யுத்தபூமி

அத்தியாயம் 21 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 14

இடைக்கழியின் மேல் பகுதியானது, நான்காவது பலகைக்கல் கொண்டு கூரைபோல வைக்கப்படும்போது அது முழுமையான ஒரு மூடிய அமைப்பைப் பெறுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் வாயில் அமைப்பு குறித்தும், அவை அமைக்கப்பட்ட திசைகள் கொண்டும் பலவகையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை, ஆவி வழிபாட்டுடனும், சூரிய வழிபாட்டுடனும் தொடர்புபடுத்துவது பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

த. பார்த்திபன்

கூட்டு ஈமச் சின்னங்கள்

“ஒற்றை முதன்மை அலகுபெற்ற கூட்டு ஈமச்சின்ன வகைகளில்” குழி, தாழி, பேழை ஆகிய மூன்று வகைகள் முதன்மை அலகாக உள்ள கூட்டு ஈமச்சின்னங்கள் குறித்து முந்தைய அத்தியாயத்தில் விளக்கப்பட்டது. அவற்றை முழுமையாக அறிந்துகொள்ள இங்கு கூடுதல் வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

(தாழி உருளைக் கல்வட்டக் கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

  1. தாழி

  2. உருளைக் கல்வட்டம்

(தாழி பலகைக் கல்வட்டக் கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

  1. தாழி

  2. பலகைக் கல்வட்டம்

(விலங்கு முகப் பேழை உருளைக் கல்வட்ட கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

  1. விலங்கு முகப் பேழை

  2. உருளைக் கல்வட்டம்

(விலங்கு முகப் பேழை பலகைக் கல்வட்டக் கூட்டு ஈமச்சின்னம்)

உறுப்புகள்

  1. விலங்கு முகப் பேழை

  2. பலகைக் கல்வட்டம்

இனி இங்கு நான்காவது முதன்மைச் சின்னமாகிய கல்பதுக்கை ஒரு முதன்மை அலகாக இருக்க, கூட்டு வடிவமாகக் கல்வட்டம் முதலான அலங்கார அரணுறுப்புகள் இடம்பெறும் நிலை குறித்துக் காண்போம்.

1.4. கல்பதுக்கை கூட்டு ஈமச்சின்னம்

இவ்வகையில் முதன்மைச் சின்னமாக “கல்பதுக்கை” இடம்பெறுகிறது. தாழிக்கு மேல் அடையாளமாக கல்மூடி வைப்பதுபோல், கல்பதுக்கைக்கு மேல் நிலமட்டத்தில் அடையாள உறுப்பாக கல்மூடி வைக்கப்பட சின்னத்தை அறியமுடியவில்லை. மண் அரிப்பு அல்லது பிற காரணங்களால் கல்பதுக்கையின் கல்லறையின் மீது வைக்கப்படும் மூடுகல் வெளியே தெரிவதுண்டு. இது கல்லறையின் ஒரு உறுப்பே அன்றி, கல்லறைக்கு மேல் இடம்பெறும் மற்றொரு தனி உறுப்பல்ல என்பதை நினைவில் கொள்வோம். ஆனால், மேல் அலங்கார அல்லது அரணுறுப்பாக கல்சுவர் அல்லது உருளைக் கல்நிரவல், கற்பலகை வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு என இடம்பெற்ற சின்னங்களைக் காணமுடிகிறது.

இந்தவகையில், கல்பதுக்கையும் உருளைக் கல்வட்டமும் சேர்ந்து “கல்பதுக்கை உருளைக் கல்வட்டம்”, கல்பதுக்கையும் பலகைக் கல்வட்டமும் சேர்ந்து “கல்பதுக்கை பலகைக் கல்வட்டம்”, கல்பதுக்கையும் மண்குவையும் சேர்ந்து “கல்பதுக்கை மண்குவை”, கல்பதுக்கையும் கற்குவையும் சேர்ந்து “கல்பதுக்கை கற்குவை”, கல்பதுக்கையும் கற்குவைத் திரலும் இணைந்து “கல்பதுக்கை கற்குவைத் திரல்”, கல்பதுக்கையும் பரல் உயர் அடுக்கும் சேர்ந்து “கல்பதுக்கை பரல் உயர் அடுக்கு” என பெருங் கற்படைச் சின்னங்கள் உருவாகியுள்ளன.

