85. கற்றவர்கள் உண்ணும் கனியே - பாடல் 7
அங்கங்களாகவும் திகழ்பவனே
பாடல் 7:
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி
நம்பும் அவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
விளக்கம்:
வம்பு=நறுமணம். அரும்பொருள்=கிடைத்தற்கு அரிய பொருள். மற்றவர்களுக்கு கிடைத்தற்கு அரிய பொருளாக இருந்தாலும், அடியவர்களுக்கு மிகவும் எளிமையானவன் என்பதால், அடியவர்களுக்கு கிட்டுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
நறுமணம் உடைய கொன்றை மலரை சடையில் அணிந்தவனே, வானில் உலவும் நிலவையும் ஒளி வீசும் பாம்பினையும் சடையில் வைத்தவனே, பூங்கொம்பு போன்று நுண்ணிய இடையை உடைய பார்வதி தேவியினைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனே, ஒலிக்கும் தன்மை வாய்ந்த கழல் அணிந்த காலினால் கூற்றுவனை உதைத்தவனே, உன்னை நம்பி வழிபடும் அடியார்களுக்கு மிகவும் எளிதாக கிட்டும் செல்வமே, நான்கு வேதங்களாகவும் அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே, செம்பொன், மாணிக்கமணி மரகதம் முதலான அரிய பொருள் போன்றவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன்.