தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹார்மோன் சுரப்பிகளை இயற்கையாகத் தூண்டி விட..!

என் வயது 23. என் தாயின் கருவில் உருவான காலத்தில் என்னைக் கலைக்க எண்ணி மூன்று ஊசிகளைப் போட்டுள்ளனர். இருந்தும் நான் பிறந்துவிட்டேன். கிட்டப் பார்வைப் பிரச்னையால் கண்ணாடி அணிந்துள்ளேன். ஹார்மோன் மாத்திர

எஸ். சுவாமிநாதன்

என் வயது 23. என் தாயின் கருவில் உருவான காலத்தில் என்னைக் கலைக்க எண்ணி மூன்று ஊசிகளைப் போட்டுள்ளனர். இருந்தும் நான் பிறந்துவிட்டேன். கிட்டப் பார்வைப் பிரச்னையால் கண்ணாடி அணிந்துள்ளேன். ஹார்மோன் மாத்திரைகள் எடுத்தால் மட்டுமே மாதவிலக்கு வருகிறது. 75 கிலோ எடை. அதிக வியர்வை. கோடையில் மண்டை தெறிக்கும் அளவுக்குத் தலைவலி. முடி குட்டையாக இருக்கிறது. வார நாட்களில் காரக் குழம்பு, சாம்பார், கீரை சாப்பிடுகிறேன். வார இறுதியில் மீன், ஆட்டிறைச்சி உண்ணுகிறேன். எனது பிரச்னைகள் தீர வழியிருக்கிறதா?

ஒரு வாசகி, பெரியபாளையம்.

கருவைக் கலைப்பதற்காக எடுக்கும் முயற்சியால், அங்க சிதைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு அப்படி ஏதும் நிகழவில்லை என்றாலும், நீங்கள் குறிப்பிடும் பல உபாதைகள், கருக்கலைப்புக்கான வீர்யமிக்க மருந்துகளால் ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மாதவிலக்கு என்பது பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்பட வேண்டியது அவசியம். அதை வலுக்கட்டாயமாக ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வரவழைத்தால், பலவிதமான பக்கவிளைகள் ஏற்படலாம். ஹார்மோன் சுரப்பிகளை இயற்கையாகத் தூண்டிவிடும் எளிய பயிற்சிமுறை - இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம் பொரித்து, உச்சந்தலையில் காலையில் அரை - முக்கால் மணி நேரம் ஊறவிடுவதே. அடிவயிற்றில் வெதுவெதுப்பாக விளக்கெண்ணெய் தேய்த்து ஊறி, வெந்நீரில் குளிப்பது, அன்றைய தினம் சூடான சாதம், மிளகு ரசம், சோம்பு, மிளகு, தேங்காய் அரைத்துவிட்ட புடலங்காய்க் கூட்டு, கறிவேப்பிலைத் துவையல், மோர் என்ற வகையில் சாப்பிடுவது நல்லது. மூளையிலிருந்து சுரக்கும் ஆக்ஸிடாசின், கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யும் தன்மையுடையது. மேற்படி தைலமுறையால் நன்றாகச் சுரக்கும். விளக்கெண்ணெய் தேய்ப்பு முறையால், ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்ட்ரோன் சுரப்பிகள் செயல்பாடு மேம்படும்.

திரிபலா சூரணம் என்று ஒரு மருந்து இருக்கிறது. சுமார் 5 கிராம் அளவில் இந்த சூரண மருந்துடன் 10 மி.லி. சுத்தமான தேன் குழைத்து காலை, இரவு உணவுக்குப் பிறகு, நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரு நன்மைகள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றன. முதலாவதாக கண்பார்வை தெளிவாகும். இரண்டாவதாக, உடலில் தேவையற்ற தசைக் கொழுப்பைக் கரைத்துவிடும். இந்த மருந்தைச் சாப்பிடும்போது, கட்டை சந்தனத்தை இழைத்து, பன்னீர் கலந்து நெற்றியில் பற்று போட்டால், கோடை

தலைவலி நீங்கிவிடும்.

கரிசலாங்கண்ணிச் சாறை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் நீலிபிருங்காதி தைலம் - கையெண்யாதி தைலம் - பிருங்காமலக தைலம் போன்றவற்றில் ஒன்றை, ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, முடி நீளமாக வளர வாய்ப்பிருக்கிறது.

வார இறுதியில் மீன், ஆட்டிறைச்சி என்றெல்லாம் சாப்பிட்டு, பகலில் படுத்துத் தூங்கினால் உடல் பருத்துவிடும். ஒரு மாமிச உணவை நாம் சாப்பிட்டால், நம் உடலிலுள்ள மாமிசம் கூடுவது இயற்கைதான். அதனால் நீங்கள் அசைவ உணவைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நலம். காய்கறி, கீரை, பழங்கள் என்ற வகையில் அமைத்துக் கொள்வதே நல்லது.

காரக் குழம்பு குடலில் சூட்டைக் கிளப்பும். அதனால் உணவின் அளவானது சாப்பிடும்போது கூடிவிடக் கூடும். உடல் பருமன்,, அதிக வியர்வை, பார்வைக் கோளாறு என்ற வகையில் உபாதைகள் தொடரக் கூடும். மனம் உவந்து ஏற்கும் சிலவற்றை இதமானதல்ல என ஒதுக்க வேண்டும். மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டும் போதாது. பரிணாமத்திலும் அதன் பின் விளைவு நன்மை தருவதாக இருக்க வேண்டும். அதனால் வார நாட்களில் சாம்பார், ரசம், மோர் என்ற வகையில் நீங்கள் உணவை அமைத்துக் கொள்வதே நலம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT