மேடை ஒன்று; நடனம் ஆறு!
நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பத்மா சுப்பிரமணியம், ""பலவகையான நாட்டிய வகைகள் ஒரே
குச்சிப்புடி நாட்டிய மேதை வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை, பாரதிய வித்யாபவன் அரங்கத்தில் இரண்டு நாள் நாட்டிய நிகழ்ச்சிகளை தன்னுடைய "நிருத்யசங்கமா' நடனப் பள்ளியின் மூலமாக சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார் நடனக் கலைஞர் சைல சுதா. "மேடை ஒன்று; நடனம் ஆறு' என்பதுதான் இந்த நடன நிகழ்ச்சியின் சிறப்பே! ஐந்தாவது ஆண்டாக தனது பள்ளியின் சார்பாக நடத்தப்படும் இந்த நாட்டிய விழாவில் இதற்கு முன்பாக, சோனல் மான்சிங், மாதவி முத்கல், யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஸ்வப்ன சுந்தரி, மாளவிகா சருக்கை ஆகிய புகழ்பெற்ற நடனமணிகளின் நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பத்மா சுப்பிரமணியம், ""பலவகையான நாட்டிய வகைகள் ஒரே
மேடையில் அரங்கேறும் வித்தியாசமான நிகழ்ச்சி இது'' என்றார்.
இரண்டு நாள் நிகழ்ச்சியில், முதல் நாளில் கதக், யக்ஷகானா, மணிப்புரி போன்ற நடன வகைகளையும் இரண்டாம் நாளில் மோகினியாட்டம், குச்சிப்புடி, பரதநாட்டியத்தையும் அரங்கேற்றினர். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாத நாட்டியங்களுக்கு முன்னுரிமை அளித்து முதல் நாளிலும் நன்கு பரிச்சயமான நாட்டியங்களுக்கு இரண்டாவது நாளிலும் மேடை அமைத்துக் கொடுத்திருந்தது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அதிதி மங்கள்தாஸின் கதக் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. வேகமான அசைவுகள்தான் கதக் நடனத்தின் சிறப்பான அம்சம். அதிலும் "சக்கர்' என்று சொல்லப்படும் நின்ற இடத்திலேயே சுழன்று சுழன்று ஆடிய முறை வித்தியாசமாக இருந்தது.
சிவானந்த ஹெக்டே குழுவினரால் நிகழ்த்தப்பட்ட யக்ஷகானாவில் ராமாயணத்திலிருந்து சில சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக வாலி-சுக்ரீவன் சண்டை தத்ரூபமாக மேடையில் நிகழ்த்தப்பட்டது. கலைஞர்களின் ஒப்பனை பிரமிக்கவைத்தது.
ப்ரீத்தி படேல் குழுவினரோடு நிகழ்த்திய மணிப்புரி நடனம் பார்ப்பதற்கு புதிய அனுபவத்தைத் தந்தது. டிரம்ஸ்களை அடித்தபடியும், கையில் வாள்களைச் சுழற்றியபடியும் அவர்கள் ஆடிய ஆட்டம் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் கவர்ந்தது.
பாரதி சிவாஜியின் மோகினியாட்டம் ரம்யமாக இருந்தது. குற்றாலக் குறவஞ்சியில் வரும் "வசந்தவல்லி பந்தாடும் காட்சி'யைப் போன்றே ஒரு கற்பனை மலையாளக் கவிஞர் ஒருவரின் பாடலிலும் வெளிப்பட்டிருந்தது.
சைலஜாவின் குச்சிப்புடி நடனம் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக தாம்பாளத்தின் மீது அவர் ஆடிய "பால கோபால தரங்கம்' பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஷோபனாவின் பரதநாட்டியமும் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
""கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. அரங்கத்திற்கு வெளியேயும் நிறையப் பேர் காத்திருந்தது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சாவ், விலாசினி போன்ற அதிகம் அறியப்படாத நாட்டிய வகைகளை மேடையில் பிரபல கலைஞர்களைக் கொண்டு நிகழ்த்தினோம். இத்தகைய முயற்சிகளுக்குக் காரணம், கலாசார ஒருமைப்பாட்டை உண்டாக்குவதுதான். ஒரு சாமான்ய ரசிகனுக்கும் இத்தகைய நடனங்களைக் காட்சிப்படுத்துவதின் மூலம் அவரின் ரசிப்புத் தன்மையை வளர்ப்பதுதான் இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம். இதற்கு ஐ.சி.சி.ஆர்., இந்திய கலாசார வளர்ச்சித் துறை ஆகிய அரசு அமைப்புகளின் உதவியும் எங்களுக்குக் கிடைக்கிறது. இதனால் துறை சார்ந்த பிரபல கலைஞர்களை அழைத்து எங்களால் நிகழ்ச்சி நடத்துவதற்கு முடிகிறது. எங்களின் இந்த முயற்சிக்கு சில தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செலுத்துகின்றனர்'' என்றார் "நிருத்யசங்கமா'வின் நிறுவனரும் இயக்குநருமான சைல சுதா.