திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார் வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான கதை விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின் அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. ""முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் காமெடி சற்று தூக்கலாக இருக்கணும்'' என சொல்லி அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
-------------------------------------------------
இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார் த்ரிஷா. "தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் விஷால் கேட்ட போது கூட மறுத்து விட்டார். தற்போது பாலிஸியை மாற்றிக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் "ரம்' என்ற படத்தில் நடிக்கிறார். "ரம்பா ஊர்வசி மேனகா' என்பதன் சுருக்கமே "ரம்'. மற்ற இரண்டு ஹீரோயின்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
-------------------------------------------------
பிந்து சாகர் என்றால் சிலருக்குப் புரியாது. பிந்து மாதவி என்றால் சட்டெனப் புரியும். சாகர் என்பது அவரின் அண்ணனின் பெயர். ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருந்த அவர், சாலை விபத்தில் இறந்து போக, அவரின் நினைவாக சாகர் என்பதை பிந்துவுடன் இணைத்துக் கொண்டார். "வெப்பம்', "கழுகு', "சட்டம் ஒரு இருட்டறை' படங்களை முடித்துள்ள பிந்து சாகர் தன் அண்ணனின் நினைவாக கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பத்து குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
-------------------------------------------------
ஜல்லிக்கட்டால் ஏற்படும் விபரீதங்களை பின்னணியாக்கி உருவாகி வரும் படம் "பூர்வகுடி.' ""தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டால் பல குடும்பங்கள் தங்கள் தலைவனை இழந்து விடுகிறது. அதன் பின் அந்த குடும்பத்தின் நிலை, அவர்களின் வறுமை, குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கம் இவற்றையெல்லாம் கதையின் அம்சங்களாக வைத்திருக்கிறேன்'' என்கிறார் புதுமுக இயக்குநர் இப்ராஹீம். ஜல்லிக்கட்டு போட்டியில் தற்காப்புடன் எப்படி பங்கேற்பது என்பதையும் சொல்ல வருகிறதாம் இப்படம்.
-------------------------------------------------
"தாமிரபரணி' படத்தின் மூலம் அறிமுகமான பானு, குடும்ப பிரச்னை காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் வசந்த் இயக்கும் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார். ""என் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னை தீர்ந்து விட்டது. அதனால் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கி இருக்கிறேன். மூன்று பக்க வசனத்தை எழுதி அதை மனப்பாடம் செய்ய சொன்னார் வசந்த். பின் அதை நாகர்கோவில் வட்டார வழக்கு மொழியில் பேசச் சொன்னார். அதன் பின்புதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்'' என்கிறார் பானு.
-------------------------------------------------
தேடல்தான் வாழ்க்கை. அந்த தேடல் காதல், நட்பு, பணம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியான தேடலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகும் படம் "சார்லஸ் ஷபிக் கார்த்தி'. பிரகாஷ்ராஜின் உதவியாளர் சத்தியமூர்த்தி இப்படத்தை எழுதி இயக்குகிறார். "இனிது இனிது' படத்தில் நடித்த விமல், நாராயணன், மிஷால் நடிக்கின்றனர். "ஆரோகணம்' படத்தில் நடித்த ஜெய் குகைனி ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
-------------------------------------------------
ராம்சரண் தெலுங்கில் நடித்து வெற்றிப் பெற்ற படங்கள் தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. "மாவீரன்', "ரகளை', "சிறுத்தைப்புலி' ஆகிய படங்களின் வரிசையில் வெளியாக உள்ள படம் "நாயக்'. தெலுங்கில் மிகப் பெரும் ஹிட்டடித்த இப்படத்தில் காஜல் அகர்வால், அமலாபால் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் பிரபலமான வி.வி. விநாயக் இப்படத்தை இயக்கியுள்ளார். 300 கார்களின் முகப்பு வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டை காட்சி படத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள். ஜனவரி -9ம் தேதி இப்படம் வெளிவருகிறது.
-------------------------------------------------
சூர்யா - ஜோதிகா நடிப்பில் "சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா எழுதி இயக்கும் படம் "நெடுஞ்சாலை.' ஆரி கதாநாயகனாகவும், ஷிவிதா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ""நெடுஞ்சாலை பயணங்கள் எப்போதுமே நிறைய அனுபவங்களைத் தருவதுண்டு. அப்படியான ஒரு பயணத்தில் நான் பார்த்த காட்சிகளைத்தான் இந்த கதையில் தொகுத்திருக்கிறேன். பின்னணியில் ஒரு காதலை வைத்து கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன். அமைதியான பயணங்களில் சட்டெனக் கடந்து போகும் சில காட்சிகள் எவ்வளவு அதிர்ச்சியானது என்பதை எதார்த்தத்துக்கு பக்கத்தில் படம் பிடித்திருக்கிறேன்'' என்கிறார் கிருஷ்ணா.
-------------------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.