119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 5
அர்ஜுனனுக்கு அருள்
பாடல் 5:
ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர்
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன்
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகாள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே
விளக்கம்:
Advertisement
இந்த பாடலில் உணர்த்தப்படும் தலத்தின் பெயர் தோணிபுரம். ண என்ற கூட்டத்தைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துகள் இந்த பாடலின் அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் உணரலாம். இந்த பாடலில் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த வரலாறும் தோணிபுரம் என்ற பெயர் வந்த காரணமும் சொல்லப் படுகின்றது.
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே
ஆணியல்பு=ஆணின் இயல்பு; வீரம் ஆணின் இயல்பு; வன=காடு; வாண=வாழும்; இயல்= தன்மை; பேணி=ஏற்றுக்கொண்டு; தூணி=அம்பறாத்தூணி; வேணு=மூங்கிலால் செய்யப்பட்ட; சிலை=வில்; பாணி=கை, பாணி அமர்=மல்யுத்தம்; அர்ஜுனன் கையில் இருந்த வில்லின் நாணும் அறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி, அர்ஜுனன் மல்யுத்தம் புரிய நேரிட்ட செய்தி இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பிரமாணி=கடவுள் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவன்; அருள் மாணு=அருள் புரிந்த; பாணி=தண்ணீர்; இங்கே பிரளய காலத்து வெள்ளம்; ஆள=உலகினை முற்றிலும் மூழ்கச்செய்ய; மிக ஆணின்=அதனினும் மிகுந்த ஆண்மைத் தன்மை பொருந்தி, அதனினும் வலிமை அதிகமாக உடைய; மலி=சிறந்த; தோணி நிகர்=வெள்ளத்தைக் கடக்கும் தோணி போன்று; நமது துயரங்களிலிருந்து விலகிச் செல்ல உதவும் ஏணி போன்றும், பிறவிக் கடலினைக் கடந்து செல்ல உதவும் தோணி போன்றும் செயல்படும் தலம் சீர்காழி என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏணுமுறை என்று பாட பேதமாக சொல்லப்பட்டு, காலாந்தரம், ஊழி நியதி என்று பொருள் கொண்டு, ஊழி நியதியின் வண்ணம் உலகெங்கும் பிரளய வெள்ளம் பரவிய நிலை குறிப்பைப் படுகின்றது என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.
அர்ஜுனனின் வீரத்தின் தன்மை காணும் பொருட்டு அவனுடன் பெருமான் போர் புரிந்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பாசுபத அத்திரம் வேண்டி தவம் புரியும் அர்ஜுனனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்ட பெருமான், அவனது தவத்தின் தன்மையைத் தானே கருத வேண்டும். எதற்காக அவனது வீரத்த்தின் தன்மையை காண்பதற்கு விருப்பம் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுகின்றது அல்லவா. இதற்கு விடை அளிக்கும் முகமாக இருக்கும் செவிவழிச் செய்தி ஒன்றினை நாம் இங்கே காண்போம். அர்ஜுனனின் முதுகினில் மச்சம் இருந்ததாக கூறுவார்கள். போரில் எப்போதும் வெற்றியினை அடையும் அர்ஜுனன், தோற்று புறமுதுகிட்டு ஓடாததால். அவனது முதுகினில் உள்ள மச்சத்த்தை அவனது குடும்பத்தினர் தவிர வேறு எவரும் பார்த்ததில்லை எனவும், அந்த மச்சத்தை காண்பதற்கு பார்வதி தேவி விருப்பம் உற்றதாகவும், அதனால் தான் அவனுக்கு அருள் புரிய வந்த பெருமான், தேவியுடன் வேடனாக வந்து அர்ஜுனனுடன் வம்பு செய்து அவனை சண்டைக்கு இழுத்ததாகவும் கூறுவார்கள். திருவேட்களம் தலத்தில் உள்ள அர்ஜுனனின் உருவச்சிலையில் முதுகினில் மச்சம் போன்ற அமைப்பு உள்ளதை நாம் இன்றும் காணலாம். ஆணியல்பு காண என்ற தொடருக்கு, சிறந்த வீரனாக விளங்கிய அர்ஜுனனையும் வெல்லும் ஆற்றல் கொண்டவன் தான் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், தனது வீரத்தினை உலகறியச் செய்யும் வண்ணம் வேடனின் உருவத்தை தரித்து பெருமான் வந்தார் என்றும் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமும் பொருத்தமானதே.
பொழிப்புரை:
அர்ஜுனனின் வீரத்தை நேரில் காண்பதற்கு விரும்பிய பார்வதி தேவியுடன், காட்டினில் வாழும் வேடர்களின் வேடுவக் கோலம் தரித்து அர்ஜூனன் தவம் புரிந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்த பெருமான், தானே வலிய அர்ஜுனனை சண்டைக்கு இழுத்தார். பின்னர் அர்ஜுனன், மழை போன்று இடைவிடாது எய்த அம்புகள் தன்னை வந்து அடையாத வண்ணமும். அத்தகைய அம்புகளைத் தாங்கியிருந்த அம்பறாத்தூணி அறுத்து வீழும் வண்ணமும் போர் செய்த பெருமான், அர்ஜுனனின் கையில் இருந்த வில்லின் நாணையும் அறுத்தெறிந்தார்; மேலும் மூங்கிலை வளைத்து செய்யப்பட்ட அர்ஜுனனின் வில்லையும் ஒடித்தார். தனது நிலை கண்டு நாணமடைந்த அர்ஜுனன், தனது கையில் வில் ஏதும் இல்லாமையால் வேறு வழியின்றி, தன்னெதிரே நின்ற வேடுவனுடன் தனது கைகளால் மல்யுத்தம் செய்தான். இவ்வாறு தன்னுடன் போர் புரிந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்து அருள் புரிந்த பெருமைக்கு உரிய பெருமான், வேதங்களால் கடவுள் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவன் என்று சுட்டிக் காட்டப்படுகின்றான். இத்தகைய பெருமான் உறையும் இடமாகிய சீர்காழி தலம், பிரளய காலத்து வெள்ளம் எங்கும் பரவி உலகு அனைத்தையும் மூழ்கடித்த போதிலும், மூழ்காமல் ஏணி போன்று உயர்ந்து நின்றும் தோணி போன்று பிரளய வெள்ளத்தைக் கடந்து நின்ற தோணி போன்று இருந்தமையால் தோணிபுரம் என்று அழைக்கப்பட்டது.