முகப்பு
தினம் ஒரு தேவாரம்

30. வண்ணமும் வடிவும் - பாடல் 9

தனது மகளின் நிலையை உணர்ந்த தாய், சிவபிரான் அருள் செய்தால் தான், தனது மகளின் கவலை தீரும் என்ற முடிவுக்கு வருகின்றாள். எவராலும்

Updated On : 11 ஜூலை, 2016 at 3:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:12 PM

பாடல் 10

பொன்செய் மாமுடி வாளரக்கன் தலை
அஞ்சு நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன்
என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும் போதும் துணை எனலாகுமே

விளக்கம்

தனது மகளின் நிலையை உணர்ந்த தாய், சிவபிரான் அருள் செய்தால் தான், தனது மகளின் கவலை தீரும் என்ற முடிவுக்கு வருகின்றாள். எவராலும் வெற்றிகொள்ள முடியாத அரக்கன் இராவணனின் வலிமையை ஒடுக்கிய சிவபிரான் மனது வைத்தால் எதுவும் நடக்கும் என்ற தனது நம்பிக்கையை தாய் தெரிவிப்பதாக அப்பர் பிரான் பதிகத்தினை முடிக்கின்றார்.

பொழிப்புரை

பொன்னால் செய்யப்பட்ட மணிமுடிகளைத் தரித்த, அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் நொறுங்குமாறு செய்யும் ல்லமை படைத்த சிவபிரானால் ஏது தான் செய்ய முடியாது? கழிப்பாலையில் உறையும் பெருமான் தான், பிரிவுத் துயரால் எனது மகள் ஒருகால் இறக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும். அதாவது, அந்த நிலைக்கு எனது மகள் தள்ளப்படாமல், இறைவன் தான் அவளுக்குத் துணையாக இருந்த காப்பாற்ற வேண்டும்.

முடிவுரை

தனது மகள் இடைவிடாது கூறிய சொற்களைக் கேட்ட தாய், தனது மகள் சிவபிரான் பேரில் தீராத காதல் கொண்டிருப்பதை உணர்கின்றாள். அறியா வயது சிறுமி என்பதால், தனது மகளுக்கு, தான் கொண்டுள்ள காதல் நிறைவேறுமா அல்லவா என்பது புரியாத நிலையில், பித்துப் பிடித்தவள்போல் எப்போதும் சிவபிரானின் பெருமையையும் அவனது புகழ்ச் செயல்களையும், அவனது அடையாளங்களையும் பிதற்றிக்கொண்டு இருக்கும் மகளின் நிலையை எண்ணி, அவள் மீது இரக்கம் கொண்டு, தனது மகள் பற்றித் தான் கொண்டுள்ள கவலையை உணர்த்தும் அருமையான பாடல்கள் கொண்ட பதிகம். பதிகத்தின் முதல் ஆறு பாடல்கள் அப்பர் நாயகி, சிவபிரான் பால் கொண்டுள்ள காதலின் ஆழமான தன்மையை உணர்த்துகின்றது. அப்பர் நாயகி, தனது காதல் கைகூட வேண்டும் என்று சிவபிரானை வேண்டுவதும். காதல் கைகூட தான் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதும் பதிகத்தின் ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் கூறப்படுகின்றன. பதிகத்தின் கடைப் பாடலில் தாய், தனது மகள் பிரிவுத் துயரால் இறந்துவிடாமல் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதை எடுத்துரைக்கின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடல் சிதைந்துவிட்டது.

அப்பர் நாயகியின் இடத்தில் ஆன்மாவை வைத்து, இந்த பதிகத்திற்கு பொருள் காண்பதுண்டு. முதல் பாடல் ஆன்மா எப்போதும் இறைவனையே நினைத்திருக்கும் நிலையையும், இரண்டாவது பாடல் ஆன்மா இறைவனின் திருவடிகள் பற்றிய சிந்தனையை மனதினில் வைத்து, அந்த நிலையிலிருந்து வழுவாமல் இருப்பதையும், எவரேனும் தன்னைத் திசை திருப்ப முயற்சி செய்தால் அவர்களை பழிக்கவும் தயங்காத நிலையையும் உணர்த்துகின்றது. மூன்றாவது பாடல், சிவானந்தத்தில் திளைக்கும் ஆன்மா வாய் குழறி, வார்த்தைகள் முறையாக வராத நிலையை அடைவதை உணர்த்துகின்றது, நான்காவது பாடல், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் மதியாத நிலை அடையும் ஆன்மாவை குறிக்கின்றது, ஐந்தாவது பாடல், ஆன்மா ஒரு புறம் உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பந்த பாசங்களாலும் மறுபுறம் சிவபிரான் மீது வைத்துள்ள அன்பினாலும். ஈர்க்கப்பட்டு ஊசலாடும் நிலையை உணர்த்துகின்றது. ஆறாவது பாடல் பக்குவம் அடைந்த ஆன்மாக்களை இறைவன் தேடி வந்து அருள் செய்யும் நிலையை உணர்த்துகின்றது. ஏழாவது பாடல் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளித்து, உயிர்களை நெறிப்படுத்தும் முறை உணர்த்தப்படுகின்றது. எட்டாவது பாடல், ஆன்மா பக்குவம் அடைந்த அருளாளர்களை அணுகி, இறைவனின் திருவடிகளை அடையும் மார்கத்தை கேட்டு அறியும் நிலையை உணர்த்துகின்றது. கடைப் பாடல், நாம் இறக்கும் தருவாயில் நமக்கு உதவக்கூடியவர் சிவபெருமான் ஒருவரே என்பதை உணர்த்துகின்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.