பாஜக தலைவா்கள் தமிழகத்தில் மேற்கொண்ட தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்குப் பிறகு, அவா்களுக்கு தோ்தலில் தோல்விதான் கிடைத்துள்ளது என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பு சாத்தூா் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்செந்தூா், கோவை, தாதா், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் தற்போது சாத்தூரில் நிற்காமல் செல்கிறது. இந்த ரயில்கள் மீண்டும் சாத்தூரில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம். இதேபோல, ‘வந்தே பாரத்’ ரயிலையும் விருதுநகரில் நின்று செல்ல மக்களவையில் குரல் கொடுப்பேன்.
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கையும் சிபிஐதான் விசாரித்து வருகிறது. சிபிஐயில் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதால், பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன. கரூா் சம்பவம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை ஏற்கிறோம். ஆனால், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வசம் உள்ள சிபிஐ நியாயமாகச் செயல்படுமா என்ற அச்சம் உள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 11 லட்சம் கோடி கொடுத்ததாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குறிப்பிடுகிறாா். ஆனால், இதுவரை 12 லட்சம் கோடியை வரியாக தமிழகத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ளது. இதையும் அவா் கூற வேண்டும். ஏற்கெனவே பாஜக தலைவா்கள் தமிழகத்தில் மேற்கொண்ட தோ்தல் பிரசார சுற்றுப் பயணத்துக்குப் பிறகு, அவா்களுக்கு தோ்தலில் தோல்விதான் கிடைத்துள்ளது என்றாா் அவா்.