29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 4
சிட்சை என்றால் எழுத்து என்று பொருள். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால்,
பாடல் 4
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார்
பரிய தீ வண்ணராகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

விளக்கம்

பரிய = அடர்ந்த. அரியன = உணர்ந்து ஓதுவதற்கு அரிய வேதங்கள். வேதங்களை பிழையின்றியும், பொருளை உணர்ந்தும் சொல்வது அரியது, எனவே வேதங்கள் ஓதும் அந்தணர்களுக்கு உதவும் வகையில் ஆறு அங்கங்களையும் படைத்தவர் பெருமான் ஆவார். ஆறு அங்கங்களாவன, சிட்சை, வியாகரணம், சந்தம், நிருக்தம், சோதிடம் மற்றும் கல்பம் ஆகும். இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஊனமடைந்தாலோ அல்லது ஒன்று இல்லாமல் போனாலோ, ஓதப்படும் வேதம் குறைபாடு உடையதாக மாறுகின்றது. எனவே இந்த ஆறு அங்கங்களும் முறையாக இருக்குமாறு வேதங்கள் ஓதப் படவேண்டும். இந்த ஆறு அங்கங்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

சிட்சை என்றால் எழுத்து என்று பொருள். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால், இதனை வேத புருடனின் மூக்கு என்றும் கூறுவார்கள். மூக்கும் முழியுமாக இருப்பதைத்தானே அழகாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். மூக்குக் குழாய் பழுதடைந்தால், நமது சொற்களின் உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை. ஜலதோஷம் பாதிக்கும்போது நமது குரல் கெட்டுப்போவதை நாம் உணருகின்றோம். ஒவ்வொரு எழுத்தினையும் அதற்கு உரிய முறையில் உச்சரித்தால்தான் வேதம் கேட்பதற்கு அழகாகவும் முறையாகவும் இருக்கும்.

சிட்சைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவது வியாகரணம். வியாகரணம் என்றால் இலக்கணம் என்று பொருள். வழக்கத்தில் உள்ள பல சொற்கள், சற்று மாறுபட்டு பாடல்களில், இலக்கியங்களில் கையாளப்படுவதை நாம் காண்கின்றோம். இலக்கியங்களில் நாம் காணும் பல சொற்கள் காலப்போக்கில் திரிந்து, இன்று நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண்கின்றோம். ஆனால் அத்தகைய இலக்கியச் சொற்கள், கவிதைகளின் இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை, சற்று ஆராய்ந்தால் நாம் உணரலாம். அவ்வாறே வேதத்தில் காணப்படும் பல சொற்கள் இன்றும் நாம் நடைமுறையில் கையாளும் வடமொழிச் சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. அத்தகைய வேதச் சொற்கள், இன்றைய நடைமுறைச் சொற்களிலிருந்து வேறுபட்டாலும் இலக்கண ரீதியில் சரியாக இருப்பதை, நாம் உணரலாம். இவ்வாறு பல சொற்களின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்தும் வியாகரணம், வேதத்தில் அமைந்திருக்கும் சொற்களை பாதுகாக்கின்றன. எனவே வியாகரணத்தை வேதத்தின் மெய்க்காப்பாளன் என்று கூறுவார்கள். மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளதை நாம் தமிழ் மொழியில் காண்பதுபோல், வடமொழியிலும் காணலாம். சொற்களை பயன்படுத்தும் முறையும் வியாகரணத்தில் விளக்கப்படுகின்றது.

வேதங்களில் கூறப்படும் பல மந்திரங்களுக்கு உரிய முனிவர்கள், சந்தம், தேவதை ஆகியவற்றின் பெயர்களை சொன்ன பின்னரே அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. சந்தம் என்பது அந்தந்த மந்திரங்களில் அமைந்துள்ள எழுத்துக்களை குறிப்பதாகும். மந்திரங்களில் உள்ள எழுத்துக்களில், ஒரு எழுத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ சொல்வதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தணர்கள் தினமும் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருப்பதாக வேதம் கூறுகின்றது. சந்தஸ் என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த அங்கம், மூன்றாவது முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது.

அடுத்த அங்கம் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றது. நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். பல பொருள்களைக் கொண்ட சொற்கள், வேதங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த விளக்கத்தினைத் தெரிந்துகொண்டால்தான், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, வேதத்தின் பல சொற்கள் உணர்த்தும் சரியான பொருளை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு சரியான விளக்கங்களை அறிந்துகொள்வதற்கு வியாகரணமும் உதவி செய்கின்றது. எனவே சொற்களின் விளக்கம், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொண்டால்தான், சரியான உச்சரிப்புடன் பல வேத மந்திரங்களை நாம் சொல்ல முடியும்.

அடுத்ததாக சொல்லப்படும் ஜோதிடம் என்ற அங்கம், வேத புருடனின் கண்ணாக கருதப்படுகின்றது. இது கணித ஸ்கந்தம் என்றும் ஹோரா ஸ்கந்தம் இரண்டு பிரிவாக உள்ளது. முதல் பகுதியில் கால தத்துவங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டிய கடமைகள், காரியங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன, மேலும் பல சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகள், வேள்விகள், பூஜைகள் செய்ய வேண்டிய காலங்களை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் விளக்குகின்றன. இரண்டாவது பிரிவான ஹோரை, ஜாதகங்களின் மூலம் நடந்த நிகழ்ச்சிகள், நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய உதவுகின்றன.

கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேள்வி முதலான பல சடங்குகளை, பல விதமான மந்திரங்களை பயன்படுத்தும் முறை இந்த அங்கத்தில் சொல்லப்படுகின்றது. மேற்கூறிய விளக்கங்கள் எவ்வாறு அங்கங்கள், வேதங்களை ஓதுவதிலும், வேதத்தின் பொருளை புரிந்துகொள்வதிலும், வேத மந்திரங்களை பயன்படுத்துவதிலும் எவ்வாறு நமக்கு உதவியாக உள்ளன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனவே வேதங்களை மற்றும் கற்றால் போதாது, வேதங்களின் அங்கங்களையும் முறையாக கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தினை நாம் உணர்கின்றோம். மேலும் இந்த அங்கங்கள் மூலம், உணர்வதற்கு மிகவும் அரியனவாக காணப்படும் வேதங்களை நாம் அறிந்துகொள்ள அங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்கின்றோம். அந்தணர் என்ற சொல்லினை அம்+தணர் என்று பிரித்து உள்ளத்தில் குளிர்ச்சியை உடையவர்கள் என்று பொருள் கொண்டு, அனைத்து ஜீவராசிகளிடையே அன்பு கொண்டவர்கள் என்று விளக்கம் கூறுவார்கள். அத்தகைய பண்பினை வைத்தவர் சிவபெருமான் என்று இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

அந்தணர்கள் உணர்ந்து புரிந்துகொள்வதற்கு அரியதாக காணப்படும் வேதங்களை அறிந்துகொள்ளவும், வேத மந்திரங்களை சரியான முறையில் சொல்லவும் அவற்றை முறையாக பயன்படுத்தவும் அங்கங்களை வைத்தவர் சிவபெருமான்; மேலும் அந்தணர்கள் ஏனைய உயிர்களிடம் அன்புள்ளம் கொள்ளும் பண்பினை வைத்தவர் சிவபெருமான்; பெரிய மதில்களாகத் திகழ்ந்து வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் நெருப்பு எரித்து அழிக்குமாறு செய்தவர் சிவபெருமான்; தனது கழுத்தினில் கரிய நிறம் படியுமாறு நஞ்சினைத் தேக்கியவர் சிவபெருமான். இத்தகைய பண்புகள் கொண்ட சிவபெருமான், அடர்ந்த தீயின் நிறத்தையும், பவளத்தின் நிறத்தையும் கொண்டவராக விளங்கும் பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைத் தலைவராக வீற்றிருக்கின்றார்.

Advertisement