சம்பத்தின் நாடாளுமன்றப் பேச்சைப் பற்றியெல்லாம் அண்ணா பேச்சிலும் எழுத்திலும் பெருமிதத்தோடு குறிப்பிடுவார். "தான் பெற்ற பிள்ளை களத்திலே பகையினைத் தூள் தூளாக்கிய சேதி கேட்டு மகிழ்ந்திடும் தாய் போன்று என் தம்பி, எடுத்துரைக்கிறான். நேரு பெருமகனாரையே கேள்வி கேட்டு விளக்கம் பெறுகிறான். விளைவுகளை ஏற்படுத்துகிறான், வீர முழக்கமிட்டிருக்கிறான்' என்று அண்ணா அக மகிழ்ந்தார்.
சம்பத்தின் பேச்சை, அவரது ஆற்றலைக் கண்டு பெரியார் எந்த அளவு மகிழ்ச்சியடைவார் என்பதை அண்ணா அவருக்கே உரிய நயத்தோடு 15.9.57 திராவிட நாடு இதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
""பாராளுமன்றம் ஏற்பட்டு வருஷம் 10 ஆகிறது. பண்டித நேரு ஈடு இணை எதிர்ப்பின்றி வளர்ந்தவர். வளர ஆசைப்படுகிறவர். உட்கார்ந்திருக்கின்ற 500 பேர்களில் எந்தப் பக்கமிருந்தாவது ஒரு கசப்பான வார்த்தை, அவ்வளவு ஏன்? கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ""பொதுவுடைமையை ஏன் விரைந்து கொண்டுவரவில்லை?'' என்று கேட்டால், ""அது எனக்குத் தெரியும், உட்கார்'' என்று இப்படி அதட்டுகிற நேருவைத்தான் கடந்த காலங்களில் பாராளுமன்றம் கண்டிருக்கிறது. அந்தப் பாராளுமன்றத்தில், நேருவின் எதிரே என் தம்பி சம்பத் எழுந்து, ""இந்தியா ஒரு நாடல்ல; பல நாடுகளைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்'' என்று பேசிய வீர முழக்கத்தை பாராளுமன்றம் இன்றைய தினம் கேட்டிருக்கிறது. பண்டித நேருவின் செவிகளிலே நமது லட்சிய ரீங்காரம் இசைக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசார் ஏன், நேரு பண்டிதரே சில நாட்களுக்கு முன்பு கடுஞ்சினத்தோடு, இந்தியா ஒன்று; இது பிரிக்கப்பட முடியாதது என்று எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட பண்டிதரிடம் இந்தியா, நாடல்ல, துணைக்கண்டம் என்று சொல்லுகிற என் தம்பியின் ஆற்றலை எண்ணுகிறபோது, அந்த நாட்களில் தீரர் சத்தியமூர்த்தி சொல்வாரே, "சிங்கத்தின் குகைக்குள்ளேயே அதன் பிடரியை பிடித்து ஆட்டுவது என்று' அதுதான் என் நினைவிற்கு வந்தது... இதற்கு நாம் கொடுத்த விலை எத்தனையோ உயிர்ப் பலிகள். லட்சிய வெற்றிக்காக நாம் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. பெரியார் கூடக் கேட்டார். "இவனுக போய் என்ன சாதிக்க முடியும்? இவனுங்களுக்கு என்ன யோக்கியதை...' என்றெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள்.
பாராளுமன்றத்தில் சம்பத்தின் முழக்கம் நாட்டின் பல திசைகளிலும் பல்வேறுபட்ட உணர்ச்சிகளை, விளைவுகளை ஏற்படுத்தியது. காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்தார் என்றால் பெரியார் மட்டும் மனதிற்குள்ளேனும் மகிழாமலா இருப்பார்?'
