நகர மன்ற உறுப்பினர் சம்பத்
தோழர் ஈ.வெ.கி. சம்பத் தமது 23-ஆம் வயதில் (1947) இருமுறை ஈரோடு தொகுதிக்கு பதவி வகித்தார். தமது பொறுப்புக் காலத்தில் பொதுவாகத் தமது தொகுதிக்கு மட்டுமின்றி நகரத்தின் பெரும் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். நகர மக்களின் நன் மதிப்பைப் பெற்றார். இரண்டாம் முறையும் சம்பத் ஈரோடு நகர மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெரியார் 1914-ஆம் ஆண்டிலேயே ஈரோடு நகரமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் பதவி வகித்து நகரின் அடிப்படைத் தேவைகளை} குடிநீர், சுகாதார வசதிகளை அமைத்தார் என்பதும் அதே காலகட்டத்தில் 1918}இல் சேலத்தில் பெரியாரின் நண்பர் சி. ராஜகோபாலாச்சாரியார் நகரமன்றத் தலைவராக இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்திகள்.
1.5.1947 முதல் 7 நாட்கள் ஈரோட்டில் திராவிடர் மாணவர் பயிற்சி முகாம் ஈ.வெ.கி. சம்பத் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாணவர் கழகப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெறலாயிற்று.
கரூர் வழக்கு
கைத்தறி நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் தோழர்கள் சுமார் 100 பேர் மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்தது. அவர்களுக்குப் பெரியார் உதவவில்லை. சம்பத் அண்ணாவோடு தொடர்பு கொண்டு கரூர் வழக்குக்கு நிதி திரட்டவேண்டுமென்று கூறினார். திருச்சியில் அண்ணாவின் "நீதி தேவன் மயக்கம்', "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' நாடகங்கள் நடைபெற்றன. சிவாஜியாக சம்பத் நடித்தார். இந்த நாடகங்கள் வாயிலாக ரூ.5161 நிதி திரட்டி கரூர்த் தோழர்களுக்கு வழக்கு நிதியாக அளிக்கப்பட்டது.
இந்நாடக விழாவிற்கு குத்தூசி குருசாமியைத் தலைமை தாங்குமாறு ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேசினார். குருசாமி தலைமையேற்றார். இரா. நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினார். பணமுடிப்பைச் சண்முகவேலாயுதம் அவர்களிடம் அளித்த அண்ணா கரூர் வழக்கு பற்றி விவரமாக எடுத்துரைத்தார்.
எண்ணற்ற கழக ஏடுகள்
கழகத்திற்காக ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த குடியரசு ஜஸ்டிசைட், விடுதலை நாளிதழ், திராவிட நாடு வார ஏடு ஆகியவற்றோடு இந்த இரண்டு ஆண்டுகளில் கழகத் தோழர்களால் ஏராளமான இதழ்கள் தொடங்கி நடத்தப் பெற்றன.
தீப்பொறி (வேலூர்), திராவிட அரசு, திராவிட முரசு, போர்வாள், திராவிடன், பூந்தோட்டம், தோழன், அழகு, கதிரவன், டார்பிடோ, இன ஒலி, தீப்பொறி, (சென்னை) மறுமலர்ச்சி, பொன்னி, குயில் (மாதம்), குயில் (வாரம்), குயில் (கவிதை), தமிழ்நாடு (சென்னை), நிலவு, மயில், திராவிட மணி, சூறாவளி, புதுவாழ்வு, ஸ்பார்க் (ஆங்கிலம்) நியூ ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) தமிழகம், திராவிடம், நகர தூதன், சண்டே அப்சர்வர் (ஆங்கிலம்) விபரேடர் (ஆங்கிலம்) கோவை முரசு, சேலம் டைம்ஸ், வழிகாட்டி, சமத்துவம், சமரசம், தமிழ்ஏடு, குரல்.
