தினமணி கதிர்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈரோடு தனி மாநாடு கழகப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கியிருந்த காலத்தில், கட்சியில் ஒருவிதத் தேக்கநிலை காணப்பட்டது. மாநாட்டுக் கூட்டங்கள் சுவையற்று விளங்கின. அண்ணாவின் தொண்டும் ஆலோசனையும் கட்சியின் வளர்ச்ச

என்.விவேகானந்தன்

ஈரோடு தனி மாநாடு

கழகப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கியிருந்த காலத்தில், கட்சியில் ஒருவிதத் தேக்கநிலை காணப்பட்டது. மாநாட்டுக் கூட்டங்கள் சுவையற்று விளங்கின. அண்ணாவின் தொண்டும் ஆலோசனையும் கட்சியின் வளர்ச்சிக்கு அவசியமெனப் பலரும் கருதினாலும் பெரியாரிடத்தில் எடுத்துச் சொல்லிச் சமரசம் செய்துவைக்க வழி காணாது திண்டாடினர்.

சம்பத்துக்கு  ஒரு யோசனை தோன்றியது. கழகத்தில் உள்ள  வயதில் மூத்த பிரமுகர்களைத் திரட்டி நிலைமையை விளக்கி அய்யாவுக்குக் கடிதம் எழுத வைக்கலாம் என்று கருதினார். பெரியாரின் அணுக்கத் தோழர்களான சேலம் ஜி.பி. சோமசுந்தரம், குடந்தை கே.கே. நீலமேகம், கோவில்பட்டி வள்ளிமுத்து, பி. சண்முகவேலாயுதம், எஸ்.வி. லிங்கம் போன்ற பெரியவர்களிடம் சம்பத்  தனித்தனியே ஆலோசித்து, அவர்கள் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை அய்யாவுக்கு அனுப்புமாறு தூண்டினார்.

""அண்ணாவை அழையுங்கள்'' என்று தலைப்பிட்ட அந்த வேண்டுகோள் கடிதத்தில் கருத்து வேறுபாடுகளைக் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அண்ணாவை மீண்டும் கழகப்பணிகளில் ஈடுபடுத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, பழம் பெரும் பணியாளர்கள் பெரியாருக்கு நீண்ட கடிதத்தை அனுப்பினார்கள்.  நேரிலும் வற்புறுத்தினர்.

சம்பத்தின் யோசனைக்குப் பயன் ஏற்பட்டது. பெரியார் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு அண்ணாவின் மீதான காழ்ப்புணர்ச்சிகளைத் தளர்த்திக் கொண்டார். பிரச்னைகளின் அடிப்படையில் அண்ணா சொன்ன கருத்துகளில் சிலவற்றில் நியாயம் இருப்பதாகவும் உணர்ந்தார். கருத்து வேறுபாடுகளிலும் கண்ணியம் காட்டும் தலைமையல்லவா  அவர் தலைமை?

அண்ணா மீண்டும் கட்சிப் பணிகளைத் தொடர்வதைக் குறிக்கும் வகையில் அவர் தலைமையிலேயே ஒரு தனிமாநாட்டினை நடத்தி இயக்கத்திற்கு வழியேற்படுத்த வேண்டும் என்று பெரியார் கருதினார். அண்ணா தலைமையில் ஈரோட்டில் 19}ஆம் திராவிடர் கழகத்தின் சிறப்பு மாநாடு 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது.  குறுகிய காலத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கான மும்முரமான பணிகளை ஈ.வெ.கி. சம்பத், எஸ்.ஆர். சந்தானம், சண்முகவேலாயுதம், அப்பாவு, பெருமாள், பாலகுரு, பழனிசாமி ஆகியோர் செய்தனர்.

