பெண்ணை கர்ப்பமாக்கினால் பணம் தருவதாகக் கூறி நூதன முறையில் மோசடி நடப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இப்படியெல்லாம் மோசடி நடக்குமா? என அதிர்ச்சியளிக்கும் வகையில் தற்போது மோசடிகள் வினோதமான முறையில் நடக்கின்றன. அந்த வகையில் நூதன விளம்பரங்கள் மூலமாக ஒவ்வொரு நாளும் புதுப்புது மோசடிகள் நடக்கின்றன.
அந்த வகையில் யாருமே எதிர்பாராத ஒரு முறையில் 'கர்ப்ப வேலை மோசடி' எனும் புது ட்ரென்ட் மோசடி உருவாகியுள்ளது.
எப்படி நடக்கிறது மோசடி?
'ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் லட்சக்கணக்கில் பணம் பெறலாம்' என சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வருகின்றன. அதைப் பார்த்து ஆண்கள் பலரும் தொடர்புகொள்ள, 'ஏஜென்சி நிறுவனங்கள்' என்று கூறிக்கொள்ளும் அந்த மோசடி கும்பல், அடையாள அட்டை சரிபார்ப்பு மற்றும் விதிமுறைகள் என்று கூறி அந்த ஆணிடம் பணம் பறிக்கிறார்கள். முடிந்தவரை பணத்தைப் பெற்றவுடன் காணாமல் போய்விடுகிறார்கள்.
இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா? இதில் ஆண்கள் சிக்கிக்கொள்கிறார்களா? என்றால் புணேவில் நடந்த ஒரு சம்பவம் உதாரணம்.
புணே சம்பவம்
புணேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்(44) ஒருவர், சமூக ஊடகத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.
'நான் தாயாவதற்கு(கர்ப்பமாக்க) ஒரு ஆண் தேவை, ரூ. 25 லட்சம் தருகிறேன். நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல' என்ற ஒரு பெண் பேசிய விளம்பரம்தான் அது. அவரும் இதை நம்பி அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
'கர்ப்பமாக்கும் வேலை' தொடர்பான ஒரு ஏஜென்சியின் பணியாளர் என்று கூறி பேசிய ஒருவர், ஒப்பந்ததாரரின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுள்ளார். மேலும் இந்த சலுகை வேண்டுமென்றால் பல சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜிஎஸ்டி என பல காரணங்களைக் கூறி பல்வேறு வழிகளில் அவரிடம் இருந்து ரூ. 11 லட்சம் பெற்றுள்ளார். செப்டம்பர் - அக். 23 வரை 100 ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அவர் செய்துள்ளார்.
பின்னர் இந்த வேலை தொடர்பாக அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது அந்த தொலைபேசி எண் வேலை செய்யாமல் போனது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தொலைபேசி எண், வங்கிக்கணக்கு எண்களை முடக்கி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வகை மோசடி வினோதமாக இருந்தாலும் கடந்த 2022 முதலே இந்தமுறையிலான மோசடி இருப்பதாக சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர். பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வகை மோசடிகளில் கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன.
இது போன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் தெரியாதவர்கள் பணம் கேட்டால் அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.