தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கால் நரம்புகள் சுண்டி இழுத்தால்

எனக்கு சுமார் 3 -4 வருடங்களாக இரவில் தூங்கும்போது, கால்களில் நரம்பு சுண்டி இழுக்கிறது. கால் விரல்கள் சில சமயம் கோணிக் கொண்டு அப்படியே நின்றுவிடுகிறது. வலி தாங்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது முக்க

எஸ். சுவாமிநாதன்

எனக்கு சுமார் 3 -4 வருடங்களாக இரவில் தூங்கும்போது, கால்களில் நரம்பு சுண்டி இழுக்கிறது. கால் விரல்கள் சில சமயம் கோணிக் கொண்டு அப்படியே நின்றுவிடுகிறது. வலி தாங்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது முக்கியமாக தொடைகளில் வலி உயிர் போகிறது. உடனே எழுந்து நடக்க வேண்டியிருக்கிறது. ஏதாவது தைலத்தைத் தடவி நீவி விட்டுச் சிறிதுநேரம் கஷ்டப்பட்டு நடந்து கொண்டேயிருந்தால் பிறகு நார்மலுக்கு வருகிறது. இதற்கு நிரந்தரமாகத் தீர்வு ஏற்பட ஆயுர்வேதத்தில் மருந்து உண்டா?

ஆர்.கோமளா, தாம்பரம், சென்னை.

முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து கிளம்பும் நரம்புகள், பின் தொடை வழியாகவும், முன் தொடை வழியாகவும் கிளைகளாகப் பிரிந்து கால்களின் கீழ்ப் பகுதி வரை பரவுகின்றன. ஆயுர்வேதத்தின் மூலமாக இதற்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. அபானம் எனும் ஒரு வாயு இடுப்பின் கீழ்ப் பகுதியில் தங்கி, சிறுநீர்ப்பை, இடுப்பின் பின்பக்கம், ஆண் அல்லது பெண் குறி, விதைகள், தொடை இடுக்குகள், தொடைகள் இவற்றில் உலவுகின்றது. மலம், சிறுநீர், விந்து, மாதவிடாய், கரு இவை உடலில் உறைதல், இவற்றை வெளிப்படுத்துதல் போன்ற செயல்களைச் செய்கிறது.

தரையில் அதிக நேரம் கூன் போட்டு அமர்ந்து கொண்டு கறிகாய் நறுக்குவது, எழுதுவது, கைகளைத் தரையில் ஊன்றி எழாமல் அப்படியே தரையிலிருந்து எழுந்து கொள்ளுதல், சில்லிட்ட தரையில் கீழ் இடுப்புப் பகுதி படும்படி படுத்துறங்குதல், வயிற்றில் வாயும் சேரும் உணவுப் பண்டங்களாகிய உருளைக் கிழங்கு பொடிமாஸ், பருப்பு சாம்பார், வாழைக்காய்ப் பொரியல், வறுத்த வேர்க்கடலை சட்னி, காராமணி, மொச்சைக் கொட்டை, சூடு ஆறிப்போன கொண்டைக் கடலை, பச்சைப் பயறு சுண்டல் போன்றவற்றைச் சாப்பிட்டு மேலே குளிர்ந்த நீரைக் குடித்தல், வாரந்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், சிறுநீர், மலம் ஆகிய இயற்கை உந்துதல்களை உடனடியாக வெளியேற்றாமல் காலம் கடத்துதல், குளிப்பதற்கு குளிர்ந்த நீரைப் பயன்படுத்துதல், உணவில் அதிகமான காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை சேர்த்துக் கொள்ளுதல், இடுப்பை வளைத்துத் தண்ணீர்க் குடத்தைத் தூக்குதல் போன்ற சில காரணங்களால், இந்த அபான வாயுவானது சீற்றங்கொண்டு இடுப்பின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள தண்டுவட நரம்புகள் பாதிப்படையும் வகையில் செயல்பட்டுவிட்டால், இடுப்பின் கீழுள்ள நரம்புகளைச் சுண்டி இழுக்கச் செய்யும். இரவில் ஓய்வெடுத்து உறங்கும் வேளையில், இந்த வாயுவின் சீற்றம் நரம்புகளைத் தாக்கும்போது, வலி உயிர் போகும். கால் விரல்களைத் தன்னிச்சையாக சுருண்டுவிடச் செய்யும் அளவுக்கு இந்த வாயுவானது, அபார சக்தியைக் கொண்டதாக இருக்கிறது.

வலி நிவாரண ஆயுர்வேத மூலிகைத் தைலங்களில் ஒன்றை வெதுவெதுப்பாக இரும்புக் கரண்டியில் சூடாக்கி, உள்ளங்கைகளில் பரப்பி, கீழ் இடுப்புப் பகுதியில் உருட்டி உருட்டியும் மேலிருந்து கீழாகவும் தேய்த்துவிடவும். காலையில் சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, சூடான தண்ணீரில் முக்கிப் பிழிந்த துண்டால், அந்தப் பகுதியில் வெதுவெதுப்பாக ஒத்தடம் கொடுக்கவும். எண்ணெய், மற்றும் வியர்வை சிகிச்சைமுறையால், வாயுவானது சாந்தமாகி தன் இருப்பிடத்திலேயே அமைதியாகிவிட்டால், கால் தொடை நரம்பு இழுப்பு குறைந்துவிடும்.

பொதுவாகவே இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் ஏற்படும் நரம்பு உபாதைகளுக்கு விளக்கெண்ணெய் ஒரு நல்ல மருந்தாகப் பயன்படும். கசப்புச் சுவை, உஷ்ண வீர்யம் கொண்ட அது ஒரு சிறந்த மலமிளக்கியாகும். முறைப்படி உட்கொள்ள விரை குன்மம், வாதம், கபம், வயிற்று நோய்கள், முறைக்காய்ச்சல், இடுப்பு, பிறப்புறுப்பு, குடல், இவற்றில் உண்டாகும் குத்தல் வலி, வீக்கம் ஆகியவற்றை விளக்கெண்ணெய் போக்கும். சாதாரணமாகக் கடைகளில் விற்கப்படும் விளக்கெண்ணெய்யை விட, ஆயுர்வேத மூலிகைகளால் காய்ச்சித் தயாரிக்கப்பட்ட ஹிங்குத்த்ரிகுண விளக்கெண்ணெய் மருந்தை ஓரிரு வாரம் சுமார் 5 மி.லி. வீதம் காலை, மதியம் இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிட்டு வர, அபான வாயுவின் ஆதிக்கம் நரம்புகளில் மட்டுப்படும்.

ஓய்வான இரவு வேளையில் அதாவது தூக்கத்தில் கால் நரம்புகள் சுண்டி இழுக்கப்படுவதால் இதை ஆவரண வாதம் , அதாவது வாயு மற்ற தோஷங்களால் மறைக்கப்படுவதால் தன் கோபத்தை வலிமூலம் வெளிப்படுத்துகிறது. மேற்குறிப்பிட்ட விளக்கெண்ணெய் மருந்து இந்த வாயுவின் மறைப்பை கழட்டி விட்டுவிடுவதால், அதன் சீரான நடையை நரம்புகள் மூலம் சரி செய்துவிடுவதால், விரைவில் நிவாரணம் கிடைக்க வழி ஏற்படும். சுதந்திரம் அடைந்த வாயுவை அதன் பின் க்ஷீரபாலா 101 எனும் சொட்டு மருந்தை 10 - 15 சொட்டுகள், வெதுவெதுப்பான அரை கிளாஸ் பாலுடன் கலந்து ஓரிரு வாரங்கள் சாப்பிட, நரம்புகள் புஷ்டி அடைந்து சுறுசுறுப்பாகிவிடும். வாயுவும் தன் சீற்றத்தை முழுமையாகவிட்டு விடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT