126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 2
உயர்ந்த திருவடிகளை
பாடல் 2:
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
அலை வரு மதகரி உரித்தவனே
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திரு அடி இணையே
விளக்கம்:
Advertisement
நிலையுறும் இடர்=நிலையாக உயிருடன் இணைந்து நிற்கும் ஆணவமலம்.. ஆணவமலம் என்றும் அழியாது, நெல்லுடன் உமி ஒட்டி இருப்பது போன்று, உயிருடன் ஒட்டி இருக்கும் ஆணவ மலத்தினை அடக்கத் தான் முடியுமே தவிர அதனை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. எனவே தான் ஆணவமலம் வலுவடைந்து நிற்காத வண்ணம் என்று இங்கே சம்பந்தர், நிலையாத வண்ணம் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அலைவரு=வருத்தும் நோக்கத்துடன்; இலையுறு மலர்கள்=இலைகளும் மலர்களும், ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல் அரிவை=இளம் பெண், இங்கே பார்வதி தேவி; வெருவ=அச்சம் கொள்ளும் வண்ணம்; வன்தோல்=வலிமையான தோல்; கரி=ஆண்யானை; மன்னினை=நிலை பெற்று இருத்தல்;
பொழிப்புரை:
உயிர்களாகிய எங்களுடன் இணைபிரியாது பிணைந்துள்ள ஆணவ மலம் வலிமையுடன் எங்களது உடலில் வலிமையுடன் விளங்குவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் பெருமானே உனது உயர்ந்த திருவடிகளை, நாங்கள் உனது திருவடிகளில் பூவும் இலையும் கொண்டு அர்ச்சனை செய்து உன்னை புகழ்ந்து வணங்குகின்றோம். இமயமலையில் அவதரித்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம், உன்னை வருத்தும் நோக்கத்துடன் உன்னை நோக்கி பாய்ந்து வந்த மதம் கொண்ட ஆண்யானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமானே, இமையோர்கள் உமது திருவடிகளைத் தொழும் வண்ணம் பார்வதி தேவியோடு நிலையாக அழகுடன் திகழும் சோலைகள் நிறைந்த புகலி நகரினில் நீ வீற்றிருக்கின்றாய்.