தினமணி கதிர்

சுற்றுப்புறம்: சுகாதாரத்தை நோக்கிய பயணம்!

உலகம் முழுவதிலும் சுமார் 250 கோடி மக்கள் போதிய கழிப்பிட வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலும் சீனாவிலும் வசிக்கின்ற

ஜி.மீனாட்சி

லகம் முழுவதிலும் சுமார் 250 கோடி மக்கள் போதிய கழிப்பிட வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலும் சீனாவிலும் வசிக்கின்றனராம்.

மலேரியா, வயிற்றுப்போக்கு, நோய்க் கிருமிகளின் தாக்கம் போன்ற பலவித நோய்களுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடங்களே வரவேற்பறைகள்.

கழிப்பறைகள் எதற்கு என நினைக்கும் கிராமங்களில் அதற்கான அவசியத்தை எடுத்துரைப்பது சாமானிய விஷயமல்ல. அதில் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றன நமது பஞ்சாயத்து அமைப்புகள்.

அரசு-மக்கள்-உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொடர்ந்த ஒத்துழைப்பால், 2007 மார்ச் வரை நாடு முழுவதிலும் 3.19 கோடி தனிநபர் கழிப்பிடங்கள், 9,997 பொதுக் கழிப்பிடங்கள், 3.57 லட்சம் பள்ளிக் கழிப்பறைகள், 1.10 லட்சம் அங்கன்வாடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

""முதல்ல எல்லாம் திறந்த வெளிக் கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்திட்டு இருந்தோம். அதனால் நாங்க அனுபவிச்ச கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆம்பளைங்க கண்ணுல படாம "போய்ட்டு' வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். இப்ப எங்க வீட்லயே தனியே கழிப்பறை கட்டிட்டோம். கவர்மெண்ட்ல ரூ.1200 மானியம் தந்தாங்க. இப்பப் பாருங்க நினைச்ச நேரத்துல எங்க விருப்பம்போல பாத்ரூம், கழிப்பறையைப் பயன்படுத்த முடியுது...'' என்கின்றனர் பழனி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்கலையம்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாரியம்மாளும், ராஜகாந்தமும்.

இந்த கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரப்பட்டி, வி.கே.மில்ஸ், சின்னக் கலையம்புத்தூர், ஆர்.ஜி.புரம், விவேகானந்தா காலனி போன்ற பகுதிகளிலுள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

""சின்னக் கலையம்புத்தூர் கிராம பஞ்சாயத்துல 95 சதவீதம் வீடுகள்ல கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கறோம். இதனால் திறந்தவெளியில மல, ஜலம் கழிக்கறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சிருக்கு. குறிப்பா, பெண்கள்கிட்ட இந்தத் திட்டம் பெருத்த நிம்மதிய ஏற்படுத்தியிருக்கு...'' என்கிறார் 1-வது வார்டைச் சேர்ந்த உறுப்பினர் கே.ராஜாமணி.

வீட்டுக்குள்ளேயே கழிப்பறை அமைப்பதற்கு இடம் இல்லாதவர்கள் மற்றும் நிரந்தர வீடு இல்லாதவர்களின் பயன்பாட்டுக்காக கிராமங்களில் பொதுக் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

""கட்டின கழிப்பறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த கிராம மக்களைத் தூண்டற விதத்துல விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதுக்காக சுகாதாரப் பேரணிகளை அப்பப்போ நடத்தறோம். நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமா மக்கள்கிட்ட நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்றோம். திறந்தவெளியில மல, ஜலம் கழிக்கக்கூடாது, கழிப்பறைக்குப் போயிட்டு வந்ததும் கையை சோப்புப் போட்டுக் கழுவணும்.. இப்படி நிறைய சுகாதார விஷயங்களைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள், நாடகங்கள் மூலம் எடுத்துரைக்கிறோம்....'' என்னும் ராஜாமணியின் வார்த்தைகளுக்கு அத்தாட்சியாய் உள்ளன, அந்தக் கிராமத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை போர்டுகள்.

"குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல் வீதிகளில் எறிந்தால் அபராதம் ரூ.50' என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இப்படி தொடர்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால்தான் இந்த கிராமத்துக்கு 2008-ம் ஆண்டுக்கான "நிர்மல் கிராம புரஸ்கார் விருது' கிடைத்துள்ளது என்கிறார் சின்னக்கலையம்புத்தூர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் வேணுகோபால்.

தமிழகத்தைப் பொருத்தவரை, பஞ்சாயத்து அமைப்புகளின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது "நிர்மல் கிராம புரஸ்கார் விருது'. இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விருது, பஞ்சாயத்து அமைப்புகளின் முழு சுகாதாரத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2005-ல் நாடு முழுவதும் உள்ள 40 பஞ்சாயத்து அமைப்புகள் இந்த விருதைப் பெற்றன. 2006-ல் இந்த எண்ணிக்கை 769 ஆக உயர்ந்தது. 2007-ல் 4000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நிர்மல் புரஸ்கார் விருது பெற்றுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை, மிகவும் அதிகபட்சமாக 2008-ல் திருச்சி மாவட்டத்தின் 110 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தின் 98 பஞ்சாயத்துகளுக்கும், நாகபட்டினத்தின் 96 பஞ்சாயத்துகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நகர்ப்புற மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதிகளை கிராம மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

""ரோட்டரி சங்கம் போன்ற சில அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். ஸ்பான்ஸர்கள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது...'' என்கிறார் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சித் தலைவி பூங்கொடி.

முற்றிலும் முடியாமல் போனால் மட்டுமே, மருத்துவமனைப் பக்கம் தலைகாட்டும் அப்பாவி மக்களுக்கு இத்தகைய இலவச மருத்துவ முகாம்கள் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

""எங்க ஊர்ல எங்கே இலவச மருத்துவ முகாம் நடத்துனாலும் சரி, எனக்குத் தெரிஞ்ச கிராமத்துப் பொம்பளைங்களுக்குத் தகவல் சொல்லி வரவழைச்சிடுவேன். உடம்பப்பத்தி கவலைப்படாத இந்த ஜனங்களுக்கு ஏதோ நம்மால முடிஞ்ச உதவி செய்யறோம்...'' என்கிறார் அ.கலையம்புத்தூர் முதல்நிலை ஊராட்சி வார்டு உறுப்பினர் சி.மகமாயி. இந்த வார்டின் சீனியர் உறுப்பினர் என்ற முறையில் மகமாயி அம்மாளின் குரல், கிராம மக்களின் நலனுக்காக என்றுமே உரத்து ஒலிக்கிறது.

""தனிநபர் கழிப்பிடம் கட்டிட்டு அதைப் பயன்படுத்தாம இருக்கறவங்கதான் அதிகம். அவங்ககிட்டபோய் நல்லது, கெட்டது எடுத்துச் சொல்லி கழிப்பறைகளை உபயோகப்படுத்தும்படி சொல்றது பெரிய விஷயமில்ல. அதேபோல வீட்டுக்கு முன்னாடிதான் குப்பையைக் கொட்டுவாங்க. இல்லைனா, சாக்கடையில போடுவாங்க. மக்கள் மத்தியில விழிப்புணர்வு இல்லைனா எதுவும் செய்ய முடியாது...'' என்னும் மகமாயி, அந்தப் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றவர்.

தங்கள் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின் உடல் நலத்திலும் கூடுதலாக அக்கறை செலுத்துகிறார், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சித் தலைவி விஜயா கதிர்வேல்.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் ஆதரவுடன் வைட்டமின் மாத்திரைகள் வழங்கி, இலவச தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார். ""சுகாதாரமான சூழ்நிலையில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் குழந்தைகள் கல்வி பயில வேண்டியது அவசியம்'' என்கிறார் இவர்.

சுகாதாரத்தின் அவசியத்தை உணர்ந்துவிட்ட கிராமங்கள் பல, குப்பைகளை அகற்றும் பணியை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளன. இதனால் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதுடன், கிராமங்களும் தூய்மையாகப் பளிச்சிடுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியின் 12-வது வார்டு உறுப்பினர் தனபாக்கியம், ஆயக்குடி பேரூராட்சியின் 4-வது வார்டு உறுப்பினர் கமலம் போன்றோர் தங்கள் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு கச்சிதமாகக் குப்பைகள் அள்ளப்படுகின்றன.

குப்பை அள்ளக்கூட பணியாளர்கள் கிடைக்காத நிலையில், நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை துப்புரவுப் பணியாளர்களை வரவழைத்து கிராமம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாம்பள்ளி ஊராட்சித் தலைவி ஈஸ்வரி.

  குப்பைகளற்ற, சுகாதாரமான வசிப்பிடமே பெரும்பாலான உள்ளாட்சித் தலைவிகளின் பிரதானக் குறிக்கோளாக இருக்கிறது. அதன் மூலம் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களின் பயணம் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT