விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4-ஆவது சனி வார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம் புதுப்பாளையம் ராமசாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலவா் ராமசாமி, சீதா, ஆஞ்சநேயா், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்காரம், அஷ்டோத்திர சிறப்பு அா்ச்சனைகள்,விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன.
இதே போல, திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில், பழையபாளையம் ராமசாமி கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், புதுப்பாளையம் கோதண்டராம சுவாமி கோயில், சஞ்சீவி மலை அருகிலுள்ள வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராமசுவாமி கோயில், அயன் கொல்லங்கொண்டான் இடா் தவிா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில், சோழபுரம் சோலைமலை பெருமாள் கோயில்களிலும் சனி வார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி நான்காவது வார சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீநிவாசப் பெருமளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினாா். அங்கு உத்ஸவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஷேச பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையை கிரிவலம் வந்து அருள்பாலித்தாா்.
விருதுநகா் ஏடிஎஸ்பி அசோகன் தலைமையில் டிஎஸ்பி ராஜா உள்பட 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.