சம்பத் இல்லத்தில் பெரியார்
டெல்லி வந்த பெரியார் தெற்கு அவின்யூ 128ஆம் எண்ணுள்ள சம்பத் இல்லத்திற்கு வந்து தங்கினார். பத்து நாட்கள் ஓய்வெடுத்தார். 1948ஆம் ஆண்டில் பெரியாரின் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்து ஈரோட்டு பெரியார் மாளிகையில் இருந்து சம்பத் தமது குடும்பத்துடன் வெளியேறிய பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது சம்பத்தின் டெல்லி இல்லத்திற்கு பெரியாரே சென்று தங்கியது சரித்திர நிகழ்வு.
புதுக்கோட்டைப் பொதுக் குழு
தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் 6.2.59 அன்று புதுக்கோட்டை "ரோஸ் லேண்ட்' பங்களாவில் நடைபெற்றது
""திராவிடர் கழகத்திற்கும், தி.மு. கழகத்திற்கும் கொள்கை வேறுபாடுகள் இல்லை என்றாலும், நடைமுறையில் செயல்முறையில் பெரும் வேறுபாடுகள் இருந்தாக வேண்டும். அங்கே அது பெரியாரின் சர்வாதிகார அமைப்பு, இங்கே இது (தி.மு..க.) கூட்டுத் தலைமையுடன் ஆன ஜனநாயக அமைப்பு...
...நான் அறப்போர்க் களங்களைச் சந்தித்து நம் தோழர்கள் உட்பட வழக்குகளையும் சிறைத் தியாகங்களையும் சந்தித்திருக்கிறோம். தேர்தலில் ஈடுபட்டதன் மூலம் சில பல புதிய பொறுப்புகளும் நம்மீதும் நமது இயக்கத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஈடு கொடுக்கத்தக்க வகையில் கட்சித் தலைமையின் செயல் திறன் விளங்குகிறதா என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. எதிலும் கலந்து பேசி விவாதித்து முடிவெடுக்கின்ற ஜனநாயக வாய்ப்புகள் அடைப்பட்டு, மேல் மட்டத்தில் பலர் கட்சியை உபதொழிலாகவும் ஓய்வு மடமாகவும் கருதுவதும், எல்லாம் அண்ணா பார்த்துக் கொள்வார் என்று பொறுப்புகளை தட்டிக் கழிப்பதும் கட்சியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று கருதுகிறேன்''.
சம்பத்தின் துணிவான இக்கருத்துகள் செயற்குழுவில் ஒருவிதப் பரபரப்பைத் தோற்றுவித்தன. கருத்துகளை மறுப்பாரில்லை. ஆனால் இதையுங்கூட அண்ணாவிடம் சம்பத் பேசி விவாதித்திருக்கலாமே என்றுதான் பலர் கருதினர்.
""நாம் திராவிட நாடு கேட்கிறோம். ஆனால் தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலங்களில் இது பற்றி மக்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்காக நாடு கேட்க நீ யார்? என்று ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் கருதுகின்றனர். நாம் அங்கெல்லாம் கழகத்தைப் பரவச் செய்து திராவிட நாடு கொள்கைகளுக்கு அங்கேயும் தெளிவு ஏற்படுத்தி ஆதரவு திரட்ட வேண்டுமென்பதில் நம் கட்சித் தலைமைக்கு இன்னமும் ஆர்வம் வாய்க்கப் பெறவில்லை. இதற்கான முயற்சிகளை முந்தைய பொதுச் செயலாளர் அண்ணா மேற்கொள்ளாததற்கு அப்போதைய வளர்ச்சி பெறாத நிலை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் நாம் திராவிட நாட்டுப் பிரிவினை பற்றி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிற இந்த நிலையிலும், நமது லட்சியக் குரல் மற்ற மூன்று மாநிலங்களிலே கேட்கவில்லையென்பது தலைமையின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. அண்ணா அவர்களும் இதில் ஆர்வம் செலுத்தாததற்கு எது தடையாக இருக்கிறதென்று அறிய விரும்புகிறேன்'' என்று சம்பத் வினா எழுப்பினார்.
புதுக்கோட்டைச் செயற்குழுக் கூட்டத்திலும் சம்பத் புதிய சிந்தனையைத் தோற்றுவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான விவாதங்கள் பகிரங்கமாக நடைபெறவில்லையென்றாலும் தலைவர்கள் தமது தனித்தனிச் சந்திப்புகளில் சம்பத்தின் கருத்துகள் பற்றிக் கலந்து பேசினார்கள்.
சிதம்பரம் பொதுக் குழுவில் சம்பத்
1959ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் சிதம்பரத்தில் தி.மு.க. பொதுக் குழு கூடியது. அண்ணா, சம்பத் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டைப் பொதுக் குழு போன்றே இதிலும் சர்ச்சைகள் தோன்றுமென்று பலரும் அச்சத்தோடு காணப்பட்டனர். இப்பொதுக்குழுக் கூட்டத்தில், திருத்தப்பட்ட கழகச் சட்ட திட்டங்களைப் பற்றிய பரிசீலனை நடைபெற்றது. சம்பத் முக்கியமானதொரு சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தார்.
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதுதான் அது. இது அண்ணா உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை நிராகரிக்க முடியாது என்பதை அண்ணா புரிந்து கொண்டார். தந்திரமாக இதனை அடுத்த பொதுக்குழு பரிசீலித்து முடிவெடுக்குமென்று தள்ளிப் போட்டார். இப்பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் நடைமுறை வேலைத் திட்டங்கள் பற்றிச் சூடான விவாதம் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில் சம்பத்தின் குரல் ஓங்கி ஒலித்தது. அவர் சொன்னார்:
""இது நாள் வரையில் நான் அறிஞர் என்றும், அண்ணா என்றும் அன்போடு அழைத்து வந்த நமது முன்னாள் பொதுச் செயலாளரை இனி திருவாளர் அண்ணாதுரை என்றே அழைக்கப் போகிறேன்'' என்று உரக்கப் பேசினார் சம்பத்.
உறுப்பினர்கள் இடையே பெரும் பரபரப்பு, பதற்றம், சில எதிர்ப்புக் குரல்கள், அனைவரையும் அண்ணா அமைதிப்படுத்தினார்.
சம்பத் பேச்சைத் தொடர்ந்தார். ""நான் எம்.பி. யாக மட்டுமல்ல, கோவை மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறேன். மாவட்ட மாநாடு நடைபெற வேண்டும். தள்ளிப் போகிறது. எனது மாவட்டத்திற்கு சுற்றுப் பயணத்தேதி கேட்டு அண்ணாவுக்குப் பல முறை கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. பதில் இல்லை. இப்படி மாவட்டங்களை வேலை வாங்க வேண்டியவர்களே தூங்கிக் கொண்டிருந்தால் கட்சி எப்படி வளரும்? எல்லோரையும் போல் நமக்கென்ன என்று என்னால் இருக்க முடியாது. திராவிடர் கழகத்தில் எது எது பெரிய குறை என்று நினைத்து வருந்தினோமோ அதே குறை இங்கேயும் வளர்ந்து வருகிறது. பொறுப்பிலுள்ளவர்கள் செம்மையாக இயங்க வேண்டும். எல்லோரையும் இயக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் நான் இதனை உங்கள் பரிசீலனைக்கு முன் வைக்கிறேன்''.
இடைவேளையில் அண்ணா சம்பத்தைத் தம் கையோடு பந்திக்கு அழைத்துச் சென்று பக்கத்திலேயே அமரச் செய்தார். வழக்கம் போல சிரித்துப்பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
சாப்பிட்டு முடிந்ததும் ஒருசிலர் அண்ணாவிடம் வந்து, ""சம்பத் இப்படிப் பேசிவிட்டாரே'' என்று வருந்துவது போல் நடித்தனர். அவர்களை அண்ணா சமாதானப்படுத்தினார். ""என்னைத்தானே என் தம்பி அப்படி அழைக்கப் போகிறேன்? என்கிறான். அவன் எப்படி அழைத்தாலும் நான் அண்ணாதுரைதானே?'' என்று அவர்களிடம் சமாதானம் கூறினார் அண்ணா.
