சைபர் புல்லிங் என்பது கணினி, ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி ஒருவரை வேண்டுமென்றே மிரட்டுவது, அச்சுறுத்துவது.
சமூக ஊடகங்கள் வழியாக ஒருவரைப் பற்றி தவறான தகவல்களைப் பகிர்வது, அவதூறாகப் பேசுவது, மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, அவமானப்படுத்துவது, மிரட்டுவது என பல வழிகளில் நிகழலாம். பெரும்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
சைபர் புல்லிங்
இணையவழி குற்றங்களில் ஒன்றான சைபர் புல்லிங் என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியான குற்றம் என்று கூறலாம். இதற்காக இணையம், சமூக ஊடகங்கள், கணினிகள், மொபைல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
மனதளவில் பாதிக்கக்கூடிய ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயங்களைப் பகிர்தலின் மூலமாக குறிப்பிட்ட நபர் தாக்கப்படுகிறார். இதன்மூலமாக அவர் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு இறுதியாக மிரட்டவும்படுகிறார். ஏன் தவறான தகவல்களைப் பரப்பிகூட மிரட்டப்படலாம்.
இந்த வகை தாக்குதல் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கிறது. மற்ற சைபர் குற்றங்களில் பெரும்பாலும் பணம் மட்டும்தான் குறிக்கோளாக இருக்கும். ஆனால் இதன் மூலமாக பழிவாங்குவதும் நடக்கிறது.
மிகவும் கடுமையான சூழ்நிலையில் இந்த வகை அச்சுறுத்தலில் பலரும் தற்கொலைக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக பெண்கள்தான் சைபர் புல்லிங்கால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உதாரணத்திற்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தவறாகச் சித்தரித்து அவருக்கு அனுப்புவது அல்லது அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலமாக அவரிடம் மன உளைச்சலை ஏற்படுத்துவது போன்றவை நடக்கலாம்.
இதன்மூலமாக பெண்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலாம். அதாவது பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் தரும் புகைப்படங்கள், விடியோக்கள் அனுப்புவது, பாலியல் ரீதியாக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்றவை.
இதற்காக பெண்களின் சமூக ஊடகங்களை பலரும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
காரணம்?
பெரும்பாலும் பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது. அடுத்ததாக பொழுதுபோக்கிற்காக பலரும் செய்கிறார்கள். சில தாக்குதல்கள் சாதாரணமானதாகவும் சில தாக்குதல்கள் மரணத்திற்குக்கூட வழிவகுக்குகின்றன.
பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகும்போது வெளியில் சொல்வதில்லை. இதனை கண்டறிவதும் கடினமாக இருக்கிறது.
அதேபோல இளைஞர்கள், ஆண்கள் ஏதேனும் ஒரு தவறு செய்யும்போது அதை வைத்து மிரட்டுகிறார்கள். மிரட்டலுடன் அவர்களிடமிருந்து பணமும் பறிக்கின்றனர். ஏன் உடல்ரீதியாகவும் அச்சுறுத்தல் செய்கின்றனர்.
உங்களிடம் ஒருவர், நண்பர் அல்லது நல்லவர் போல நடித்து உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை சேகரித்துக்கொண்டு பின்னர் அதை வைத்தே மிரட்டலாம். அதனால் கவனமாக இருங்கள். பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையும் செய்துகொள்வது நடந்துகொண்டிருக்கிறது.
விளைவுகள்
பாதிக்கப்பட்டவர் மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
பாதிக்கப்பட்டவரின் சுற்றியுள்ள உறவுகளில் பாதிப்பு ஏற்படலாம் அல்லது நீங்கள் தனிமைப்படுத்தப்படலாம்.
செய்ய வேண்டியது என்ன?
பெண்களே, சமூக ஊடகங்களில் உங்களது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பயப்பட வேண்டாம். அதற்கு எதுவும் பதிலளிக்காதீர்கள். அந்த கணக்கை பிளாக் செய்துவிட்டு உடனடியாக காவல்துறைக்கு அல்லது சைபர் குற்றப்பிரிவுக்கு புகார் கொடுக்கலாம்.
ஒரு தகவலை அல்லது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிரும் முன் ஒருமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. சமூக ஊடகங்களில் தனிப்பட்ட விவரங்களை உங்களுடைய நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி பாதுகாப்புடன் வைத்திருங்கள்.
தேவையில்லாத குறுஞ்செய்திகள், லிங்க்குகளை திறக்க வேண்டாம். தெரியாத நபர்களை நண்பர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
போலியான நண்பர் கோரிக்கைகளை (friend request) எச்சரிக்கையுடன் அணுகுங்கள். உங்களுடைய சுய விவரத்தை பயன்படுத்தி போலி சமூக ஊடக கணக்கை உருவாக்கி, அதன் மூலமாக மற்றவர்களிடம் பணம் கேட்க வாய்ப்புள்ளது. அதனால் தெரியாத நபர்களை சமூக ஊடக கணக்குகளில் நண்பர்களாக வைத்துக்கொள்ள வேண்டாம்.
சமூக ஊடகங்களில் புதிதாக ஒருவருடன் பேச நேர்ந்தால் கவனமாக இருங்கள். ஒருவேளை பேசிய பிறகு சந்தேகம் ஏற்பட்டால் பிளாக் செய்துவிடுங்கள்.
உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான விஷயங்களை ஒருபோதும் பகிர வேண்டாம். பாஸ்வேர்டு, வங்கிக்கணக்கு விவரங்களையும் கொடுக்க வேண்டாம்.
குழந்தைகள், மாணவ - மாணவிகள் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ இதுகுறித்து தெரிவிக்கலாம்.
வீட்டில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் ஆன்லைன் குற்றங்கள், சைபர் குற்றங்கள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
எதுவானாலும் வீட்டில் சொல்லும் அளவுக்கு குழந்தைகளிடம் பெற்றோர்கள் நண்பர்களாக பழக வேண்டும். பிரச்னை எனும் பட்சத்தில் அவர்களுக்கு தைரியம் கொடுத்து பக்கபலமாக இருங்கள்.
சைபர் குற்றப்பிரிவிடம் புகார் அளித்து தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.