ஈ.வே.கி. சம்பத்தும், க. அன்பழகனும் இணைந்து "புதுவாழ்வு' என்ற வார ஏட்டினைத் தொடங்கினர்.
பெரியார் - காமராசர் முதல் சந்திப்பு
8.12.1947 அன்று சேலத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெரியார் சென்னை செல்ல கொச்சின் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. நடைபாதையில் நின்றபடி உடன் வந்த தோழர்களிடம் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அதே வண்டியில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ் பெரியாரைக் கண்டு வணக்கம் செய்ய, பெரியாரும் பதில் வணக்கம் செய்தார். காமராஜ் அவ்விடத்தை விட்டு சென்றவுடன் பெரியார் அருகில் இருந்த நண்பரிடம், ""இவர் விஜயராகவலு முதலியார் மகன் அல்லவா?'' என்று கேட்டார்.
""இல்லை ஐயா, இவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ்'' என்று கூறினார்.
""நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை. நான் சரியாகக் கூட பேசவில்லையே'' என்று கூறிக் கொண்டிருக்கும்போதே ரயில் புறப்பட்டு விட்டது.
சென்னை சென்ட்ரலில் ஐயாவை எதிர்பார்த்து சம்பத் முதலானோர் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ரயில் வந்தது. பெரியார் இறங்கினார். சம்பத்திடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வேகமாக வந்த காமராஜர், பெரியாரிடம் சில நிமிடங்கள் பேசினார். பிறகு சந்திப்பதாகச் சொல்லிக் காமராஜர் விடைபெற்றார். பெரியார் மீரான்சாகிப் தெரு இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.
இதற்குப் பிறகு பெரியார் கரூர் வழக்கு நிதிக்குழு என்று அறிவித்தார். இந்த நீதிக் குழுவின் மூலம் மேலும் நிதி வசூலித்துக் கரூர் வழக்கு நிதிக்காக அளிக்கப்பட்டது.
1947 நவம்பரில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றது. உடையார் பாளையம் வேலாயுதம் என்னும் பள்ளி ஆசிரியர் கழகப் பிரசாரம் செய்தார் என்று , அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டித்து சென்னை மயிலையில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை மாநாடு
17.12.47 அன்று திருவண்ணாமலையில் மாவட்டக்கழக மாநாடு நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை நகரசபைத் தலைவராக ப.உ. சண்முகம், கோவில்பட்டி நகரசபைத் தலைவராக ஈ.வே.ஆ. வள்ளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதனைக் ""கவர்னர் பதவி போல் நமக்கு'' என்று பெரியார் பாராட்டினார். விழுப்புரம் நகரசபைத் தலைவராக சண்முகம், உடுமலைப் பேட்டையில் கனகராசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வெற்றிகளை வரலாற்று வெற்றியாகக் கழகத்தினர் கொண்டாடினர்.
நீதிக் கட்சியைச் சேர்ந்த சேலம் (ராவ்பகதூர்) ரத்தினசாமி, தலைமை வகித்தார். (இந்த மாநாட்டிலும் அண்ணா பங்கேற்கவில்லை) மாநாட்டுத் தலைவரை முன்மொழிய தோழர் போளூர் சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். அவர் பேசும்போது, ""அண்மையில் தமக்குக் கொடுத்திருந்த பட்டத்தைத் தாமாக முன் வந்து துறந்த திரு. முத்தையா அவர்களைப் போல் ரத்தினசாமி அவர்களும் தமது பட்டத்தைத் தாமாகத் துறக்க முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். துறப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன்'' என்றார். அய்யாவுக்கு வந்ததே கோபம். உடனே தமது கைத்தடியை எடுத்து மேடையைத் தட்டி ""போதும் நிறுத்து, உன்னை முன்மொழியச் சொன்னால் அவரை பட்டம் துறக்கவேண்டுமென்று கூறுகிறாயே? இது என்ன அதிகப் பிரசங்கித்தனம். திரு. ரத்தினசாமி பெரிய மனிதர். நானே அவர் வீட்டிற்குச் சென்று இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கு வந்திருக்கின்றார். அவரை பட்டம் துறக்கச் சொல்ல நீ யார்? இது குறும்புத்தனம். இதையெல்லாம் காஞ்சிபுரத்தில் வைத்துக் கொள்'' என்று கோபமாக ஒலி பெருக்கி முன்னால் பேசி ரத்தினசாமியை பார்த்து, ""அய்யா மன்னிக்கணும். தவறு நடந்து போச்சு'' என்று வருத்தப்பட்டார். இந்தச் செய்கையில் கோபமடைந்திருந்த அய்யாவை, நகரமன்றத் தலைவர் ப.உ. சண்முகம் சமாதானம் செய்து வைத்தார். மாநாடு தொடர்ந்து நடைபெற்றது.
கருப்புச் சட்டைப் படைக்குத் தடை
1948-ஆம் ஆண்டு தொடர்கின்ற போதே தாங்கொணாத் துயரச் செய்தியை சுமந்து வந்தது. காந்தியடிகள் மதவெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்னும் செய்தி உலகைக் குலுக்கியது. சித்தம் கலங்கினார் பெரியார். விடுதலை ஏட்டில் மனம் பதறி அறிக்கை விட்டார்.
பதற்ற நிலை போக்க அரசு பெரியாரையும் அண்ணாவையும் வானொலியில் உரைகள் நிகழ்த்தச் செய்தன.
அரசின் அடக்குமுறை
அடுத்த திங்களில் அரசின் அடக்குமுறை கழகத்தின் மீது பாய்ந்தது. குற்றவியல் சட்டத் திருத்தம் 15-ஆம் பிரிவில் கீழ் கருப்புச் சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாளிகை சோதனையிடப்பட்டது. தடை பற்றிய அரசாணை நகல், கருப்புச் சட்டை அமைப்பாளர் ஈ.வெ.கி. சம்பத்திடம் காவல் துறை அதிகாரிகளால் தரப்பட்டது.
குடியரசு அலுவலகத்தின் பூட்டை உடைத்துச் சோதனையிட்டு காவல்துறையினர் சில பதிவேடுகளையும் கைப்பற்றினர். பெரியார் இல்லத்தில் அவரில்லாதபோது அவரது அறையின் பூட்டை உடைத்துச் சோதனை செய்து கருஞ்சட்டைகள், கருப்புக் கொடிகள், கடிதத் தொகுப்புகள், கணக்கு மற்றும் ரசீது புத்தகங்கள், தீர்மானப் பதிவேடு ஆகியவற்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
பெரியார் வெகுண்டெழுந்தார்.
சென்னையில் கருப்புச் சட்டை மாநாடு
கருப்புச் சட்டைப் படை தடை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை மெமோரியல் மண்டபத்தில் மாபெரும் கண்டனக் கூட்டம் ஏற்பாடாயிற்று. இக்கூட்டத்திற்கு வரும் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வரவேண்டுமென பெரியார் வேண்டுகோள் விடுத்தார். ஆண்களும் பெண்களும் கருப்பு ஆடைகளுடன் திரண்டிருந்தனர்.
கருப்புச் சட்டை குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த அண்ணா எவரும் எதிர்பாராத வகையில் கருப்புச் சட்டை அணிந்து மேடையில் தோன்றினார். அவருடன் சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.என், மதியழகன் ஆகியோரும் கருப்புச் சட்டையுடன் காணப்பட்டனர். அண்ணா நெடுஞ்செழியனின் கருப்புச் சட்டையை அணிய, அது கவுன் போல் முழங்கால் வரை தொங்கியது. கருப்புச் சட்டையுடன் அண்ணா தோன்றியதும் குழுமியிருந்த அனைவரும் மனநெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பெரியார் முன்னிலையில் அண்ணா பேசியபோது, கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் தலைமைக்குக் கட்டுப்பட்டவன்'' என்று தன்னிலை விளக்கம் அளித்தார். அரசின் அடக்கு முறையைக் கண்டித்து அண்ணா ஆவேசமாகப் பேசினார்.
கருப்புச் சட்டைப் படை தடை செய்யப்பட்டிருந்தாலும் இம் மாநாட்டினையொட்டி எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கருப்புச் சட்டை திராவிடர் கழகத்தின் சின்னமாக மாறியது.
இந்தி எதிர்ப்பு மாநாடு
17.4.1948-இல் சென்னையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும் தேசியத் தலைவர்களான திரு.வி.க., ம.பொ. சிவஞானம், டி. செங்கல்வராயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு அண்ணாவும் சம்பத்தும் மேடைக்கு வந்தபோது பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது.
மாநாடு முடிந்து பெரியாரிடம் கழகத்தில் கருத்து வேறுபாடு தீர்ந்ததா? என்று கேட்டபோது பெரியார், ""ஒரு கட்சிக்கு இரண்டு தலைவர்கள், இரண்டு அணிகள் இருக்க முடியாது'' என்றார். ""கருத்து மோதல் என்பது சுயவிளம்பரத்திற்காக நடைபெறுகிறது'' என்றும் கூறினார்.
இந்த நிலையில் அண்ணா திராவிடநாடு இதழில், "லேபிள் வேண்டாம்', "உள்ளம் உடையுமுன்', "ராஜபார்ட் ரங்கதுரை', "மரத்துண்டு', "இரும்பாரம்' போன்ற உருவகக் கதைகளின் மூலம் உள் கட்சி நிலவரங்களை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இது அடுத்து வீசப்போகிற புயலுக்கு முன்னெச்சரிக்கை போல் தோன்றியது.
தூத்துக்குடியில் நடந்த கழக மாநாட்டில் அண்ணா, சம்பத் பங்கேற்கவில்லை. சென்னையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இருவரும் பேசினர். மனக்கசப்புகள் தொடர்ந்தபோதும் அண்ணாவோ அவரது அணியினரோ கழகத்தை விட்டு விலகிவிடவில்லை. அண்ணா திராவிடநாடு மூலமும் சம்பத் விடுதலை நிர்வாகம் மற்றும் பணிகள் மூலமும் இயங்கியவாறே இருந்தனர். அப்போது திராவிடநாடு இதழில் கேள்வி - பதில் பகுதியில் அண்ணா மிக நயமாக எழுதினார்.
கேள்வி: நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி விட்டீர்களா?
பதில்: விலகவில்லை, ஒதுங்கி நிற்கிறேன்
இந்த ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்புக்கான ஆயத்தங்கள் தமிழ்நாட்டில் இந்தி விருப்பப் பாடமாகவோ, கேரள, ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இந்தி கட்டாய பாடமாகவோ இருக்குமென்று ஓர் அரசாணை வெளியாயிற்று.
விடுதலை ஏட்டின் மீது அடக்குமுறை பாய்ந்தது. இரண்டாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டுமென்று அதன் வெளியீட்டாளர் மணியம்மையாருக்கு அரசாணை வந்தது.
முதலமைச்சர் ஓமந்தூரார் பெரியாரை அழைத்துப் பேசினார். ""அரசுக்குத் தொல்லை தராதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார். ""இந்தியை எதிர்ப்பது எங்கள் கடமை, அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம்'' என்று கண்டிப்பாகவே தெரிவித்தார் பெரியார்.
சென்னை வரும் ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டுவதெனக் கழகம் மேற்கொண்ட முடிவையொட்டி பெரியாரும் அண்ணாவும் கைது செய்யப்பட்டு ஐந்தாம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். பாரதிதாசனின் "இரணியன்' நாடகம் தடையை மீறி நடைபெற்று அதில் நடித்தவர்கள் அந்த வேடங்களிலேயே கைதாயினர்.
(தொடரும்)
தொகுத்து எழுதியவர்கள் : என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.