மதியழகன் அண்ணாவை நோக்கி, ""சம்பத்தின் கடுமை தேவையில்லைதான். ஆனால், அவர் கூறுகிற குறைபாடுகளை நீக்கிக் கொள்ள நாம் ஏதாவது செய்தாக வேண்டும்'' என்றார்.
சம்பத் கருத்துக்கு ஆதரவு
பெருவாரியான உறுப்பினர்கள் சம்பத்தின் சட்டத் திருத்தத்தை ஆதரித்தனர். அண்ணாவும் இதில் உள் நோக்கம் ஏதுமில்லை என்று பேசினார். கருணாநிதியின் ஆதரவாளர்கள் 8 பேர்கள் மட்டும் இதனை எதிர்த்தனர். சம்பத்தின் சட்டத் திருத்தத்தைப் பொதுக் குழு ஏற்றது.
ஆனாலும் அண்ணா ஒரு யோசனை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ""சம்பத் தந்த சட்டத் திருத்தம் பொதுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சட்டமானாலும் இதனை ஒரு சம்பிரதாயமாகச் மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து. நகர, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் பொதுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடக் கூடாது என்பதையும், தம்பி சம்பத் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்தோடு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பது இப்பொதுக் குழுவிற்கு நான் ஆலோசனை தெரிவிக்க விரும்புகிறேன்'' என்று அண்ணா குறிப்பிட்ட கருத்தையும் பொதுக் குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
அவைத் தலைவரின் பொறுப்புகள்:
பொதுக்குழு கூட்டத்திற்கும், செயற்குழு கூட்டத்திற்கும் மற்றுமுள்ள துணைக் குழுக்களின் கூட்டங்களுக்கும் தலைமை ஏற்று நடத்திக் கொடுப்பது என்று அவ்வதிகாரம் பொதுக்குழுவில் வரையறுக்கப்பட்டது. கழகத்தின் அவைத் தலைவராக சம்பத் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சம்பத் சுற்றறிக்கை
ஏற்படுத்திய பரபரப்பு
20.2.60 அன்று பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு சம்பத் அனுப்பிய ரகசியக் கடிதம் அவ்வுறுப்பினர்கன் மத்தியில் பெரிதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
சம்பத்தின் சுற்றறிக்கை காரணமாக கழகத்தில் மோதல் ஏதும் ஏற்படாது பார்த்துக் கொள்வதில் அண்ணா அக்கறையுடன் விளங்கினார். சம்பத்தின் கடிதம் கட்சி நலனுக்கான கருத்துச் சிந்தனை என்ற அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டு கட்சி மட்டத்தில் விவாதங்கள் தொடரலாயிற்று.
இந்தி பேசாத மக்களின் விருப்பத்தை அறியாமல் தென்னகத்தின் மீது இந்தியைத் திணிக்கமாட்டோம் இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மக்கள் சபையில் இரண்டு முறை நேரு வாக்குறுதியளிக்கிறார். இன்று அந்த வாக்குறுதியை மீறிக்கொண்டு குடியரசுத் தலைவரின் ஆணை பிறந்திருக்கிறது. 1965க்குப் பிறகு இந்த நாட்டின் ஆட்சி மொழி இந்திதான் என்று தெளிவாகச் சொல்லுகிறது.
மக்கள் சபையில், சாதாரணமாகக் துணையமைச்சராக இருப்பவர் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் கூட, அது சட்டத்திற்குச் சமமாகும். ஆனால், முதலமைச்சர் தந்த வாக்குறுதியே மீறப்பட்டுவிட்டது.
அடுத்த 15 நாட்களில் ஆடு ஓரடி பாய்ந்தால் குட்டி இரண்டு அடி பாயும் என்பார்களே, அதைப்போல் சட்ட மந்திரி சென், சுப்ரீம்கோர்ட் மட்டும் இந்தியில் இயங்கினால் போதாது, ஐகோர்ட்டுகளும் இனி இந்தியில்தான் இயங்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு.க. போராட்டக் குழுவின் சார்பில் அதன் தலைவர் சம்பத், குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு எழுதிய முடங்கல் டெல்லி ஏடுகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பத்துக்கு செயற்குழு பாராட்டு
குடியரசுத் தலைவர், பண்டித நேருவின் சொல்படிதான் செயல்படுவோம் என்று இறங்கி வந்தார். பண்டித பந்த் அவர்களும் , நேருவின் வாக்குறுதி மீறப்படவில்லை இந்தி திணிப்பு இல்லை என்று பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். என் வாக்குறுதி மீறப்படமாட்டாது என்று பிரதமர் நேரு மீண்டும் உறுதி மொழி அளித்தார். குமாரபாளையம் பொதுக்குழு கோரிய உறுதி மொழி கிடைத்துவிட்டது எழுத்து மூலமாகப் போராட்டத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களுக்கு இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி, மாபெரும் வெற்றி என்று கூறவேண்டும். இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த ஈ.வெ.கி. சம்பத்தை செயற்குழு பாராட்டுகிறது.
இத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கடற்கரைக் கூட்டத்தில் அண்ணா,
அண்ணாவின் பாராட்டு:
திரண்டிருந்த மூன்று லட்சம் மக்கள் மத்தியில் அண்ணா குறிப்பிட்டதாவது:
என் தம்பிக்கு வாக்குறுதியை வரைந்துள்ள இந்தக் கரம், ஐசனோவரோடு கைக்குலுக்கிய கரம் - ட்ரூமனோடு கை குலுக்கிய கரம். ஸ்டாலினோடு கை குலுக்கிய கரம். இந்த கரம்தான் என் தம்பிக்கு கையெழுத்திட்டு வாக்குறுதியை வழங்கியுள்ளது.....
... இவ்வாறு அண்ணா குறிப்பிட்டபோது கடற்கரையே அதிரும்வண்ணம் கரவொலியெழுந்தது.
திராவிட நாடு சாத்தியமா?
திராவிட நாடு சாத்தியமா என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி. ராமன் இல்லத்தில் ஒர் ஆலோசனைக் கூட்டத்தை சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.என், ஆசைத்தம்பி, மதியழகன் ஆகிய பல முக்கியப் பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிரங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கம்தான் இருந்தது. இப்போது அவரை வரச் சொல்லிக் கூப்பிடுகிற அளவுக்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.
திராவிட நாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தமது வாதங்களை எடுத்து வைத்தார்.
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, ""என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதச் சொல்றே. உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...'' என்றார். உடனே சம்பத், ""கிடைக்காதுன்னு தெரிஞ்சப்பிறகு அதைச் சொல்லாதது மோசடியல்லவா?'' என்று கேட்டார்.
அதற்கு அண்ணா, "அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு' என்று வெறியேற்றிவிட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா தொண்டன் படுத்துவிடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்'' என்றார்.
அண்ணா சொன்னது, ""காலம் வரும், காலத்தை எதிர்பார்த்துக் காரியம் செய்யவேண்டும். ஒரு கட்டம் வரும்போது நானே அதை மாநாட்டில் அறிவித்துவிடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றிப் பேசவேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்'' என்றார். எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பிவிட்டு, மற்றவர்களைப் பார்த்து, ""அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்துவிடுவதா? விவஸ்தை இல்லையா?'' என்று அதட்டி அனுப்பினார்.
(தொடரும்)
தொகுத்து எழுதியவர்கள் :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.