கவிதைமணி

புதிய நாட்குறிப்பு:  பாவலர் கோ. மலர்வண்ணன்

கவிதைமணி

நாட்குறிப்பு வரைவதனை நல்லதொரு வழக்கமென
    நாமும்பின் பற்றிடுவோம்; நலம்பெறவே முனைந்திடுவோம்!
நாட்டினிலே நிகழுகின்ற நடப்புகளை, நம்வாழ்வில்
    நடக்கின்ற நிகழ்வுகளை நாமதிலே பதியவைப்போம்!
ஏட்டினிலே எழுதிவைத்தால் எந்நாளும் அழியாது!
    என்றேனும் ஒருநாள்வந் துதவியாக நின்றிடுமே!
நாட்குறிப்பு வரையாத நாளெல்லாம் நாம்வாழா
    நாளென்று நினைத்துவிட்டால் நாட்குறிப்பை வரையோமோ?

ஆனந்த ரங்கமென்பார் ஆங்கிலேயர் ஆண்டபோழ்தில்
    அன்றாடம் நிகழ்வுகளை அயராது வரைந்ததனைத்
தானின்று வரலாற்றை எழுதுபவர் துணைகொண்டு
    தகுதிமிகு வரலாற்றைத் தாம்படைத்துப் பெருமைகொண்டார்!
ஏனிதுபோல் நாமெழுதி எதிர்காலத் தலைமுறைக்கு
    இருட்டடிப்புச் செய்திகளை இனங்காட்டக் கூடாது?
தேனெவே சுவைபடவே எழுதுதிறன் இன்றெனினும்
    தெரிந்தபடி எழுதிவைத்தால் குறையெவர்தாம் கூறுவார்கள்?

அன்றாடம் நிகழ்கின்ற வரவுசெலவு கணக்குகளை
    அதிலெழுதி வைத்திடலாம்; மற்றவர்கள் கடன்வாங்கிச்
சென்றிருந்தால் நாட்குறிப்பில் எழுதுவது நல்லதன்றோ?
    செலுத்திவிட்ட கடன்தொகையை எழுதிவைத்தல் தப்பிலையே!
என்றென்று எதைச்செய்ய வேண்டுமென்ற விவரத்தை
    எழுதிவைத்தால் மறவாமல் அன்றன்று செயலாமே!
என்றேனும் எதையேனும் மறந்திருந்தால் நாட்குறிப்பில்
    இருந்ததனைப்  படித்திடலாம்; நினைவுகூர்ந்து மகிழ்ந்திடலாம்!

புத்தாண்டு பிறந்ததுவே! புதிய,நாட் குறிப்பெடுத்துப்
    புத்தாண்டு நல்வாழ்த்துச் செய்தியினை முதலெழுதி
முத்தாகப் பிறசெய்தி தொடர்ந்தெழுதத் தொடங்கிடுவோம்!
    முனைப்பிதிலே காட்டுவதால் குடிமுழுகிப் போகாதே!
எத்தாலும் மறவாமல் எப்போதும் செய்திடுவோம்!
    இருக்கின்ற நாளெல்லாம் எழுதிவைத்துக் காத்திடுவோம்!
செத்தாலும் நாட்குறிப்புச் செய்திகள்தாம் சாகாவே!
    சிறப்புமிகு சான்றுகளாய் நிலைத்திருக்கும்; புகழ்சேர்க்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT