வங்கி ஊழியர் போல நடித்து 'பர்சனல் லோன்' எனும் தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி கும்பல், பணத்தைத் திருடும் வேலைகளில் ஈடுபடுகிறது.
பொதுவாக பணப்பரிமாற்றத்தைப் பொருத்து வங்கிகள் தானாகவே தனிநபர் கடன்களை வழங்குவதாகக் கூறுகின்றன. அதிலும் ஏற்கெனவே கடன் வாங்கி சரியாக தவணை செலுத்துபவர்கள், வங்கிக்கணக்கில் அதிக தொகை வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு பெற்றவர்களுக்கு இதுதொடர்பாக போன் அழைப்புகள் அதிகம் வருவதுண்டு.
இந்நிலையில் மோசடி கும்பல் இந்த சூழலைப் பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றன.
வங்கியில் இருந்து அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகக் கூறும் மோசடி கும்பல், 'நீங்கள் தனிநபர் கடனுக்கு தகுதியானவராக இருக்கிறீர்கள், குறைந்த வட்டியில் கடன் பெறலாம்' என்று ஆசை வார்த்தை கூறி அந்த கடனைப் பெறுவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியைக் கேட்கின்றனர்.
மக்களும் அதை நம்பி ஓடிபியைக் கூறும்பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
அதாவது ஓடிபி கூறியவுடன் அவர்களது மொபைல், மோசடி கும்பலின் கட்டுப்பாட்டுக்குச் சென்று விடுகிறது.
இதுமட்டுமின்றி எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி அதில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யச் சொல்வது, இ-மெயில் மூலமாக லிங்க்குகளை அனுப்புவது என மோசடிகள் நடைபெறுகின்றன.
பாதுகாப்பு வழிகள்
நீங்கள் தனிநபர் கடன் பெற விரும்பினால் வங்கிகளை நேரடியாக ஒருமுறை தொடர்புகொண்டு பெறுவது நல்லது.
தனிநபர் கடனுக்கு எந்த வங்கிகளும் உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்காது. எனவே அதுபோன்று யாரேனும் கட்டணம் கோரினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தெரியாத, சந்தேக எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். குறிப்பாக ஓடிபியை தெரிவிக்க வேண்டாம். அவர்கள் அனுப்பும் லிங்க்குகளை திறக்க வேண்டாம்.
நிதி நிறுவனமாக இருந்தால் அதுபற்றிய விவரங்களை ஒருமுறை சரிபார்த்து பின்னர் கடன் பெறுவது நல்லது.
கடன் தொடர்பான பத்திரங்களை நன்றாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.