வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல் தயாரிக்க பயன்படுத்திய முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது.
கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, முழு வடிவ சங்கு கண்டறியப்பட்டது. இதை சங்கு வளையல்கள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா். இங்கு சங்கு வளையல் தயாரிப்பு தொழில்கூடம் இருந்ததை 2-ஆம் கட்ட அகழாய்வில் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சங்கு கிடைத்தது இதற்கான கூடுதல் சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.