முகப்பு
தினம் ஒரு தேவாரம்

89. ஒருவனாய் உலகேத்த - பாடல் 3

அடியேனால் அறிய

Updated On : 22 பிப்ரவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM


பாடல் 3:

    பாடகம் சேர் மெல்லடி நற்பாவையாளும் நீயும்
            போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
    வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ
           விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
    மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி
           திகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
    ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
          திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே


விளக்கம்:

பாடகம்=பெண்கள் காலில் அணியும் அணிகலன்; பார்த்தன்=அர்ஜுனன்: அர்ஜுனனின் பலத்தினை பரீட்சை செய்வதற்காக பெருமான் வேடுவக் கோலம் தாங்கி, அன்னை பார்வதி தேவி உடன் வர சென்றதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது.  போர்க் கலையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கு முதுகினில் மச்சம் இருந்ததாகவும், அர்ஜுனன் எவரிடமும் தோற்று ஓடாததால் அந்த மச்சத்தினை பார்க்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறுவார்கள். அன்னை பார்வதி தேவிக்கு இந்த மச்சத்தினைக் காண ஆவல் உண்டானதாகவும், அதனால் தான் தன்னை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கச் சென்ற இறைவன், தன்னுடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு சென்றதாகவும், அர்ஜுனனை போரில் தோற்கடித்து அவனது முதுகு மச்சத்தை பார்வதி தேவி காண வைத்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரத்தை அடுத்த வேட்களம் தலத்தில் தான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தலத்து இறைவனின் பெயர் பாசுபத நாதர் என்பதாகும். இங்கு உள்ள அர்ஜுனன் உருவச் சிலையில் முதுகில் ஒரு வடு இருப்பதையும் நாம் காணலாம்.   

மேற்கண்டவாறு அர்ஜுனனின் வீரத்தின் திறமையை காண்பதற்காக வேடனாக பெருமான் சென்ற நிகழ்ச்சி பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. அர்ஜுனனை விற்போரிலும் மற்போரிலும் வென்ற பெருமான் அர்ஜுனனை நாணமடையச் செய்தார் என்று கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.79) பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நிரந்த மொழி=ஒழுங்கு உடையது போன்று சொல்லப்படும் பொய் மொழிகள்; பெயர்கள் பத்துடைய மன்னன்=அர்ஜுனன்; கௌந்தேயன், பார்த்தன், விஜயன், கிரிடீ, சுவேதவாகனன், விபத்சு, பல்குனன், சவ்யசாசி, தனஞ்சயன் என்பன அர்ஜுனனின் மற்ற பெயர்கள் ஆகும்.  

    நேசம் இல் சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
    ஆசை கொள் மனத்தை அடியவர் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
    பாசம் அறுத்து அவனியில் பெயர்கள் பத்துடைய மன்னவனைக்
    கூச வகை கண்டு பின் அவற்கு அருள் நல்க வல கோகரணமே 

Advertisement


பொழிப்புரை:

பாடகம் எனப்படும் அணிகலனை காலினில் அணிந்தவளும் மென்மையான நடையை உடைய பாவையாகிய பார்வதி தேவியுடன் வேடுவக் கோலத்தில் சென்று அர்ஜுனனின் பலத்தை பரிசோதனை செய்யும் பொருட்டு அவனுடன் விற்போர் செய்தவனே, உடலுக்கு இன்றியமையாத உறுப்பாக கண் இருப்பது போன்று விண்ணவர்களுக்கு உறுதுணையாக இருப்பவனே, மாடங்களும் மாளிகைகளும் நிறைந்த தில்லை நகரில் அமைந்துள்ள அழகான அம்பலத்தே என்றும் நிலையாக கூத்தினை இயற்றும் வண்ணம் புகுந்தவனே, பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.