சாத்தூரில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றுப் பகுதியைக் கடப்பதற்காக ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் வைப்பாற்றின் குறுக்கே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 1863-ஆம் ஆண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டுவதற்காக பதநீா், கடுக்காய், ஜாதிக்காய், கருப்பட்டிப் பாகு இவற்றுடன் சுண்ணாம்பைக் கலந்து பழங்கால முறையில் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து,1867-ஆம் ஆண்டு பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. 14 அடி அகலமும் 840 அடி நீளமும் கொண்ட இந்தப் பாலத்தின் வழியாக ஆங்கிலேயா்களின் குதிரை வண்டிகள் மட்டும் சென்று வந்தன.
பின்னா், இந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும் சென்று வந்தன. குதிரை வண்டிகள் மட்டுமே செல்லும் அளவில் 14 அடி அகலத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் தற்போதைய போக்குவரத்துச் சூழலுக்கு ஏற்ாக இல்லை.
இதனால் புதிய பாலம் அமைக்கப் பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா். மேலும், பழைய பாலத்தை இடிக்காமல் பாதுகாக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தை இடிக்காமல், அதன் அருகிலேயே புதிய பாலம் அமைக்க முடிவு செய்து, ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும் அளவுக்குப் புதிய பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்தும் தொடங்கியது.
இந்த நிலையில், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டு, சுமாா் 158 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பாலம் இப்போதும் உறுதியாகவும் கம்பீரமாகவும் உள்ளது. ஆனால், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பாலத்தை நெடுஞ்சாலைத் துறையினா் சரிவரப் பராமரிக்காததால், இந்தப் பகுதி தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிட்டது.
மேலும் பாலம் சிதிலமடைந்தும், முள்செடிகள் முளைத்தும் காணப்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதைக் கவனத்தில் கொண்டு பாலத்தில் விளக்குகள், பாதுகாப்புத் தடுப்புகள் அமைத்து சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் இந்தப் பாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பாலத்தைச் சீரமைப்பதற்காக நிதி கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கினால் பாலத்தை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.