31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 4
மணம் மிகுந்த திருநீற்றினைத் தனது உடலில் பூசியவராகவும், திருநீற்றுப் பையினை உடையவராகவும்,
பாடல் 4
பொடி நாறு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்கு
அரவர் பூணநூலர்
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆனஞ்சும் ஆடும்
ஆதிரையினார் தாம்
கடிநாறு பொன்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய
கபாலப்பனார்
மடிநாறு மேனி இம் மாயம் நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே
போதும் நாமே

விளக்கம்

மடிநாறுதல் = அழியும் தன்மை. பூதிப் பையர் = திருநீறு கொண்ட பையினை உடையவர். பெருமான் தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவராக, பல திருமுறைப் பாடல்களிலும் சித்தரிக்கப்படுகின்றார். அவ்வாறு எப்போதும் உடல் முழுவதும் திருநீறு பூசியவராக காணப்படுகின்றார் என்றால், அவரது அருகில் திருநீற்றுப் பை இருக்க வேண்டும் அல்லவா. இதனை உணர்த்தும் வகையில் பூதிப் பையர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு ஆலால சுந்தரர், பெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்த தன்மையை நினைவூட்டுகின்றது. ஒரு சமயம், கயிலை மலையில் உபமன்யு முனிவர், தென்திசையிலிருந்து கயிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு ஒளியினை வணங்கிய பின்னர், ஒளிப்பிழம்பாக வருவது சுந்தரர் என்று தனது சீடர்களுக்கு கூறினார். சுந்தரர் யார் என்று அவர்கள் கேட்டபோது, கயிலாய மலையில் சிவபெருமான் அணிவதற்கு மலர் மாலையையும் திருநீற்றினையும் எடுத்துக்கொடுப்பவர் ஆலால சுந்தரர் என்று கூறியதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான்
வெள்ள நீர்சடை மெய்ப்பொருளாகிய
வள்ளல் சாத்து மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன்

திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் தோளில் கொண்டவர் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (6.96.4) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருநீறு வைக்கப்படும் பாத்திரத்தினை (சம்படம்) பொக்கணம் என்று அழைப்பார்கள். இங்கே தோளில் கொண்டார் என்று குறிப்பிடுவதால், திருநீற்றுப் பை என்று பொருள் கொள்ள வேண்டும். அக்கு = எலும்பு மாலை. அரை = இடுப்பு. கொடியான் = அரக்கன் சலந்தரன். இந்தப் பாடலில் உலகத்தைப் படைப்பவனும், ஊழிக் காலத்தில் உலகத்தை ஒடுங்கச் செய்பவனும் சிவபெருமான் என்று உணர்த்தப்படுகின்றது.

பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார் பூதப் படைகள் புடை சூழக் கொண்டார்
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்துலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே

சுந்தரரும், தான் அருளிய வாழ்கொளிபுத்தூர் பதிகத்தின் பாடலில் (7.57.10) பூதிப்பையும் புலித்தோலும் உடையவன் என்று பெருமானை அழைப்பதை நாம் காணலாம். உயிர்களைப் பீடித்துள்ள கொடிய நோயாகிய பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லவன் என்பதால், பெருமானை மருந்தானான் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானைத் தவிர வேறு ஒன்றினையும் நினையேன் என்று இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் சுந்தரர் முடிக்கின்றார்.

திருந்த நான்மறை பாட வல்லானைத் தேவர்க்கும் தெரிதற்கு அரியானைப்
பொருந்த மால்விடை ஏற வல்லானைப் பூதிப்பை புலித்தோல் உடையானை
இருந்து உண் தேரரும் நின்றுண் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம்
மருந்து ஆனான் தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.66.5) அப்பர் பிரான் இறைவனை பூதிப் பையான் என்று அழைப்பதை நாம் இங்கே காணலாம். தன்னை விரும்பும் அடியார்களுக்கு உண்மையானவனாகவும், தன்னை விரும்பாத பாவிகளுக்கு பொய்யனாகவும் விளங்கும் பெருமான் என்று இந்த பாடலை அப்பர் பிரான் தொடங்குகின்றார். பெருமானை நினைக்காதவர்களை அரும் பாவிகள் என்றும், தங்களது பாவங்களைத் தீர்க்க முடியாதவர்கள், என்றும் அப்பர் பிரான் சாடுவதை நாம் இங்கே உணரலாம். பரந்தான் என்று உலகெங்கும் பெருமான் பரந்து நிற்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

மெய்யானைத் தன பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியர்கட்கு என்றும்
பொய்யானைப் புறங்காட்டில் ஆடலானைப் பொன் பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவம் அசைத்தான் தன்னைப் பரந்தானை பவளமால் வரை போல் மேனிச்
செய்யானைத் திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

இடைமருது தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ள பெருமான் எத்தகையவர் என்று விளக்கும் ஒரு பாடலில் (6.17.6) அப்பர் பிரான், பெருமானை பூதிப் பையர் என்று அழைக்கின்றார். இடபக் கொடியினை உடைய பெருமான், வேள்விகளில் ஆகுதியில் இடப்படும் மந்திரங்களாகவும் விளங்குகின்றார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். தன்னைப் போற்றும் அடியார்களுக்கு, அவர்களது சுற்றம் போன்று அவர்களுடன் நெருக்கமாக நின்று கருணை புரிபவர் என்பதை உணர்த்தும் வண்ணம் அடியார் குடியாவார் என்று கூறுவதை நாம் உணரலாம்.

கொடியார் இடபத்தர் கூத்தும் ஆடிக் குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்கரவர் பூணநூலர்
அடியார் குடியாவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்று உரியார் எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே

பொழிப்புரை

மணம் மிகுந்த திருநீற்றினைத் தனது உடலில் பூசியவராகவும், திருநீற்றுப் பையினை உடையவராகவும், புலித் தோலை உடையவராகவும், கோபத்தால் பொங்கி படமெடுக்கும் பாம்பினை உடலில் அணிந்தவராகவும், பூணூல் அணிந்தவராகவும், உள்ள பெருமானை அவரது அடியார்கள் நறுமணம் மிகுந்த தாமரை மலர்களைக்கொண்டு அவரது திருவடிகளில் சாத்தி வழிபடுகின்றார்கள். திருவாரூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், ஆதிரை நட்சத்திர நாளினை மிகவும் விரும்புவரும். பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுபவரும், ஆகிய இறைவன் கழிப்பாலைத் தலத்தில் விருப்பத்துடன் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய அவர், மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அழியும் தன்மை கொண்ட உடல்களுடன் இணைந்து வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, என்றும் நிலையான இன்பத்தினை அளிக்கும் முக்தி நிலைக்குத் செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

Advertisement