மாநாட்டிற்கு முன் மகத்தான ஊர்வலம், இரட்டை மாட்டுச் சாரட் வண்டியில் மாநாட்டுத் தலைவர் அண்ணாவை உட்கார வைத்து ஊர்வலம். ""என்னால் முடியாதையா'' என்று பிடிவாதம் செய்கிறார் அண்ணா. அய்யாவோ அண்ணாவைத்தூக்கி வண்டியில் உட்கார வைத்து, ""நீங்க மாநாட்டுத் தலைவருங்க. உட்கார்ந்து வரணுங்க'' என்று பிடிவாதமாக அவரை உட்காரவைத்து பெரியார் தம் மேல்துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு சாரட்டு வண்டி முன் நடந்து வந்தாரே, கண் கொள்ளாக் காட்சி என்பார்களே, அப்படி ஒன்று உண்டானால் இதுதான் அது.

கறுப்புச் சட்டை அணிந்து வெள்ளை மேல் துண்டை இடுப்பில் கட்டி வியர்க்க, வியர்க்க ஊர்வலத்தில் சிங்க நடை போட்டு வந்த பெரியாரைக் கண்டு தோழர்கள் அதிசயித்தனர்.

மாநாட்டு வரவேற்புரையில் சம்பத்

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்  வரவேற்புரையின் சுருக்கம் வருமாறு:

தற்கால நெருக்கடியை உத்தேசித்து, மாநாடு மிக அவசரமாகவும் போதிய முன்னேற்பாடில்லாமலும் கூட்டப்பட்டதால் தவிர்க்க முடியாத சில இன்னல்கள் ஏற்பட்டுவிட்டன. இட நெருக்கடி, உணவுத் தட்டுப்பாடு போன்ற இவ்விடையூறுகளை வர இருக்கும் சிறைச்சாலை அனுபவத்தின் ஒத்திகையாக கருதிக் கொள்ளவேண்டும்.

இந்த மாநாடு எந்தக் காரணத்தினால் எவ்வித அவசரத்தினால் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள். என்றாலும் அதுபற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

சென்ற 2, 3 மாத காலத்திற்கு முன் இந்நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இந்நாட்டின் மீது இந்தி மொழியைக் கொண்டு வந்து புகுத்தியதும் அதன் காரணமாக அதை எதிர்த்து நாம் மறியல் செய்யத் தீர்மானித்ததும் மறியல் தொடங்குவதற்கு முன், முதன் மந்திரியார் பெரியார் அவர்களை அழைத்துப் பேசியதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

அந்த சமயம் பெரியார் முதல் அமைச்சரிடம், மிக்க பணிவாக ஆனால் மிக உறுதியாக, ""இந்தி இந்நாட்டுக்கு தேவையற்றது. உதவாது. ஒருமுறை புகுத்தப்பட்டு மக்களின் அதிருப்திக்கும் கண்டனத்திற்கும் ஆட்பட்டு ஒழிக்கப்பட்டது. எனவே அதை மறுபடியும் கொண்டு வந்து புகுத்தி, அன்பு நெறிப்பட்டு, அறிவுப்பிரசாரம் செய்து வரும் எங்களை வீணாக வலுச்சண்டைக்கு இழுக்கவேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமைச்சர், ""முடியாது உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். நாமும் சவாலை ஏற்றுக் கொண்டோம். மறியல் தொடங்கினோம் நல்ல முறையில் நடத்தி வந்தோம். சர்க்கார், மறியல் தொண்டர்களைச் சிறைப்படுத்தினார்கள். பல கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள் என்றாலும் நாம் அஞ்சினோமில்லை. மேலும் எப்படி எதிர்ப்பைப் பெருக்குவது என்று யோசித்துத் திட்டம் வகுக்க கமிட்டியைக் கூட்டினோம்.

திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தை, சூதாட்டக்காரர்களின் கூட்டத்தைப் பிடிப்பதுபோல் மிக காட்டுமிராண்டித்தனமான முறையில் நாம் குடியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டு நம்மைச் சிறைப்படுத்தினர். கவர்னர் ஜெனரலுக்கு கறுப்புக் கொடி காட்டத் திட்டம் வகுக்கக் கூடியிருந்தோம் என்று குற்றம் சாட்டினர்.

தோழர்களே கறுப்புக் கொடி பிடித்து அதிருப்தி காட்டுவது என்பது எந்த ஜனநாயக நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மரபுரிமை. அது, காங்கிரஸ்காரர்களே வெள்ளையன் காலத்தில் பின்பற்றி வந்த முறையும்கூட, என்றாலும் அதைக் குற்றமென்று கருதிக் கொண்டனர்.

ஆங்காங்கு மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி பிடித்த தோழர்களைக் கைது செய்து, கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் என்னென்ன அடக்கு முறை ஆயுதங்களைக் கையாண்டனரோ, அதைவிடக் கேவலமான அடக்கு முறைகளை இவ்வாட்சியாளர்கள் கையாளுகின்றனர். என்றாலும் நாம் அஞ்சினோமில்லை. எங்கள் லட்சியம் ஈடேறும் வரை எதையும் எதிர்த்தே தீருவோம் என்ற உணர்ச்சியோடு தொடர்ந்து மறியலை நடத்தி வந்தோம். இடையில் ஹைதராபாத் பிரச்சினை குறுக்கிட்டது. ஆட்சியாளருக்கு ஒத்துழைப்பு காட்டும் வகையில் மறியலை ஒத்தி வைத்தோம்.

நாம் எதிர்பார்த்தபடியே ஹைதராபாத்தில் தலைகாட்டிக் கொண்டிருந்த அசம்பாவித ஆட்சியும் விரைவில் அழிந்து விட்டது. மீண்டும் இந்தி எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு தனி மனித மாநாட்டைக் கூட்டவேண்டுமென்று திருச்சியில் கூடிய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய நாட்களில் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டும், எதிர்பார்த்ததற்கு மேலும் மக்கள் வெள்ளம் திரண்டுவிட்டதால் போதுமான வசதிகள் செய்து கொடுக்க இயலாது போய்விட்டது.

நாம் எல்லோரும் சிறைச்சாலை நோக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இப்படி ஓர் அனுபவம், ஓர் ஒத்திகைபோல் அமைய நேர்ந்தது, மகிழத்தக்கதேயாகும்''.

மாநாட்டில் யார் படமும் இல்லை. படம் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் பேசவேண்டும். என்னே, பெரியாரின் சிக்கனம்!

முதல் நாள் இரவு எம்.ஆர். ராதாவின் "மகாத்மா தொண்டன்' நாடகம், இரண்டாம் நாள் இரவு "தூக்கு மேடை' நாடகம்.

தந்தை பெரியார் உரை

இந்த மாநாட்டில்தான் பெரியார் தமது பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன் என்று குறிப்பிட்டார். அவரது உரையின் ஒரு பகுதி:

""நான் பொதுத் தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனக்கோ வயது எழுபதுக்கு மேலே ஆகின்றது. எத்தனை நாட்களுக்குதான் இனியும் என்னால் உழைக்க முடியும்? என் உடல் நிலையும் சரியாக இல்லை. நம்முடைய கழகமோ நாம் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து பொது ஜன இயக்கமாகக் காட்சியளிக்கிறது. இதுவரை நான் ஒருவனே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று எதையும் நானே செய்யவேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலை நீடிப்பதை நான் விரும்பவில்லை. நமது இயக்கத்தில் பலர் இருக்கிறார்கள். கட்சியின் நலன் நாடி உழைக்க, ஏன் இன்றைய மாநாட்டின் தலைவர் அண்ணாதுரை ஒருவர் போதும், நமது கழகத்தை நடத்திச் செல்ல. அவர் படித்தவர் பகுத்தறிவுவாதி.  நல்ல எழுத்தாளர். பேச்சாளர்.  அத்துடன் உங்கள் அபிமானத்தைப் பூரணமாகப் பெற்றவர்.  வாலிபர்.  அவர் ஒருவரே போதும் நம்மை நடத்திச் செல்ல. என்னைப் பொறுத்தவரையில் நான் கூறுகிறேன், எனக்கு வயதாகிவிட்டது. வயதாகிய தந்தை தன் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்து விடவேண்டியதுதான் நியாயம். உலக நடைமுறையும்கூட. ஆகவே நான் இன்று எனது பெட்டிச் சாவியை அண்ணாத்துரையிடம் உங்கள் முன்னிலையில் கொடுத்து விடுகிறேன். எனவே தந்தை தன் கடமையைச் செய்து விட்டான். இனி தனயன் தன் கடமை, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்று பெரியார் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே குறிப்பிட்டார்.

அண்ணா தலைமையுரை

மாநாட்டுத் தலைவர் அண்ணா பேசுகையில் குறிப்பிட்டதாவது: ""போராட்டக் காலத்தில் அபிப்பிராய பேதங்களுக்கு இடமே இல்லை. மற்றபடி பெரியார் அவர்கள் பெட்டிச் சாவியை என்னிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். அவருக்குத் தெரியும். சாவி கிடைத்துவிட்டதே என்பதற்காக தவறாகவோ, அவசியம் இல்லாமலோ, அதை உபயோகித்துக் கொள்ள அண்ணாதுரை விரும்பமாட்டான். திறக்கும்போதுகூட தந்தையைக் கேட்டுக் கொண்டுதான் திறப்பான். தனக்கு வயது வந்த பிறகும் சாவி தந்தையிடமே இருந்தால் எவ்வளவு சாதுவான மகனுக்கும் சற்று அருவருப்பு ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் அப்படியொன்றும் கிளர்ச்சி செய்தவனல்ல நான். சாவி என்னிடம் இருந்தாலும் பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும் (குபீர் சிரிப்பு)

மேலும் இயக்கப் பணப்பெட்டியின் சாவியை அவர் என்னிடம் அளித்ததாக நான் கருதிக் கொள்ளவில்லை. மக்களுடைய உள்ளத்தின் சாவியை, சிறைச்சாலைப் பூட்டுச் சாவியை அதைத்தான் என்னிடம் ஒப்படைப்பதாக நான் கொள்கிறேன். அதை மிக மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் உபயோகித்து வருவேன்''.

இம்மாநாட்டிற்குப் பிறகு, தமிழர் சமுதாயம் மிகவும் மனநிறைவோடு இந்தியை எதிர்க்க ஆயத்தமாகியது. மேலும் கழகத்தில் இருந்து வந்த குழு மனப்பான்மையும் மறைந்தது. வடவர் ஆதிக்கத்தையும் இந்தித் திணிப்பையும் தகர்க்கக் கூடிய வல்லமை பெற்ற பாசறையாகக் கழகம் உருப்பெற்றது.

அழகிரி உருக்கம்:

ஈரோடு தனி மாநாட்டில் ஓர் உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. காசநோயால் மிகவும் உடல் நலிவுற்று மாநாட்டு மேடையில் பேசவந்த பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி மிகவும் உருக்கத்தோடு இரண்டொரு வார்த்தைகள் பேசினார்.

""எல்லாரும் இந்தியை எதிர்த்து சிறைக்குச் செல்லவேண்டிய தருணம். என் உடல் நிலையைப் பார்த்தால் அதுவரைகூட இருப்பேனோ? என்பது சந்தேகமாக இருக்கிறது. நான் இந்த நிலையிலும் மாநாட்டிற்கு வந்தது, என் தலைவருக்கு எனது கடைசி வணக்கத்தைத் தெரிவிக்கத்தான்'' என்று கூறியபோது மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த அனைவரும் கண் கலங்கினர்.

அண்ணா அழகிரியை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் கைவிட்டநிலையில் அழகிரி பட்டுக்கோட்டைக்கே  அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் அண்ணா ரூ.1000 உதவித் தொகையாக அளித்தார். தம்மைக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்போர் அழகிரியின் முகவரிக்கு ரூ.100 மணியார்டர் செய்து பெற்றுக் கொண்ட ரசீதை அனுப்பினால் கூட்டத்திற்குத் தேதி தருவதாக அறிவித்தார் அண்ணா.

சிலநாள் படுக்கையில் இருந்து அழகிரி மரணமடைந்தார். அழகிரி குடும்பத்துக்கு ஈ.வெ.கி. சம்பத் ரூ.1,000 நிதியுதவி அளித்தார். என்.எஸ். கிருஷ்ணன் நாடகம் நடத்தி ரூ.6,000 அளித்தார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT