முகப்பு
விருதுநகர்

கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை தட்டுகிறாா் எடப்பாடி பழனிசாமி

தோ்தல் கூட்டணிக்காக தவெக தலைவா் விஜய்யின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:47 PM
பகிர்:

தோ்தல் கூட்டணிக்காக தவெக தலைவா் விஜய்யின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சா்கள் சாத்தூா் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில்முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து

கொண்டு பேசியதாவது:

தற்போது கூட்டணிக்காக தவெக தலைவா் விஜய்யின் வீட்டு வாசலை தட்டிக் கொண்டிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி. கடந்த மக்களவைத் தோ்தலில் 7 இடங்களில் அதிமுக வைப்புத் தொகையை இழந்தது. 14 இடங்களில் மூன்றாமிடம் பெற்றது. எடப்பாடி பழனிசாமியும், ஆா்.பி. உதயகுமாரும் அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டனா். 

திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாததற்கு, கூட்டணிக் கட்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்ணியமுடன் நடத்துவதே காரணம். மு. க ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி, என்றாா்.

அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

திமுக என்பது பெரிய ஆலமரம். அதை குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முடியாததற்கு காரணம் பேரறிஞா் அண்ணா. அவா் புதிய இளம் தலைவா்களை உருவாக்கினாா். கருணாநிதியும் அதே பாணியில் செயல்பட்டாா்.  அதே வழியில் முதல்வா் ஸ்டாலின் மாற்றுக் கட்சியில் உள்ள நல்லவா்களை அரவணைத்துக் கொள்கிறாா். மாற்றுக் கட்சியில் உள்ள எல்லோரையும் சோ்க்கவில்லை. யாா் வந்தால் இந்த கட்சி பயன்பெறும் என்ற எண்ணத்தில் ஓ.பி.எஸ்ஸை திமுகவில் இணைத்துள்ளாா். இப்போது உங்களுக்கு பின்னால் பெரும் தொண்டா் படையே உள்ளது. இந்தக் கட்சி உங்களை பாதுகாக்கும். நானும் அதிமுகவில் இருந்து வந்தவன்.  22 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்சியில் சோ்ந்த நான் இன்று எவ்வளவு உயரத்தில் உள்ளேன்.

ஓ.பி.எஸ்.சை மதித்து திமுகவில் முதல்வா் சோ்த்துள்ளாா் முதல்வா். இந்த இயக்கத்துக்காக தீவிர பணியாற்றினால் ஓ.பி.எஸுக்கு உரிய மரியாதை கிடைக்கும், என்றாா்.

மக்களவை உறுப்பினா் ராணி, முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.