அகழாய்வுகள் மிகக் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், கண்புலத்துக்குக் கல்பதுக்கை கூட்டு ஈமச்சின்னங்கள் புலப்படுவதில்லை என்பதாலும், இவ்வகையினத்தின் அனைத்து வகைகளுக்கும் உதாரணம் காட்டமுடியாது உள்ளது. மேலும், நமது ஆய்வாளர்களால் இவற்றின் எல்லா வகைகளும் கல்வட்டங்கள் அல்லது மண்குவை என்ற பொதுப் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பிரித்தறியும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுவதை உணரமுடிகிறது.

இதன் காரணமாக, அகழாய்வுகளின் முழுமையான அறிக்கை விவரங்களில் இருந்தே கல்பதுக்கை கூட்டு ஈமச்சின்னங்களின் வகைகளை இனம் பிரித்து அறியவேண்டியவர்களாக இருக்கிறோம். சில சிதைந்த அல்லது சிதைக்கப்பெற்ற சின்னங்களும் இவ்வறிதலுக்குப் பெருமளவில் உதவுகின்றன. இவ்வகையினத்தின் பெரும்பான்மையானவற்றை தென்னிந்தியாவின் மலையும் மலை சார்ந்த நிலங்களில் அதிக அளவில் காணமுடிகிறது.

(கல்பதுக்கை உருளைக் கல்வட்டக் கூட்டுச்சின்னம்)

உறுப்புகள்

  1. கல்லறை

  2. இடுதுளை

  3. கல்நிரவல் - அரண் அமைப்பு

  4. உருளைக் கல்வட்டம்

1.5. கல்திட்டை கூட்டு ஈமச்சின்னம்

இவ்வகையில் முதன்மைச் சின்னமாக “கல்திட்டை” இடம்பெறுகிறது. கல்திட்டைகள் நிலத்தின் மேல்மட்டத்தில் அமைக்கப்பெறுவதால், இவற்றுக்கு வேறு அடையாளமாகச் செயல்படும் உறுப்புகள் தேவைப்படுவதில்லை. அதே சமயத்தில், அலங்கார அல்லது அரணுறுப்பாக உருளைக் கல்வட்டம், பலகைக் கல்வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு என இடம்பெற்ற சின்னங்களைக் காணமுடிகிறது.

இந்த வகையில், கல்திட்டையும் உருளைக் கல்வட்டமும் சேர்ந்து “கல்திட்டை உருளைக் கல்வட்டம்”, கல்திட்டையும் பலகைக் கல்வட்டமும் சேர்ந்து கல்பதுக்கை பலகைக் கல்வட்டம்”, கல்திட்டையும் மண்குவையும் சேர்ந்து “கல்திட்டை மண்குவை”, கல்திட்டையும் கற்குவையும் சேர்ந்து “கல்திட்டை கற்குவை”, கல்திட்டையும் கற்குவைத் திரலும் இணைந்து “கல்திட்டை கற்குவைத் திரல்”, கல்திட்டையும் பரல் உயர் அடுக்கும் சேர்ந்து “கல்திட்டை பரல் உயர் அடுக்கு” என பெருங் கற்படைச் சின்னங்கள் உருவாகியுள்ளன.

காட்சிப்புலத்தில், “கல்திட்டை உருளைக் கல்வட்டமும்”, “கல்திட்டை பலகைக் கல்வட்டமும்” எளிதில் அடையாளம் காணமுடிபவையாக உள்ளன. முன்னர் குறிப்பிட்டது போலவே, இவ்வகைச் சின்னங்களில் அகழாய்வுகள் மிகக் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், கண்புலத்துக்கு இக்கூட்டு வடிவத்தின் எல்லா வகையினங்களும் புலப்படுவதில்லை என்பதால், அனைத்து வகைகளுக்கும் உதாரணம் காட்டமுடியாது உள்ளது.

