முகப்பு
தினமணி கதிர்

சேவை: உயிர் காக்கும் தோழன்

வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்னை நம்மைத் தாக்கும்போது கிடைக்கும் அனுபவங்களில் இருந்துதான் பெரும்பாலானவர்கள் பாடம் கற்றுக்கொள்கின்றனர். அந்தப் பாடங்கள் ஒருவரைச் சமுதாயத்துக்குப் பெருமளவில் உதவும் சாதனைய

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:57 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:09 PM

வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்னை நம்மைத் தாக்கும்போது கிடைக்கும் அனுபவங்களில் இருந்துதான் பெரும்பாலானவர்கள் பாடம் கற்றுக்கொள்கின்றனர். அந்தப் பாடங்கள் ஒருவரைச் சமுதாயத்துக்குப் பெருமளவில் உதவும் சாதனையாளராக மாற்றிவிடுமா? மாற்றியிருக்கிறது ஒருவரை.

 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தாயை அறுவைச் சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது ரத்தம் கிடைக்காமல் பட்ட துயரமான அனுபவம் ஒருவரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி ரத்ததான முகாம்களை நடத்தும் சாதனையாளராக்கியுள்ளது.

 அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த நடராஜ். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவருக்குத் தாய்க்குக் கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காகக் கடந்த 1993-ல் சேர்த்தார். அப்போது அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான ரத்தம் கிடைக்கவில்லை. இதனால் தனியார் ரத்த வங்கியில் ரத்தம் பெற வேண்டிய நிலை. அதற்குப் பணம் இல்லை. தெரிந்த கல்லூரி மாணவர்களிடம் உதவி கேட்டுத் தேவையான ரத்தத்தைத் தாய்க்குப் பெற்றார் நடராஜ்.

Advertisement

இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்த நடராஜ், ரத்தத்துக்காக யாரும் சிரமப்படக் கூடாது என்பதற்காக  பொள்ளாச்சி ரத்த தான ஆலோசனைக் குழுவிலும் நோயாளிகள் நலச் சங்கத்திலும்  உறுப்பினராக 1994-இல் சேர்ந்தார். அப்போதிருந்து இன்றுவரை ஆண்டுக்கு 4 முறை ரத்த தானம் செய்து வருகிறார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 1999-ம் ஆண்டு ரத்த வங்கி துவங்கப்பட்டது.  700 யூனிட் ரத்தத்தை முகாம்களின் மூலம் அந்த வங்கிக்கு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார் நடராஜ்.

அதுமட்டுமல்ல, 2004-ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 135 அனாதைப் பிணங்களைத் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் தலைவர் கனகராஜூடன் இணைந்து அடக்கம் செய்துள்ளார்.

தினமும் காலை 8 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றுவிடுவார். அங்கே நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறார். நடராஜிடம் பேசினோம்.

 ""அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காமல் நோயாளிகள்  பலரைப் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அழைத்துச் செல்லும்நிலை இருந்தது. இந்தநிலை  யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் ரத்த தான முகாம்களுக்கு ஏற்பாடு செய்தேன். இப்போது ஆண்டுக்குச் சுமார் 700 யூனிட் ரத்தம் வரை தானம் பெறுகிறோம். இது போக தேவைப்படும் பலருக்கு ரத்தம் தானமாகத் தருகிறோம். ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகள்  சிகிச்சைக்குத் தேவையான ரத்தம் இல்லாமல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் முகாம்கள் தொடர்ந்து நடத்துகிறோம். கல்லூரி மாணவர்களையும் இதில் பெருமளவில் ஈடுபடுத்தியுள்ளோம். அனைவரின் முகவரிகளும் தொலைபேசி எண்ணுடன் உள்ளது. மிகவும் அரிய வகை ரத்தம் தேவைப்படுவோருக்கு எங்களுடைய முயற்சியால் பல சமயங்களில் ரத்தம் தந்திருக்கிறோம். பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம்'' என்றார் நடராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.