் சமைத்திடும் உணவினை - நல்

விருந்தென அனைவரும் உண்டிட

ஏட்டில் வந்திடும் சமரசம் - விழி

எதிரினில் முந்திடும் பரவசம்!

எத்தனை எத்தனை வேதனை! - அவை

யாவும் அரசியல் சாதனை!

எத்தனை எத்தனை சோதனை - அவை

இயம்பும் பற்பல போதனை!

சாக்கடை ஆகிய அரசியல்-  முகம்

சட்டெனக் கிழித்தது மாமழை!

பாக்கடை பெருகிய நாடிதன் - பெரும்

பாவமும் துடைத்தது தூமழை!

ஈசனின் கோவிலை அண்டி - அங்கே

இருந்திடும் பற்பல மதத்தோர்

நேசமாய் நிற்கும் காட்சி - அது

நேர்நிகர் இல்லா மாட்சி!

பள்ளி வாசலில் துருக்கர் - உடன்

பார்ப்பனர் கிறித்தவர் இருந்தார்!

அள்ளித் தழுவினர் ஒன்றாய் - அவர்

அன்பினில் முழுகினர் நன்றாய்!

நேத்திரம் திறந்தத னாலே - மனம்

நிர்மலம் நிறைந்தத னாலே

சாத்திரம் கோத்திரம் இல்லை - ஒரு

சட்டமும் திட்டமும் இல்லை!

ஆத்திர அவசரம் இல்லை - வெறும்

ஆடம் பரங்கள் இல்லை!

தோத்திரம் தொழுகை உண்டு - பெரும்

துணையெனத் தெய்வமும் உண்டு!

அன்பது பூத்தது கண்ணில் - அது

ஆருயிர் ​காத்தது மண்ணில்!

மன்பதை ஈர்த்தது நேசம் - என

மணமுடன் ஆர்த்தது தேசம்!

ஆயிரம் ஆயிரம் இடங்கள் - தனில்

ஆக்கினர் உணவினை மக்கள்!

பாயிரம் பாடிட வேண்டும் - இந்தப்

பாரதைப் புகழ்ந்திட வேண்டும்!

போக்கிடம் இன்றித் தவித்தோர் - இடம்

போந்துப் புயலென நுழைந்து

தூக்கித் தோளினில் சுமந்து - மிகத்

துணிவுடன் காத்தனர் மக்கள்!

நேயம் நிறைந்தது கண்டு - காளி

நெஞ்சம் நிறைந்திவண் நின்றாள்!

மாயம் புரிந்தது மழையென - இனி

மங்கலம் ஆகுக என்றாள்!

- சிவ.சூரியநாராயணன், சென்னை.

