முகப்பு
தினம் ஒரு தேவாரம்

46. மண்ணளந்த மணிவண்ணர் -  பாடல் 6

பாற்கடலிலிருந்து பொங்கிய விடத்தை உண்டு

Updated On : 17 டிசம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:25 AM

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினால் காய்ந்து
                உகந்த காபாலியார்
முறித்ததொரு தோல் உடுத்து முண்டம் சாத்தி
    முனிகணங்கள் புடை சூழ முற்றம் தோறும்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம் வாய்ச் சிறு
        முறுவல் வந்து எனது சிந்தை வௌவ
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே
                                புக்கு அங்கே மன்னினாரே

விளக்கம்

முண்டம் = தலை மாலை. முறித்தது = உரித்தது. முற்றம் = வீட்டின் முன் வாசல். முறுவல் = புன் சிரிப்பு. தெறித்ததொரு வீணை = விரல்களால் சுண்டி இழுக்கப்பட்ட வீணை. வௌவ = கவர. மறித்து = மீண்டும்.

Advertisement

பொழிப்புரை
பாற்கடலிலிருந்து பொங்கிய விடத்தை உண்டு அதனைத் தனது கழுத்தினில் தேக்கியதால், கருநிறம் அடைந்த கழுத்தினை உடையவரும், தனது அடியவன் மார்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டு காலனைக் காலால் உதைத்து மகிழ்ந்தவரும், பிரமனின் தலையைக் கையில் ஏந்தியவராய் உலகெங்கும் திரிந்து பலி ஏற்பவரும், தாருகவனத்து முனிவரால் தன் மீது ஏவிய புலி மற்றும் யானையின் தோல்களை உரித்து ஆடையாகவும் போர்வையாகவும் தரித்துக்கொண்டவரும், தலைமாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான், முனிவர் குழாங்கள் தன்னைப் பின் தொடர, பலி ஏற்பதற்காக பல இல்லங்களின் முற்றங்கள் செல்கின்றார். அவ்வாறு செல்லும் இறைவன், தனது கையில் உள்ள வீணையின் நரம்புகளை விரலால் சுண்டி இனிய இசை எழுப்பியவராய் செல்கின்றார். அவரது புன்முறுவல் எனது சிந்தைனையைக் கவர, அவர மறுபடியும் என்னை நோக்கமாட்டாரா என்று எனது மனம் ஏங்கியது. ஆனால் அவரோ என்னை மறுபடியும் நோக்காமல், மாயங்கள் பேசியவராய், வலம்புரம் தலம் சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.