தற்கொலைக்கு முயற்சித்த இயக்குநர்
என்னுடைய படங்களைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. என்னுடைய படங்களை கழித்துப் பார்த்தால் கடைசியில்
""என்னுடைய படங்களைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. என்னுடைய படங்களை கழித்துப் பார்த்தால் கடைசியில் கிடைப்பது பூஜ்யம்தான். நான் எதற்காகவும் வருந்துவதில்லை. நான் தேடிக் கொண்டது நல்ல வேலை. கடைசிவரை நான் சினிமாவைத் தவிரவேறு எதையும் சிந்தித்ததில்லை''
"சம்திங் அன் ஆட்டோபயோகிராபி'யில் அகிரா குரோசவா (1910-98)
1923-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட காண்ட்டோ பூகம்பத்தில் ஒருலட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தனர். அப்போது அகிரா குரோசவாவுக்கு 13 வயது. டோக்கியோ புறநகர்ப்பகுதியில் வசித்துவந்த அகிராவின் குடும்பத்தினர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அகிராவின் மூத்த சகோதரர் ஹைகோ, இவரை அழைத்துக் கொண்டு நாள் முழுக்க பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றி காண்பித்தார். எங்கு பார்த்தாலும் பிணக்குவியல். நகரத்தையே புரட்டிப் போட்டாற்போல் ஒரு தோற்றம். அனைத்தையும் உற்று கவனிக்கும்படி ஹைகோ வற்புறுத்தினார். அன்றிரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்த அகிரா, தன் சகோதரனிடம் இவையெல்லாம் எப்படி நடக்கிறதென்று கேட்டார்.
""இது இயற்கையின் சீற்றம். பயத்தினால் உன்னுடைய கண்களை மூடிக் கொண்டால் எல்லாமே பயமாகத்தான் தெரியும். துணிவுடன் பார்த்தால் எதுவும் பயமாகத் தெரியாது' என்று ஹைகோ கூறினார். பின்னாளில் தன்னுடைய கருத்துகளைத் துணிச்சலுடன் திரைப்படங்களில் புகுத்தியதற்கு அகிராவுக்கு இதுவே காரணமாக இருந்தது.
டோக்கியோவில் வசித்துவந்த அகிராவின் பெற்றோரில், தாயார் ஒசாகா வர்த்தக சமூகத்தை சேர்ந்தவர். தந்தை, ஒன்சூ வடபகுதி கிராமத்திலுள்ள சமுராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராணுவ பின்னணி கொண்ட அவர் மார்ஷியல் ஆர்ட் பயிற்சியளிப்பதில் வல்லவராக இருந்தார். ஜப்பானில் முதன்முதலாக நீச்சல் குளத்தை அமைத்தவரும் இவரே. ஏழாவது மகனாக பிறந்த காரணத்தால் மிகவும் மெலிந்திருந்தாலும், கென்டோ வாள் பயிற்சியில் முதல் மாணவனாக திகழ்ந்தார் அகிரா. இருப்பினும் அகிராவுக்கு ஓவியத்தில் நாட்டமிருந்தது. பத்திரிகைகளுக்குப் படம் வரைந்து அனுப்புவார். ஜப்பானிய மேற்கத்திய இலக்கியங்களை குறிப்பாக ரஷ்ய இலக்கியங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
மவுன பட காலத்தில் திரைக்கதை அமைக்கும் திறமையை இவரது சகோதரர் ஹைகோ, அகிராவுக்கு கற்றுத் தந்தார் (பிற்காலத்தில் பேசும்படம் உருவான போது ஹைகோ தற்கொலை செய்து கொண்டது அகிராவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது) ஆனால் அகிராவுக்கு சினிமாத் துறையில் நாட்டம் இல்லை. தோஹோ ஸ்டூடியோவில் துணை இயக்குநர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்த இவர் வேலைக்கு விண்ணப்பித்தார். கல்லூரி பட்டம் ஏதுமில்லை என்றாலும் அவரது சகோதரர் கொடுத்த பயிற்சி இவருக்குக் கைகொடுத்தது.
1936- ஆம் ஆண்டில் தோஹோ ஸ்டூடியோவில் பணியில் அமர்ந்த அகிரா, 1943-ஆம் ஆண்டில் முதன் முதலாக "சன்ஷிரா சுகட்டா' என்ற படத்தை இயக்கினார். அது தோல்வியடைந்தாலும் திரைப்படம் தயாரிப்புக்கான அனுபவங்கள் அவருக்குக் கிடைத்தன. கஜிரோ யம மோட்டோ என்பவர்தான் அகிராவுக்கு திரைப்படங்களை இயக்குவது குறித்து பயிற்சியளித்தார்.
தொடர்ந்து 1944-ஆம் ஆண்டில் "தி மோஸ்ட் பியூட்டிபுல்' என்ற படத்தை இயக்கினார். ஒரு பெண், ராணுவ முகாமில் ஆண் ஊழியர்களைவிட சிறப்பாக பணியாற்றுவது போல் அமைத்த கதை. ஏறக்குறைய பிரச்சார படம் போல் இருந்ததால் அதுவும் வெற்றியடையவில்லை.
1945-ஆம் ஆண்டு இவர் இயக்கிய "தி மென் ஹூ ட்ரெட் ஆன் தி டைகர்ஸ் டேல்' என்ற படம் சமுராய் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிப்பதாக இருந்ததால், அந்த சமயத்தில் ஜப்பானை கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், இது ஜப்பானியர்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்துமென்று கருதி, படத்தை வெளியிடாமல் தடை செய்தது. பின்னர் அமெரிக்கர்கள் ஜப்பானை விட்டுச்சென்ற பின் ஏழாண்டுகள் கழித்து இத்திரைப்படம் வெளியாயிற்று. அதற்குள் இவர் இயக்கிய "நோ ரெக்ரெட்ஸ் ஃபார் அவர் யூத்' என்ற திரைப்படம் வெளிவந்தது.
""ஒரு பெண், தன் கணவன், தந்தை ஆகியோரை கம்யூனிஸ்ட்களாக கருதி அளிக்கப்படும் தண்டனையை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் கதை என்பதால் என்னுடைய கருத்துகளைத் துணிச்சலுடன் அதில் புகுத்தினேன்'' என்று அகிரா பின்னர் கூறினார்.
1945-ஆம் ஆண்டு "டிரங்கன் ