முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!

நான் தையல் தொழிலாளி. எனது பாதம் இரண்டும் வலியாக உள்ளது. இடது கை விரல்களும் அதேபோல் உள்ளன. நரம்பியல், எலும்பு சிகிச்சை நிபுணர்களைப் பார்த்தும் பயனில்லை. என் உபாதையை எப்படி மாற்றுவது? என்.கனகராஜ், கோவில

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:05 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:19 PM

நான் தையல் தொழிலாளி. எனது பாதம் இரண்டும் வலியாக உள்ளது. இடது கை விரல்களும் அதேபோல் உள்ளன. நரம்பியல், எலும்பு சிகிச்சை நிபுணர்களைப் பார்த்தும் பயனில்லை. என் உபாதையை எப்படி மாற்றுவது?

என்.கனகராஜ், கோவில்பாளையம்.

"அம்சாஅம்சகல்பனை' என்று ஒரு சித்தாந்தத்தை ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறது. குணங்களின் சேர்க்கைக் கலவையான மனித உடலில், குறிப்பிட்ட சில குணங்களின் அளவை நாம் செய்கைகளாலும் உணவின் மூலமாகவும், வளரவிட்டுவிட்டால், இந்த அம்சம் இதனால் கூடிற்று என்று கூறுவதையே அம்சாஅம்ச கல்பனை என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கண்களுக்குப் புலப்படாத இந்தக் குணங்களின் வளர்ச்சியே நோயாகப் பரிணமிக்கிறது. உடலெங்கும் பரவியிருக்கும் இந்தக் குணங்களின் குவியல், பெருக்கெடுத்து வளரும்போது, உடல் உபாதைகளைத் தோற்றுவிக்கிறது.

அவற்றின் வளர்ச்சியை, அதன் செயல்களால் மட்டுமே நம்மால் உணர முடியுமே தவிர, எந்த ஆராய்ச்சியின் மூலமாகவும் அவற்றைக் கண்டறிய நம்மால் இயலாது. அந்த வகையில், உங்கள் உடலில் வாத தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி, லேசான தன்மை, நகரும் தன்மை போன்றவை தையல் எனும் தொழிலின் தொடர் உழைப்பினால் வளர்ச்சியுற்று, தசை, நரம்பு, எலும்பு ஆகிய பகுதிகளில் தாக்கி இருக்கிறது. இந்தத் தாக்கத்தை உணராமல் தொடர்ந்து தொழிலில் ஈடுபட, அது நிரந்தர உபாதைகளை உண்டாக்கி, மனித உடலை முடக்கிவிடுகிறது.

Advertisement

இதுபோன்ற ஒரு நிலையில் சீற்றமடைந்த தோஷத்தின் குணங்களைச் சாந்தப்படுத்தி, அவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளையும் நேராக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

வறட்சிக்கெதிரான நெய்ப்பும், குளிர்ச்சிக்கு எதிரான சூட்டையும்,லேசுக்கு எதிரான கனமான தன்மையையும், நகருதல் எனும் குணத்திற்கு எதிரான நிலையான தன்மையையும் மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் உங்களுடைய விஷயத்தில் பயன்படுத்தினால், உடல் உபாதையைக் குறைத்துவிடலாம். அந்த வகையில் நெய்ப்பும், சூடும், கனமான தன்மை கொண்டதுமாகிய விளக்கெண்ணைய்யை நீங்கள் காலை, மாலை வெறும் வயிற்றில், சுமார் 15 மி.லி. எடுத்து அரை கிளாஸ் சூடான பாலுடன் கலந்து சுமார் 1 வாரம் பருக, வயிற்றிலுள்ள வாயுவும் மலமும் நெகிழ்ந்து வெளியேறும்.

நரம்புகளிலும் தசைகளிலும் எலும்புகளிலும் குடிகொண்டுள்ள வாயுவின் குணங்களின் தாக்கம் குறைந்து, வலி எனும் உபாதையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

உடலுக்கு ஓய்வும் மிக அவசியம். நகரும் தன்மை, ஓய்வின்மூலம் நிலைபெறுகிறது. குடல் சுத்தமாகி, ஓய்வும் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தசை நரம்பு எலும்புகளிலுள்ள தாக்கம் குறைய, ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய அஸ்வகந்தா எனும் சூரணத்தை, காலை, இரவு உணவுக்கு முன், சுமார் 5-8 கிராம் எடுத்து, அரை கிளாஸ் சூடான சர்க்கரை கலந்த பாலுடன் சாப்பிட, மிகவும் நல்லது. குறைந்தது 21 நாட்களாவது இந்த மருந்தைச் சாப்பிட வேண்டும்.

மூலிகைத் தைலமாகிய பலா அஸ்வகந்தாதி அல்லது மஹாமாஷ தைலத்தையோ உடலெங்கும் வெதுவெதுப்பாகத் தடவி, வெந்நீரில் குளிப்பது, உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை சற்று கூட்டி, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை குறைத்துக் கொள்வது போன்றவை உபாதையிலிருந்து மீள்வதற்கான நல்ல வழிகளாகும். முன் குறிப்பிட்ட சாதாரண விளக்கெண்ணெய்க்கு மாற்றாக, ஆயுர்வேத மூலிகை மருந்துகள் காய்ச்சி தயாரிக்கப்பட்ட கந்தர்வஹஸ்தாதி எனும் விளக்கெண்ணெயையும் நீங்கள் பயன்படுத்திக் குணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.