தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழுத்தைச் சுற்றிலும் மரு... வறண்ட தோல்...என்ன செய்யலாம்?

என் வயது 25. சில சரும பாதிப்புகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. கழுத்தின் பின்பகுதி, அக்குள், தொடை, முட்டிப் பகுதிகள் அடர் கருப்பாகவும், தோல் வறண்டும் தடித்துப் போயும் உள்ளன. கடுகு போன்ற சிறு ச

எஸ். சுவாமிநாதன்

என் வயது 25. சில சரும பாதிப்புகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. கழுத்தின் பின்பகுதி, அக்குள், தொடை, முட்டிப் பகுதிகள் அடர் கருப்பாகவும், தோல் வறண்டும் தடித்துப் போயும் உள்ளன. கடுகு போன்ற சிறு சிறு மருக்கள் புதிது புதிதாகக் கழுத்தைச் சுற்றிலும், அக்குள் பகுதியிலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் 3 மாதங்களில் எனக்குத் திருமணம். இவை மாற வழி என்ன?

வாசகி, திருச்சி-8.

தோல் உபாதைகள் ஏற்படுவதற்கான காரணங்களை சரக ஸம்ஹிதை எனும் நூல் மிக விரிவாக விவரித்திருக்கிறது. உணவு மற்றும் தவறான செயல்களால் வாத - பித்த - கப தோஷங்கள் சீற்றமடைந்து தோல் அல்லது ரஸதாது - மாம்ஸம் - சோணிதம் எனும் ரத்தம் -லஸீகா எனும் நிணநீர் ஆகியவற்றைக் கேடடையச் செய்து, தோலில் பல விகாரமான உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன.

செரிமானம் சரியாக இல்லாத நிலையில் தேன், வெல்லப்பாகு, மீன், முள்ளங்கி, மணத்தக்காளி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுவது, மீனுடன் பால் சேர்த்துச் சாப்பிடுவது, கொள்ளுடன் தயிர், உளுந்து போன்றவற்றைச் சேர்ப்பது இவற்றை உணவாக ஏற்ற பிறகு உடலுறவு, உடற் பயிற்சி, வெயிலில் சுற்றித் திரிதல் போன்றவற்றைச் செய்வது, மனதளவில் பயம், சோர்வு, துக்கம் போன்றவற்றால் பாதித்த நிலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது, சீரணமாகாத உணவு வயிற்றிலுள்ள நிலையில், உடலில் எரிச்சலைக் கூட்டும் புளியோதரை, புளித்த ஊறுகாய், தயிர்சாதம் போன்றவற்றைச் சாப்பிடுவது, குமட்டிக் கொண்டு வரும் வாந்தியை வலுக்கட்டாயமாக அடக்குவது, உடலில் வறட்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகமான அளவில் எண்ணெய்ப் பசைப் பொருட்களை உள்ளும் புறமும் உபயோகிப்பது போன்ற சில காரணங்களால் வாத, பித்த, கப தோஷங்கள் சீற்றமுற்று முன் குறிப்பிட்ட தோல், மாம்ஸம் போன்ற பகுதிகளைக் கெடுத்துத் தோல் உபாதைகளை உண்டாக்குகின்றன.

நீங்கள் குறிப்பிடும் அறிகுறிகளில் பலதும் வாத தோஷத்தின் அபரிமிதமான தாக்கத்தால் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. வாதோத்தரேஷு சர்ப்பி: அதாவது வாத சீற்றத்தில் நெய்யே முக்கிய மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்று சரகர் குறிப்பிடுகிறார். திக்தகம் - மஹாதிக்தகம் - குக்குலுதிக்தகம் போன்ற நெய் மருந்துகளில் ஒன்றை மட்டும் ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் தேர்வு செய்து தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட, தோலில் ஏற்பட்டுள்ள கறுப்புநிறம், வறட்சி, தடிப்பு, மருக்கள் ஆகியவை மங்கத் தொடங்கும். மாணிபத்ரம் எனும் லேஹிய மருந்தை அதன் பிறகு நக்கிச் சாப்பிட, நீர்ப்பேதியாகி குடல் சுத்தமாகிவிடும். அதன் பிறகு, கந்தக பஸ்மம் சிட்டிகை எடுத்து நெல்லிக்காய்ச் சாறு மற்றும் சிறிது தேனுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, ஒரு சிறந்த தோல் உபாதைக்கான நிவாரணியாக வேலை செய்யும். எளிதில் செரிக்கக் கூடிய, வீட்டில் மட்டுமே சுத்தமாகத் தயாரிக்கக் கூடிய உணவுவகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும். கசப்பான கறிகாய்களை அதிகம் உணவாக ஏற்பது நலம். பச்சைப் பயறு, புடலங்காய் சாப்பிட நல்லது. எளிதில் செரிக்காதவை, புளிப்பான உணவு வகைகள், பால், தயிர், மீன், வெல்லம், எள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, அரசம்பட்டை, கருங்காலிக்கட்டை, சரக்கொன்னப்பட்டை, ஏழிலைப்பாலைப் பட்டை ஆகியவற்றில் எதெல்லாம் கிடைக்குமோ, அவற்றைக் கொண்டு தண்ணீரைக் கொதிக்க வைத்து படை, மரு ஆகிய பகுதிகளில் ஊற்றி நன்றாகத் தேய்த்துக் குளிக்கவும். வாகை மரப்பட்டையை விழுதாக அரைத்தோ உடலின் அல்லது இலவம்பஞ்சு மரத்தின் பூக்களை அரைத்தோ உடலின் மேல் பூசிக் குளித்து நம் முன்னோர் தோல் உபாதைகளிலிருந்து நிவாரணம் அடைந்ததாகவும் சரக ஸம்ஹிதையில் குறிப்பு காணப்படுகிறது. பசுவின் சிறுநீரில், வேப்பம் பட்டை, வாயுவிடங்கம் ஆகியவற்றை அரைத்துப் பூசுவதும் நல்லதே.

கருங்காலிக் கட்டையும், வாயுவிடங்கத்தையும் பொடி செய்து சிறிய உணவில் உணவுப் பதார்த்தங்களுடன் கலந்து சாப்பிடுவதாலும், தோலின் மேல் தெளிப்பதையும் புகைக்கச் செய்து உடலில் காட்டுவதாலும், வேப்பெண்ணெயில் குழைத்து உடலில் பூசுவதாலும், பலவிதமான தோல் உபாதைகளிலிருந்து நம்மால் விடுதலை பெற முடியும்.

நால்பாமராதி தைலம் - தினேசவல்யாதி, ஏலாதி தைலம், நிம்பாதி தைலம், தூர்வாதி, அய்யப்பாலா தைலம் போன்ற சிறந்த தோல் உபாதைக்கான தைலங்களும் தயாரித்து விற்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டை பயன்படுத்தியும் நீங்கள் விரைவாக குணம் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT