27. நன்று நாள் தொறும் - பாடல் 10
திருவேட்களத்து இறைவனைத் தொழுது நமது வினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
பாடல் 10
சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி ஆங்கு எடுத்தான் முடி பத்து இற
வாட ஊன்றி மலரடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே
விளக்கம்
Advertisement
சேடன் = பெருமை உடையவன். வாங்கிய = எடுத்த. அரக்கன் இராவணனின் தலைகள் பத்தும் இற்று விழுமாறு தனது கால் பெருவிரலை அழுத்திய பெருமான், தனது திருவடியை எடுத்து அரக்கனின் இடர்கள் தீர்த்த செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. சேடன் = பெருமை உடையவன். கயிலாயத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (4.47) அனைத்துப் பாடல்களில், சிவபெருமான் தனது கால் விரலை ஊன்றிய போது, கயிலாய மலையின் கீழ் இடுக்குண்ட அரக்கனின் நிலையினைக் குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமான் தனது கால் விரலினை அழுந்த ஊன்றியிருந்தால் எவருக்கும் இராவணனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்று கூறுகின்றார். அழுந்த ஊன்றிய தனது பாதத்தின் அழுத்தத்தை இறைவன் நிறுத்திய கருணைச் செயல், வாங்கி என்ற சொல் மூலம் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது. கயிலாயப் பதிகத்தின் மூன்றாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கறுத்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையைக் கையால்
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறை நக்கு
நெறித்தொரு விரலால் ஊன்ற நெடுவரை போல் வீழ்ந்தான்
மறித்து இறை ஊன்றினானேன் மறித்து நோக்கில்லை அன்றே
கயிலை மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கோபத்தால் கண்கள் சிவந்து உடல் கறுத்த நிலையில் அரக்கன் இருந்த நிலை இங்கே கூறப்பட்டுள்ளது. மறித்தல் = கீழ் மேலாகச் செய்ய முயலுதல், புரட்ட முயற்சி செய்தல். இறை = சற்று அதிகமாக. இறைவனின் அரக்கனின் வீணான முயற்சி கருதி, சிரித்தவாறே கால் விரலை ஊன்றினான் என்று அப்பர் பிரான் கூறுவதையும் நாம் உணரலாம்.
தலத்து இறைவனின் பெயர் பாசுபதேஸ்வரர். அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிச் செய்த இடமாக கருதப் படுகின்றது. பாசுபதம் அருளிய இறைவன், விஜயனுக்கு பினாகம் எனப்படும், எடுக்க எடுக்க குறையாத அம்பறாத் தூணியையும் அருளிய இடம். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் விழாவாக கொண்டாடப் படுகின்றது. உற்சவ முர்த்திச் சிலைகளுள் ஒன்றான அர்ஜுனன் கையில் பாசுபத ஆயுதம் வைத்திருப்பதை நாம் இன்றும் காணலாம், பாசுபதம் ஏந்திய சிவபிரானின் சிலையும் அர்ஜுனன் சிலையும் – பஞ்சலோக சிலைகள் - குளத்தில் கிடைத்ததாக கூறுவர். வேடுவக் கோலத்தில் வந்து விஜயனுக்கு அருள் புரிந்தமையை உணர்த்தும் வண்ணம் வேடனார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். வேடனார் என்பதற்கு பல விதமான வேடங்களைத் தரித்தவர் என்றும் விளக்கம் கூறுவது வழக்கம். சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் சிவபிரான் உமையாளுடன் வேடுவனாகவும் (நாய்கள் உடன் தொடர), அர்ஜுனனுடன் சண்டை இடுவது போலவும் சிற்பங்கள் காணப்படுகின்றன். இன்னொரு தூணில் அர்ஜுனன் தவம் செய்வது, இடையூறு செய்ய மூகாசுரன் பன்றி வடிவில் வருவது போலவும் சிற்பங்கள் உள்ளன.
இந்த தலத்திற்கு அருகில் உள்ள பல இடங்களும் மகாபாரத நிகழ்ச்சிகளுடன் தொடர்பு உடையதாக கருதப்படுகின்றன. உசுப்போர் எனும் இடம் தான் அர்ஜுனன் தவத்தில் ஆழ்ந்து இருந்தபோது தவத்தைக் குலைக்க வந்த காட்டுப் பன்றி ஒன்றை அர்ஜுனன் துரத்திச் சென்ற இடம் ஆகவும், ஈசன்போர்வேலி எனும் இடம் அர்ஜுனன் சிவபிரானுடன் அவர் வேடுவர் கோலத்தில் வந்த போது போர் செய்த இடமாகவும், வில்லறுத்தான் குட்டை எனும் இடம் சிவபிரான் அர்ஜுனனின் வில்லை முறித்த இடமாகவும், நக்கத்தான்குடி எனும் இடம் அர்ஜுனன் தவம் செய்த இடமாகவும் நம்பப்படுகின்றது.
பொழிப்புரை
பெருமை உடையவனாகிய சிவபெருமான் உறையும் கயிலை மலை தனது வழியில் இடையூறாக உள்ளது என்று கருதிய அரக்கன் இராவணன், தேரிலிருந்து கீழே இறங்கி மலையை நோக்கி ஓடினான். பின்னர் செழுமை வாய்ந்த அந்த கயிலாய மலையினை எடுக்க முயற்சி செய்த போது, அரக்கன் மலையின் கீழு இடுக்குண்டு, அவனது பத்து தலைகளும் அறுந்து விழும் நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்துமாறு தனது கால் பெருவிரலை அழுத்திய சிவபெருமான், பின்னர் இராவணன் சாமகானம் பாடியதும் மகிழ்ந்து, தனது கால் பெருவிரலை எடுத்தான். இவ்வாறு கருணைச் செயல் புரிந்த பெருமான், வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கும் அருள் புரிந்தான். அத்தகைய பெருமான் உறையும் இடமாகிய வேட்களம் தலம் சென்று அவனை வணங்கி, அவனது கருணைக்கு ஆட்படுவீர்களாக.
முடிவுரை
திருவேட்களத்து இறைவனைத் தொழுது நமது வினைகளை தீர்த்துக்கொள்ளலாம். எனவே, வேட்களத்து இறைவனைத் தொழுது பயன் அடையுங்கள் என்ற அறிவுரையுடன் இந்த பதிகத்தினைத் தொடங்கும் அப்பர் பிரான், இந்த இறைவனைத் தொழுததால் தனக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில் கறைமிடற்று அண்ணல் நம்மை காப்பர் என்று சொல்லியும், ஐந்தாவது பாடலில் அவனது சேவடிகளைத் தொழுதால் என்றும் இன்பம் என்று கூறியும், ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் அவனது பெருமைகளை உணர்த்தியும், அவரைத் தொழும் வழியினில் செல்வீர்கள் என்று நான்காவது பாடலிலும் இறைவனை இன்பமாக நினைமின் என்று எட்டாவது பாடலிலும் அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் ஆறாவது பாடலில், நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியமாட்டோம் என்பதால், முந்திய பாடல்களில் கூறிய அறிவுரையைப் பின்பற்றி உடனே வேட்களத்து இறைவனைத் தொழுமாறு நம்மைத் தூண்டுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் இராவணனுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் அப்பர் பிரான், அர்ஜுனனுக்கு அருள் புரிந்ததையும் குறிப்பிட்டு, தல புராணச் செய்தியையும் நமக்கு உணர்த்துகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த வேட்களத்து இறைவனை, நாம் நேரில் சென்று பார்த்து களித்து, அவனது திருவடிகளை வணங்கி அருள் பெறுவோமாக.