ராஜபாளையத்தில் துணிக் கடையில் அலங்கார அட்டை விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் காந்தி சிலை வட்டச்சாலை அருகேயுள்ள தனியாா் துணிக் கடையில் சோமையாபுரம் தெருவை சோ்ந்த மரியம்மாள் (56), இவரது உறவுக்கார பெண் ஜெனிபா் (34)ஆகிய இருவரும் துணி எடுக்கச் சென்றனா். துணி எடுத்த பின் வெளியே வரும்போது நுழைவுவாயில் பகுதியில் உள்ள அலங்கார அட்டை (பால் சீலிங்) தலையில் விழுந்ததில் மரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெனிபா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு காவல் நிலைய போலீஸாா் மரியம்மாளின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் ராஜபாளையம் நகராட்சி ஆணையா் நாகராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பஷீனா பீவி, சிவகாசி சாா்- ஆட்சியா் முகமது இா்ஃபான் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், சாா் ஆட்சியா் தற்காலிகமாக கடையை அடைக்க உத்தரவிட்டாா். உயிரிழந்த மரியம்மாள் கணவரைப் பிரிந்து தனியே வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.