===============

எங்கோ ஏதோ என்று இருந்துவிடாமல்

கேள்வி

பட்டதும் துடி துடித்து

ஓடிவந்து தூக்கிவாரி

அணைத்துக்கொளவதும்

கண்ணால் பார்த்ததும்

பதறியடித்து ஓடிவந்து

பக்கத்தில் நின்று தகுந்த

பாதுகாப்பு கொடுப்பதும் தான்

மனித நேயமன்றோ

அல்லலுறுவோன் அவன்

அன்னியனேயானாலும்

வைராக்கியத்தை தள்ளி

ஆரோக்கியத்தை அள்ளி

ஊட்டிடும் உள்ளங்களே

மனித நேயத்தை நிலை

நிறுத்தி வைத்திடுமன்றோ

காயத்தை  ஆற்றும்

மருந்தைப் போன்று

அல்லலுறும் ஆபத்தை

அன்பு ஒன்றே ஆற்றும்

மாயத்தை இதயமறியும்

நேயத்தையன்றி வேறு

ஒன்றில்லை ஜகத்திலே

சில்லரை தீரும்வரை

பல்லறை பிளக்கும் அவனை

கல்லறைக்கு அனுப்பி பின்

துள்ளி குதிப்போறே இங்கு

எண்ணிலடங்காத பேராம்

மனிதநேயமா இவரிடத்தா

வேறு எங்கேனும் தேடிப்பார்

கருணைக்கும் கடவுளுக்கும்

இடையிலுள்ள நெருக்கமே

மனித நேயமாய் மாறுகிறது

- வேளாங்கண்ணி, ஆப்ரகாம்

============

மாறிக் கொண்டிருக்கும் காலம் தினமும்

மாற்றியது தன் வீச்சில் அனைத்தையும்

மாறினான் மண்வாழ் மனிதனும்

தான் தன் வீடு பெண்டு பிள்ளை

தவிர்த்து எதுவுமில்லை அவனுக்கு உலகில்

பகலிரவு நேரம் பாராமல்

பணம் சேர்க்கும் எந்திரமானான்
 

எண்ணத்தில் வேறெதுவுமில்லை

எதிரே வருபவர் தெரிவதில்லை

காசு காசு காசு என்கிற

காயத்ரி ஜெபத்தைத் தவிர

பேசுவதற்கு  விஷயமில்லை
 

பெருமைப்பட ஏதுமில்லை

அடுத்தவன் வாழ்ந்தாலென்ன

அடியோடு அழிந்தால்தானென்ன

சுயநலம் எனும் கோரப் பயிரின்

விளைநிலமாய் மாறிவிட்டான்
 

காலந்தாண்டிய பெருவெளியில்

கால்நீட்டிக் கண்ணயர்ந்திருந்த கடவுள்

விழித்தது திடீரென ஒரு நாள்

விண்ணதிர்ந்து பொங்கியது

பேய்மழையாய் மண்மீதிறங்கி

பெருவெள்ளமாய்க் கிழித்தோடியது
 

கண்வரை வெள்ளநீர் எகிர்ந்துயர

விண்பார்த்து அலறினான் மனிதன்

மண்மீதில் செய்துவிட்டான் பல பாவம்

மண்டையைப் பிய்ப்பதில் என்ன லாபம்
 

இருந்தும் நாட்டில் நல்ல உள்ளம்

எங்கெங்கோ மூலையில்

இருக்கவே செய்தது

இடரிலிருந்து மீட்கும் சுடரென

எழுந்தோடி வந்தது விரைந்து

வெள்ளநீர் கண்டு

உள்ளம் கலங்கிடாமல்

பணிவிடை பலசெய்து

பாதித்த பாமரர்களுக்கு

பாங்காய் உதவி மகிழ்ந்தது
 

அழிந்துவிட்டதோ மனிதரிடையே

அன்பும் பாசமும்

அளவிலா நேசமும்
 

வாடிய முகம் கண்டு

ஓடிவரும் நற்பண்பும்

என்றெல்லாம் எண்ணி எண்ணி

இளைத்திருந்த வேளையில்
 

இடையிலே புகுந்து உலுக்கிப்போட்ட

இயற்கைப் பெரும் சக்தியே

மனித நேயம் மாசற்ற உயிரன்பின்

மாண்புதனை மீண்டும் நினைவுறுத்தி
 

மனிதரை மாபெரும் இடரிலிருந்து

மீட்டு நிமிர்த்துவிட்டாய், வாழ்க நீ என்றும் !

--கவிஞர் ஏகாந்தன், புது தில்லி

============

இயற்கை அன்னையின்

சீற்றத்தில் பொங்கியது

ஆறும் , ஏரியும்  மட்டுமா ? 

மனித நேயமும் சேர்ந்துதானே !

பிரளய நேரத்தில்

பிற மொழி மக்களும்

நெருங்கிய உறவாக மாறி 

தங்கள் கரம் நீட்டி

பல இன்னுயிர் காக்க காரணம்...  

இன்னமும் இம்மண்ணில் வற்றாமல்

ஊறும்  மனித நேயம் ! 

இது எம் மதம்

அது உம் மதம்

என பேதம் பார்க்காமல்

எம்மதமும் சம்மதம் ..

அதுவே என் வேதம் இனி- என

நம்மை சொல்ல வைத்ததும்

நம் உயிர் காத்த வேற்று மத

மனிதநேயம் !

வீடிழந்த  

மக்களை  தேடியழைத்து

தம் வீட்டில் தங்க வைத்து

உண்ண உணவும் தான் கொடுத்து

நம்முள் தூங்கி விட்ட

மனித நேயத்தை நாமே தட்டி எழுப்ப ,

இயற்கை நமக்கு கொடுத்ததோர் அரிய வாய்ப்பு

இயற்கையின் சீற்றத்தில்

பொங்கி வழிந்த இந்த மனித நேயம்

இனி என்றும்

வற்றாத ஜீவ நதியாக

தங்கியோடட்டும் இங்கு

- கே. நடராஜன் ஆஸ்திரேலியா

=============

சாதியின் பெயரால் மோதுவது முறையோ ?

சகோதர வாழ்வைச் சிதைப்பது தகுமோ ?

உயர்ந்தவன் தாழ்ந்தவன் சாதியில்  இல்லை !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் சிந்தையில் உண்டு !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஓரினம் !

என்று அன்றே உலகிற்கு  உரைத்தவன் தமிழன் !

ஒரே ஊருக்குள் சாதிச் சண்டை நடந்தால் !

உலகம் சிரிக்கும் நம்மைப் பார்த்து !

வெட்டுவதும் குத்துவதும் விவேகம் அன்று !

வீணாக சண்டையிடுவது பகுத்தறிவு அன்று !

விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இனிக்கும் !

வீரமென்று மோதி வீழ்ந்தால் கசக்கும் !

சொந்தமாக சிந்தித்தால் சண்டை வராது !

சிலர் தூண்டி விட மோதுவது முட்டாள்தனம் !

உயர்திணை மனிதன் அக்றிணையாகலாமா !

ஒரு போதும் மனிதன் விலங்ககாகக்  கூடாது !

விலங்குகள் கூட தன் இனத்தை அழிப்பதில்லை !

மனிதன்தான் தன் இனத்தை அழிக்கின்றான் !

மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு !

மனிதன் மனிதனாக வாழ்வதே நன்று !