மேலும், நமது ஆய்வாளர்களால் இவற்றின் எல்லா வகைகளும் கல்வட்டங்கள் அல்லது மண்குவை என்ற பொதுப் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பிரித்தறியும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுவதை உணரமுடிகிறது. இதன் காரணமாக, அகழாய்வுகளின் முழுமையான அறிக்கை விவரங்களில் இருந்தே கல்திட்டை கூட்டு ஈமச்சின்னங்களின் வகைகளை இனம் பிரித்து அறியவேண்டியவர்களாக இருக்கிறோம். அல்லது முன்னர் குறிப்பிட்டபடி சில சிதைந்த அல்லது சிதைக்கப்பெற்ற சின்னங்களும் இவ்வறிதலுக்குப் பெருமளவில் உதவுகின்றன.

6. கல்பதுக்கை போன்ற கல்திட்டை கூட்டு ஈமச்சின்னம்

இவ்வகையில் முதன்மைச் சின்னமாக “கல்பதுக்கை போன்ற கல்திட்டை” இடம்பெறுகிறது. கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஈமச்சின்னங்கள் பாதிஅளவு நிலத்தின் மேல்மட்டத்தில் அமைக்கப்பெறுவதால், இவற்றுக்கும் கல்திட்டைகள் போன்றே வேறு அடையாளமாகச் செயல்படும் உறுப்புகள் தேவைப்படுவதில்லை. கல்திட்டை கூட்டு ஈமச்சின்னங்களின் குணங்கள் இந்த வகைக்கும் முற்றாகப் பொருந்துகின்றன. அதாவது, அலங்கார அல்லது அரணுறுப்பாக உருளைக் கல்வட்டம், பலகைக் கல்வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு போன்ற வடிவங்களுடன் கல்பதுக்கை போன்ற கல்திட்டை சேர்ந்த கூட்டுச்சின்னங்களைக் காணமுடிகிறது.

இந்த வகையில், கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் உருளைக் கல்வட்டமும் சேர்ந்து “கல்பதுக்கை போன்ற கல்திட்டை உருளைக் கல்வட்டம்”, கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் பலகைக் கல்வட்டமும் சேர்ந்து கல்பதுக்கை போன்ற கல்பதுக்கை பலகைக் கல்வட்டம்”, கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் மண்குவையும் சேர்ந்து “கல்பதுக்கை போன்ற கல்திட்டை மண்குவை”, கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் கற்குவையும் சேர்ந்து “கல்பதுக்கை போன்ற கல்திட்டை கற்குவை”, கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் கற்குவைத் திரலும் இணைந்து “கல்பதுக்கை போன்ற கல்திட்டை கற்குவைத் திரல்”, கல்பதுக்கை போன்ற கல்திட்டையும் பரல் உயர் அடுக்கும் சேர்ந்து “கல்பதுக்கை போன்ற கல்திட்டை பரல் உயர் அடுக்கு” என பெருங் கற்படைச் சின்னங்கள் உருவாகியுள்ளன.

