திரையுலகில் அறிமுகமானது முதல் திருமணமானது வரை முன்னணி நடிகையாகவே கோலோச்சிய அமலா, இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான சேகர் கம்முலா இயக்கும் "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ளார். "மகன் அகில் வளரும் வரை நடிக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்; இப்போது அவன், தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் அளவுக்கு நன்கு வளர்ந்துவிட்டான். அதனால் மீண்டும் நடிக்கிறேன்' என்று கூறியிருக்கிறார் அமலா. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டில் பேசிய அமலாவின் கணவரும் நடிகருமான நாகார்ஜுன் ""அமலா மீண்டும் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். ஆனால் இந்தப் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என்பது எனக்கு தாமதமாகத்தான் தெரியும். முன்பே தெரிந்திருந்தால் நடிக்க அனுமதித்திருக்க மாட்டேன். அம்மா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அமலாவுக்கு இன்னும் வயதாகிவிடவில்லை. படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போதே இதைப் புரிந்துகொள்ளலாம்'' என பேச, அரங்கில் எழுந்த கரவொலியால் அமலாவின் முகம் சிவந்தது.
சீனிவாசன், ரகுமான் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன "டிராஃபிக்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ராதிகா. புதியவர் சாஜித் காதிர் இயக்கும் இந்தப் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் இணைந்து நடிக்கிறார் ராதிகா. மேலும் பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதுவரை நாற்பத்து ஒன்பது படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய 50 வது படத்தை இயக்குகிறார். சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு "அமைதிப்படை 2' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடித்தட்டு அரசியல் முதல் அலைவரிசை ஊழல் வரை அனைத்தையும் "அப்டேட்'டாக பிரித்து மேயப்போகிறதாம் இந்தக் கூட்டணி.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்கள் அனைத்திலும் தலை காட்டியுள்ள மும்பையின் பிரபல மாடல் ஷீத்தல் மல்லர், இதுவரை தனக்கு வந்த ஏராளமான பட வாய்ப்புகளை மறுத்து வந்தார். யார் யாரோ பேசிப் பார்த்தும் மசியாத மல்லர், ஜான் ஆப்ரஹாமின் அன்பு அழைப்புக்கு இணங்கி "ஜாஃப்னா' என்ற படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். நாற்பது வயதை நெருங்கினாலும் ஷீத்தல் மல்லரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் படம் "இங்கிலீஷ் விங்கிலீஷ்'. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் பால்கியின் மனைவி கெளரி ஷிண்டே இயக்கும் இந்தப் படம் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் டப் செய்யப்படுகிறது. ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பதிப்பில் அமிதாப் பச்சன் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் முக்கிய வேடத்தில் நடிக்க ரஜினியிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் மறுத்துவிட அஜித், மாதவன் ஆகியோரிடம் கேட்டிருக்கிறார்கள். "நீங்கள் பேசினால் கமல் சம்மதிப்பார்' என படக்குழுவினர் ஸ்ரீதேவியிடம் கூறியிருக்கிறார்கள். யோசனையில் இருக்கிறாராம் ஸ்ரீதேவி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "நான்'. மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் ஜீவா சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரூபா மஞ்சரி, அனுயா, விபா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தின் முன்னோட்டத்தில் விஜய் ஆண்டனியைப் பற்றி புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இசையமைப்பாளரிலிருந்து நடிகராக, தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ள விஜய் ஆண்டனி, தமிழின் முதல் புதினமான "பிரதாப முதலியார் சரித்திரம்' படைத்த மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் கொள்ளுப் பேரன் வழி உறவினர் என்பது கூடுதல் தகவல்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாகவுள்ள காஜல் அகர்வால், மும்பை நரிமன் சாலையில் பிரமாண்டமான குடியிருப்பை வாங்கியிருக்கிறார். இதற்காக பிரபல சமையல்காரர் ஒருவரை நியமித்து அண்மையில் மும்பை பிரபலங்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.
விஜய் டி.வி.யில் "இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருநங்கை ரோஸ் வெங்கடேசன், கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து "கிரிக்கெட் ஸ்கேண்டல்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். மொழி மாற்றத்துடன் தமிழிலும் படம் வெளியாகிறது. இந்தியாவில் முதல் திருநங்கை இயக்குநர் என்ற பெருமையைப் பெறும் ரோஸ், சத்யபாமா கல்லூரியில் மெக்கானிகல் என்ஜினீயரிங்கும் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கலும் படித்தவர்.
வரலாற்றுப் பின்னணியை மையமாகமாகக் கொண்டு ரூபா ஐயர் இயக்கும் "சந்திரா' என்ற படத்தில் கணேஷ் வெங்கட்ராமனுடன் நடிக்கிறார் ஸ்ரேயா. புதுமுக நடிகர்களுடன் நடிக்கிறீர்களே, பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வரவில்லையா? என்று கேட்டால்... ""ரஜினி சாருடனேயே நடித்து விட்டேன். அது போதும்; இனி யாருடன் நடித்தால் என்ன?'' என்கிறார்.
மனோஜ்கிருஷ்ணா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.