-கவிஞர் இரா .இரவி

=============

சிரித்திடு மலர்கள் பூத்த

செடிக்கென ஆவதில்லை;

பறித்துமே சூடிக் கொள்ளும்

பாவையை மகிழ்வில் ஆழ்த்தும்.

நெருக்கியே பழுத்திருக்கும்

நிறைசுவைக் கனிகள் காய்க்கும்

மரத்தினுக் காவதில்லை;

மற்றவர்க் கின்ப மூட்டும்.

செடியொடு மரமும் அன்புச்

செயலினில் உயர்ந்திருக்கத்

துடிப்புடை மனிதர் அன்புத்

தொடர்பினில் துவளலாமா ?

இடுக்கணில் நைந்திட் டாலும்

இங்குள மற்றோர் காணும்

இடுக்கணைத் தீர்க்க முந்தும்

இதயமே மனித நேயம்.

அன்பினை அன்புக் காக்கி

அன்புடன் அரவ ணைத்தே

என்பினை உருக்கு மந்த

அன்பினுக் கெல்லை யில்லை.

அன்பெனும் ஒன்றே ஊற்றாய்

ஆங்கெதும் பேத மின்றி

அன்பினால் அணைத்துக் காக்கும்

அதுவேநல் மனித நேயம்.

சாதிகள் மதங்க ளில்லை;

சண்டையும் பிணக்கு மில்லை;

வீதிகள் ஊரென் றில்லை;

விழுந்தவர் யாரென் றாலும்

கோதியே எடுத்த ணைத்துக்

கண்ணினீர் மாற்று தற்காய்

மீதியும் துடிக்கும் நெஞ்சே

மனிதாபி மான நெஞ்சாம்.

வெள்ளமே விழுங்க வீட்டை

இழந்துமே வந்தோர் தம்மை

உள்ளமே விரித்த ணைத்து

மசூதி, கோயி லெல்லாம்

உள்ளமே போல்தி றந்தே

உள்ளழைத் துபச ரிக்கும்

உள்ளமும் செயலும் காட்டும்

உயர்வதே மனித நேயம்.

அன்பினில் தோய்த்தெ டுத்தே

அருளுடன் அணைத்துக் காத்தே

என்பெலாம் பிறர்க்காய் ஈயும்

ஈடிலா உயர்ந்த பண்பே

மன்பதை உயர்த்தும் பண்பாம்,

மனிதனைக் காட்டு மந்த

அன்புடைச் செயல்தாம் இந்த

அவனியில் மனித நேயம்.

- டாக்டர். ச.சவகர்லால்


=============

இருள்படரும் முன்னிரவு மனைவியோடு

இருச்சக்கர வண்டியிலே சென்றபோது

தெருமுனையின் குறுக்கினிலே ஓடிவந்து

தேர்க்காலில் விழுந்தகன்றாய் நுழைந்தநாயால்

இருவருமே நிலைகுலைந்து கீழேவீழ

இடைநின்ற கம்பத்தில் தலையும்மோத

பெருகிவந்த குருதியாலே மனைவி மயங்க

பெருத்தவடி வலியாலே துடித்தேன் நானும் !

பார்த்தவர்கள் பார்த்தபடி பதைப்பேயின்றிப்

பாதையிருதிசைகளிலும் நடந்து சென்றார்

ஊர் விழாவில் வேடிக்கை பார்ப்பதைப் போல்

உற்று நோக்கி அவர்வழியே கடந்து சென்றார்

யார் இவர்கள் எனத்தமக்குள் கேட்டுக் கொண்டு

யாதொன்றும் நடவாததுபோல் மறைந்தார்

வேர் போன்ற கணியன்தன் கேளிர் சொல்லோ

வெறுஞ் சொல்லாய் ஆனதென்றே நொந்துபோனேன்!

எந்திரமாய் மாறிவிட்ட வாழ்க்கை தன்னில்

எல்லோர்க்கும் அவர் பணியே தலையாய் ஆக

முந்தியிங்கே செழித்திருந்த காடோயின்று

முற்றிலுமாக மொட்டையாகிப் போனபோல

சந்ததியை வாழவைத்த ஆறோயின்று

சாக்கடையாய் மாறிவிட்ட தன்மையாக

சிந்தனையில் சிறந்திருந்த நேயமின்று

சரழிந்து போனதுவே எனக்குமைந்தேன் !

பெரியவர்கள் பெண்களென அத்தனைப்பேர்

பெயரளவில் உச்சுகொட்டி சென்றபோது

உரியதொரு பொறுப்பற்றோர்எ ன்றேஏசி

ஊர்தூற்றும் இளைஞர்கள் இருவர்வந்து

தெரியாத எங்களினை எடுத்துச் சென்று

தேவையெனும் குருதியையும் கொடுத்தே காத்தார்

அரிதாகி மடியவில்லை மனிதநேயம்

ஆங்காங்கு இருப்பதாலே உள்ளோம்நாமும் !


- பாவலர் கருமலைத்தமிழாழன்

=============

“மனித நேயம்” என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு

”சுடும் நினைவுகள்”

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT