முகப்பு
தினமணி கதிர்

அரச குடும்பத்து புகைப்படக் கலைஞர்

டப்ளின் நகரில் 1853-ம் ஆண்டு எட்மண்ட், லாடர் என்ற புகைப்பட ஸ்டுடியோ ஒன்றைத் துவங்கினார். வியாபாரம் சூடு பிடித்தது. 1880-ம் ஆண்டில் எட்மண்டின் மூத்த மகன் ஜேம்ஸ் லாஃபாயெட் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

டப்ளின் நகரில் 1853-ம் ஆண்டு எட்மண்ட், லாடர் என்ற புகைப்பட ஸ்டுடியோ ஒன்றைத் துவங்கினார். வியாபாரம் சூடு பிடித்தது. 1880-ம் ஆண்டில் எட்மண்டின் மூத்த மகன் ஜேம்ஸ் லாஃபாயெட் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 1887-ம் ஆண்டில் விக்டோரியா மகாராணியை புகைப்படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அரச பரம்பரையினரின் புகைப்படக்காரர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. லண்டனில் ஸ்டுடியோ 1898-ம் ஆண்டில் துவங்கப்பட்டதை தொடர்ந்து இவர் மேலும் பிரபலமாகவே பங்கு சந்தையில் லாஃபாயெட் ஸ்டுடியோ பங்குகள் விற்பனையிலும் ஈடுபட்டது. அடுத்து கிளாஸ்கோ, மான்செஸ்டர், பெல்பால்ட் போன்ற நகரங்களில் லாஃபாயெட் கிளைகள்.

 அரச பரம்பரையினர் மட்டுமன்றி பல்வேறு நாட்டு மன்னர்களும் இங்கு வந்து புகைப்படமெடுத்துக் கொள்வதை கெüரவமாகக் கருதினர். இந்தியாவில் இருந்த மகாராஜாக்களும் லண்டன் சென்றால் இவரிடம் புகைப்படமெடுத்துக்கொள்ள விரும்பினர். அப்போது இந்தியா, பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்ததால் இங்கிலாந்தில் நடந்த அரச பரம்பரையினர் விழாக்களில் பங்கேற்க கெüரவ விருந்தினர்களாகச் செல்லும் போதெல்லாம் லாஃபாயெட் ஸ்டுடியோவில் புகைப்படமெடுத்துக் கொண்டனர். இங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை மேல் நாட்டு பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்தன.

 அனைத்துப் புகைப்படங்களும் காலபெட்டகமாகவும் வரலாற்று சான்றுகளாகவும் மாறின. இந்திய அரச பரம்பரையினரின் அரிய புகைப்படங்களின் தொகுப்பை "லாஃபாயெட் ஸ்டுடியோ அண்ட் பிரின்ஸ்லி இந்தியா' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து சில புகைப்படங்களும் குறிப்புகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

 கேத்ரி ராஜா அஜித்சிங் (1864-1900)

 விக்டோரியா மகாராணியின் வைர விழாவில் பங்கேற்கச் சென்ற அஜித்சிங் 1897-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி லாஃபாயெட் ஸ்டுடியோவில் பல்வேறு பின்னணியில் வித்தியாசமான உடைகள் அணிந்து ஏராளமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அப்போது லண்டன் வந்த அயல்நாட்டுப் பிரமுகர்கள் குறித்து எழுதிய "இல்லஸ்ட்ரேட்டர் லண்டன் நியூஸ்' இவரைப் பற்றி குறிப்பிடுகையில் ஒரு மாநிலத்தையே நிர்வகித்து வரும் இவருக்கு சொந்தமாக ஆறு வீடுகள் இருந்தாலும் இவரது முன்னோர்கள் ராணுவத்தில் சேவை செய்ததற்காக வாடகை கிடைக்கும் வகையில், பிரிட்டிஷ் அரசு வழி செய்து கொடுத்துள்ளது என்று எழுதியது. இவர் சுவாமி விவேகானந்தரின் சிறந்த நண்பராகவும் தீவிர சீடராகவும் விளங்கினார்.

 பாபா கெம் சிங் பேடி (1830-1905)

 சீக்கியர்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் குருநானக்கின் நேரடி வாரிசும் பதினான்காவது மதகுருவுமான பாபா கெம் சிங் பேடி, சிக் ரெஜிமன்ட்டில் சீக்கியர்கள் சேருவதற்கான ஊக்கத்தையும் ராணுவ உணர்வையும் ஏற்படுத்தித் தந்தார். அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்ற பரந்த மனப்பான்மை காரணமாக பஞ்சாப்பில் 50-க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களை திறக்க உதவினார். 1893-ம் ஆண்டில் அவரது மகள் திருமணத்தின்போது மூன்று லட்சம் ரூபாயை மதம் தொடர்பான அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்தார். இதில் பாதித்தொகை ராவல்பிண்டியில் கல்லூரி ஒன்றை நிறுவப் பயன்படுத்தப்பட்டது. 1902-ம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது பஞ்சாப்பின் பிரதிநிதியாக பங்கேற்க இங்கிலாந்து சென்றபோது எடுத்த புகைப்படம் இது.