காட்சிப்புலத்தில் “கல்பதுக்கை போன்ற கல்திட்டை உருளைக் கல்வட்டமும்”, “கல்பதுக்கை போன்ற கல்திட்டை பலகைக் கல்வட்டமும்” எளிதில் அடையாளம் காணமுடிபவையாக உள்ளன. முன்னர் குறிப்பிட்டது போலவே, இவ்வகைச் சின்னங்களில் அகழாய்வுகள் மிகக் குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதால், கண்புலத்துக்கு இக்கூட்டு வடிவத்தின் எல்லா வகையினங்களும் புலப்படுவதில்லை என்பதால், அனைத்து வகைகளுக்கும் உதாரணம் காட்டமுடியாது உள்ளது. மேலும், நமது ஆய்வாளர்களால் இவற்றின் எல்லா வகைகளும் கல்வட்டங்கள் அல்லது மண்குவை என்ற பொதுப் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பிரித்தறியும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுவதை உணரமுடிகிறது. இதன் காரணமாக, அகழாய்வுகளின் முழுமையான அறிக்கை விவரங்களில் இருந்தே கல்பதுக்கை போன்ற கல்திட்டை கூட்டு ஈமச்சின்னங்களின் வகைகளை இனம் பிரித்து அறியவேண்டியவர்களாக இருக்கிறோம். போலவே சிதைந்த அல்லது சிதைக்கப்பெற்ற சின்னங்களில் இருந்து அறிய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவ்வாறு முதன்மைச் சின்னங்களில் ஒன்றை மையமாகக் கொண்டு அரண் மற்றும் அலங்கார உறுப்புக்கள் கொண்டு பல வகை கூட்டு வடிவ ஈமச்சின்னங்களை பெருங் கற்படை மக்கள் உருவாக்கியிருப்பதை அறியமுடிகிறது.

அரண் உறுப்பு

கல்பதுகையில் அரண் உறுப்பு என்பது கல்லறைகளின் பலகைக் கற்கள் நேராக நிற்கவும், சரியாமலும் இருக்க அமைக்கப்படுவதாகும். இவ்வமைப்பு இரு வகையாக அமைக்கப்படுகிறது. அவை - 1. சுவர் அமைப்பு, 2. நிரவல் அமைப்பு. சுவர் வடிவுக்குப் பெரும்பான்மையாக உருளைக்கற்களும், செவ்வக வடிவக் கற்துண்டுகளும் மற்றும் முகமற்ற கரடுமுரடான பட்டைக் கற்களும் பயன்படுத்தப்பட்ட நிலையைக் காணமுடிகிறது. குறிப்பாக, கல்பதுக்கை மற்றும் கல்பதுக்கை போன்ற கல்திட்டைச் சின்னங்களில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கல்பதுக்கை போன்ற கல்திட்டைச் சின்னங்களில் நிலத்துக்குக்கீழ் தரைமட்டம் வரை சுவர் அமைப்பானது எழுப்பப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. மேலும், இச்சுவர் முதன்மைச் சின்னத்துக்குத் தக்கவாறு வட்டமாகவோ நீள்வட்டமாகவோ அல்லது முட்டை வடிவிலே அமைக்கப்படுகிறது. சுவர் வடிவம் அல்லாதபோது பல அளவுகளுடைய உருளைக் கற்கள் நிரவல் தன்மையுடன் முதன்மைச் சின்னத்தைச் சுற்றி நெருக்கமாக அமைக்கப்பட்ட நிலையைக் காண்கிறோம்.

சுவர் அமைப்பை நிலமட்டத்துக்கும் மேலாக கல்திட்டைகளிலும், கல்பதுக்கை போன்ற கல்திட்டைகளிலும் காணமுடிகிறது. இவ்வாறு நிலமட்டத்துக்கு மேல் அமைக்கும்போது செவ்வக வடிவ துண்டுக் கற்களையே பயன்படுத்தப்பட்டுள்ளதை காண்கிறோம்.               

வாயில் மற்றும் நடை என்ற இடைக்கழி உறுப்புகள்

கல்பதுக்கையிலும் கல்திட்டைகளிலும் கல்லறைப் பகுதியுடன் இணைத்து அமைக்கப்படும் வாயில் அமைப்பும், நடை என்ற இடைக்கழி உறுப்புகள் கல்லறையின் வடிவமைப்புகளுக்குச் சிறப்பு சேர்ப்பதுடன், கல்லறையின் முகப்பு திசையை அறியவும் உதவுகின்றன. பொதுவில், இடுதுளை உள்ள கற்பலகைக்கு முன்பாகவே இந்த இடைக்கழி மற்றும் வாயில் அமைக்கப்படுகிறது. பொதுவாக, இடைக்கழி கல்லறையின் பலகைக் கல்லைவிட உயரம் குறைந்த மூன்று பலகைக் கற்கள் கொண்டு அமைக்கப்படுகின்றன. அல்லது இடுதுளையின் மேல் மட்டம்வரை அமைக்கப்படுகின்றன. இவற்றில் இரு பலைகைக் கற்கள், கல்லறை இடுதுளையின் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. மூன்றாவது பலகைக் கல், இவ்விரு பலகைக் கற்களுக்கு முன்புறமாக, இரண்டுக்கும் குறுக்காக நிறுத்தப்படுகிறது. இவ்வாறு, இடைக்கழியின் முன் நிறுத்தப்படும் பலகைக் கல்லிலும் இடுதுளை அரிதாக இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இடுதுளை மூடுகல் உறுப்பு

