31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 3
இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான நெகிழ்வும் இல்லாமல்,
பாடல் 3
நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள்
நித்தலும் நேரிழையாள் ஆய
ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்து
அமர்ந்து அடியார் உள்கி ஏத்த
களி வண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை
மேய கபாலப்பனார்
வளி உண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு
அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

நெளிவு = நெகிழ்வு, தளர்ச்சி. வளி = மூச்சுக் காற்று. உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் சில நாட்கள் சிலர் வாழலாம், ஆனால் காற்றின்றி எவரும் வாழ முடியாது. எனவே அனைவரையும், தவத்தினில் ஈடுபட்டு உணவின்றி, தண்ணீரின்றி வாழும் முனிவர்களையும் உள்ளடக்கி, வளியுண்டார் என்று, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழையாள் = சிறந்த ஆபரணங்களை அணிந்தவள், இங்கே உமையம்மை. கண்டல் = தாழை.

பொழிப்புரை

இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான நெகிழ்வும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

Advertisement