 மார்வி மகாராஜா

 லுக் திர்ஜி பகதூர் (1876-1957)

 மார்வி யுவராஜ்

 மகேந்திர சிங் ஜி (1918-1957)

 குஜராத் மன்னர் முசாபிர் வேட்டைக்கு சென்றிருந்போது அவரைக் கொல்ல வந்த புலியிடமிருந்து காப்பாற்றிய ராஜபுத்ர அதிகாரி கெங்கார்ஜிக்கு நன்றிக்கடனாக "ராஜா' என்ற பட்டத்தை அளித்ததோடு அவரது எடைக்கு ஏற்ப தங்கம், நகைகளை பரிசாக அளித்தார் முசாபிர். சம்பவம் நடந்த பகுதியான மார்வி பகுதிக்கு மன்னராக்கியதோடு அப்பகுதியை மன்னராட்சி மாநிலமாகவும் அறிவித்தார். ஆனால் அவருக்குப் பின் வரும் சந்ததியினர், மன்னரைப் போலவே முஸ்லிம் தாடி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். அதற்கான காரணம் தெரியவில்லை. என்றாலும் மகாராஜா லுக் திர்ஜி பகதூரும் இளவரசர் மகேந்திர சிங் ஜியும் மார்வி கலாசாரத்தை பின்பற்றி தாடி வைக்காமல் மழுங்க சவரம் செய்திருந்தனர். இந்தப் படம் 1933-ம்

 ஆண்டு எடுக்கப்பட்டது.

 ராஜா ரண்பீர் சிங் மகாராஜா

 சிந்த் மகாராஜா (1879-1948)

 தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு 8-ம் வயதிலேயே சிந்த் மன்னராக முடிசூட்டிக்கொண்ட சர் ரண்பீர்சிங், ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்ததால் "ராஜா. இ.ராஜ கன்' என்ற கெüரவ பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் ரண்பீர் சிங் தனது இரு இந்திய மனைவிகளை ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய விமானியொருவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டதால் வைஸ்ராயின் நம்பிக்கையை இழந்தார். வேல்ஸ் இளவரசரை (பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்) லாகூரில் சந்தித்த பின் ஓராண்டு கழித்து 1906-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம்

 தேதி எடுத்த புகைப்படம் இது.

 ராணி அம்ருத்கவுர் சாகேப்

 கபுர்தாலா மகாராஜா சர் ஜெகஜித் சிங் பகதூரின் மூன்றாவது மனைவி ராணி பிரேம்கவுர் என்கிற அனிதா டெல்காடோவின் (இவர் பிளெமிங்கோ நடனக்காரியும், உளவுக்காரியுமான மாட்டா ஹாரியின் தோழியாவார்) ஒரே மகள்தான் அம்ருத்கவுர். இவர்களது திருமணம் ஸ்பெயின் நாட்டில் நடந்தபோது ஜோடிப்பொருத்தம் குறித்து பலரும் ஆச்சரியத்துடன் விமர்சித்தனர். ராணி அம்ருத் கவுர் லண்டன் சென்றிருந்தபோது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் குயின் மேரியும் இவரை அரண்மனைக்கு விருந்தினராக அழைந்தனர். இவரது தந்தை ஆண்டு வருமானத்தில் கால் பங்கை தனக்காக முத்துக்களையும் வைரங்களையும் வாங்கிக் குவித்ததற்கு எதிர்மாறாக, இவர் நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினார். 1924-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி எடுத்த புகைப்படம் இது.

 லேடி மெஹர் பாய் டாடா

 1898-ம் ஆண்டு டாடா சன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்களின் தலைவரான சர் ஜாம் ஷெட்ஜி டாடாவை திருமணம் செய்து கொண்ட மெஹர் பாய் 1932-ம் ஆண்டில் ரத்தபுற்றுநோய் காரணமாக இறந்துபோனார். இவரது பெயரில் வெளிநாட்டில் சென்று சமூகசேவை பட்டப்படிப்பு பயில முடியாத பெண்களுக்காக "லேடி மெஹர் பாய் டாடா எஜூகேஷன் டிரஸ்ட்' என்றும், ரத்தம் தொடர்பான வியாதிகளை ஆய்வு செய்ய "லேடி டாடா மெமோரியல் டிரஸ்ட்' என்றும் இரண்டு சமூக சேவை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஜாம் ஷெட்ஜி டாடா வருமானத்தில் மனித நோய்கள் குறித்து ஆய்வு நடத்தும் சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

 கூச் பீகார் மகாராணி சினிட்டி தேவி (1864-1932)

 கூச் பீகார் இளவரசர்கள் (இடமிருந்து வலம்) மகராஜ் ஜிதேந்திரா நாராயண் (1886-1922), லெப்டினட் கர்னல் மகராஜ் குமார் ஸ்ரீவிக்டர் நிதேந்திரா (1887-ம் ஆண்டு பிறந்த இவர் ஆஸ்டர்லே நகரில் கார் விபத்தில் 1937-ம் ஆண்டு மரணமடைந்தார்.) மகராஜ் ராஜ் ராஜேந்திர நாராயண் (1883-ம் ஆண்டு பிறந்த இவர் பிரம்மச்சாரியாகவே நார்போக் நகரில் 1913-ம் ஆண்டு காலமானார்.) லெப்டினன்ட் கர்னல் மகராஜ் குமார் ஸ்ரீ ஹிதேந்திரா நாராயண் (1890-1920).

 மகாராணி சினிட்டி தேவி தனது வாழ்க்கை வரலாற்றில் தன் குழந்தைகள் ஈடனில் படிக்க அனுப்பப்பட்டது குறித்து எழுதுகிறார். ""மகாராஜா தன்னுடைய மகன்கள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டுமென்பதற்காக லண்டனுக்கு அனுப்புவது தான் சிறந்ததென்று கருதினார். ஆனால் இந்திய மொழிகளை கற்க முடியவில்லையே என்ற வருத்தம் என் மகன்களுக்கு பிற்காலத்தில் தோன்றியது. இந்தியா திரும்பும்போது கிரீக், பிரெஞ்ச் மொழிகளை கற்றுவந்த அவர்களுக்கு சமஸ்கிருதம், உருது, கூச்பீகார் மொழிகளில் சரளமாக பேசத் தெரியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

 இந்த புகைப்படங்கள் 1901-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி எடுக்கப்பட்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.