முகப்பு
தினமணி கதிர்

சீட்டுக்கட்டில் ரவிவர்மா ஓவியங்கள்

திருவனந்தபுரத்தில் பிறந்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவையும்  அவரது ஓவியங்களையும் அறிவோம். ஆனால் அவரது ஓவியங்கள் இடம் பெற்ற சீட்டுக்கட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? 1894-ம் ஆண்டில் ராஜா ரவிவர்மா சொந

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

திருவனந்தபுரத்தில் பிறந்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவையும்  அவரது ஓவியங்களையும் அறிவோம். ஆனால் அவரது ஓவியங்கள் இடம் பெற்ற சீட்டுக்கட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

1894-ம் ஆண்டில் ராஜா ரவிவர்மா சொந்தமாக அச்சகமொன்றை மும்பை, லோனாவாலாவில் தொடங்கினார். அங்கு காலண்டர்களுக்காக தான் வரைந்த ஓவியங்கள், இந்திய புராணங்கள், தெய்வீக புத்தகங்கள் போன்றவற்றை அச்சிட்டு வந்தார். 1901-ம் ஆண்டில் அச்சகத்தை அவரது ஜெர்மன் டெக்னீஷியனுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதுடன் தன்னுடைய 29 ஓவியங்களையும் அவருக்கு அளித்தார். 1906-ம் ஆண்டு ராஜா ரவிவர்மா காலமானார்.

பின்னர் அந்த அச்சகத்தில் சீட்டுக்கட்டுகள் தயாரித்தபோது அவரது ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. சரித்திர நாயகர்கள் அடங்கிய ஒரு செட், இதிகாச நாயகர்கள் அடங்கிய ஒரு செட் என சீட்டு கட்டுகள் தயாரிக்கப்பட்டன.

அதில் இதிகாச நாயகர்களில் நள சக்கரவர்த்தி, தமயந்தி, அரிச்சந்திரா, விஷ்வாமித்ரர், துஷ்யந்தன், சகுந்தலை போன்றோர்களின் படங்கள் இடம் பெற்றன.

சரித்திர நாயகர்களில் முகலாய மன்னர்கள், அவர்களது மனைவிகள்  நூர்ஜஹான், அக்பர், மோட்டி பேகம், ஷாஜஹான், அவுரங்கசீப், ஜீனத்மகால் ஆகியோர் தவிர அவர்களது படைத் தளபதிகளும் இடம் பெற்றனர்.

சீட்டுக்கட்டுகளில் சரித்திர நாயகர்கள் பெயர்கள் ஆங்கிலத்திலும், புராண கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்தியிலும் இடம் பெற்றன. ஒவ்வொரு சீட்டுகட்டு பாக்கெட்டிலும் "ராஜா ரவிவர்மா பிரஸ்,  மும்பை' என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த சீட்டுக்கட்டுகள் அனைத்தும் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. பெரும்பாலும் இந்த அபூர்வ சீட்டுக்கட்டுகள் உலகில் சீட்டு கட்டுகளை சேகரிப்போர் கைகளிலும், அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலக "கேரி கலெக்ஷன் ஆஃப் ப்ளேயிங் கார்ட்ஸ்' சேகரிப்பிலும், பாரிஸ் நகரில் உள்ள ஏல நிறுவனங்களிடமும் மட்டுமே உள்ளன. ஒருவேளை இந்தியாவில் சீட்டுக்கட்டுகள் சேகரிப்போர் கைகளில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.