கல்லறை மற்றும் இடைக்கழியின் இடுதுளைகளை மூடும்படி ஒரு சிறு செவ்வக கல் வைக்கப்பட்ட அமைப்பையும் சில கல்பதுக்கைகளில் காண முடிகிறது. இதுவே, இடுதுளை மூடுகல் என குறிக்கப்படுகிறது.

மேல்மூடுகல் கொண்ட வாயில், இடை என்ற இடைக்கழி அமைப்பு

இடைக்கழியின் மேல் பகுதியானது, நான்காவது பலகைக்கல் கொண்டு கூரைபோல வைக்கப்படும்போது அது முழுமையான ஒரு மூடிய அமைப்பைப் பெறுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் வாயில் அமைப்பு குறித்தும், அவை அமைக்கப்பட்ட திசைகள் கொண்டும் பலவகையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை, ஆவி வழிபாட்டுடனும், சூரிய வழிபாட்டுடனும் தொடர்புபடுத்துவது பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

இடுதுளைப் போலவே, வாயில் இடைக்கழி உறுப்புகள் நான்கு திசைகளை நோக்கியவாறு அமைக்கப்பட்டவை, அகழாய்வுகளில் அறியப்பட்டுள்ளன. கிழக்கு திசையில் அமைக்கப்பெற்றவை தவிர, பிற திசைகளில் அமைக்கப்பெற்றவை காலத்தால் மூத்தவை என்றும், கிழக்கு திசை நோக்கி அமைக்கப்பெற்றவை ஈமச் சிந்தனைகள் வளர்ந்து நெறிமுறைகள் உருவாக்கப்பட்ட பிற்காலத்தைச் சார்ந்தவை என்றும் கருத்துகள் முன்வைக்கப் பெற்றிருக்கின்றன. இவற்றை அனுமானமான கருத்துகள் என்றுதான் கணக்கில் கொள்ள முடியும். ஏனெனில், அறிவியல் முறைப்படி அறியப்பட்ட காலக்கணிப்புகள், இக்கருத்துகளுடன் பொருந்துபவையாக இல்லை.

அரணுறுப்புகளான கல்சுவர் மற்றும் கல்நிரவல் அமைப்பு நடை என்ற இடைக்கழி உறுப்புக்கும் அமைக்கப்பட்டதை சில கல்பதுக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் சில, இரண்டு அரணுறுப்புகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.        

(கல்பதுக்கை கல்வட்டம் வாயில் இடைக்கழி கூடிய கூட்டுச்சின்னம்)

உறுப்புகள்

  1. கல்லறை

  2. இடைக்கழி என்ற நடை

  3. கல்சுவர் - அரணுறுப்புக் கற்கள்

  4. உருளைக் கல்வட்டம்

(கல்பதுக்கை பலகைக் கல்வட்டம் வாயில் இடைக்கழி கூடிய கூட்டுச்சின்னம்)

உறுப்புகள்

  1. கல்லறை

  2. இடைக்கழி என்ற நடை

  3. அரணுறுப்புக் கற்கள்

  4. பலகைக் கல்வட்டம்

(கல்பதுக்கை உருளைக் கல்வட்டம் வாயில் இடைக்கழி கூடிய கூட்டுச்சின்னம் - மற்றொரு வடிவம்)

உறுப்புகள்

  1. கல்லறை

  2. இடைக்கழி என்ற நடை

  3. உருளைக் கல்வட்டம்

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT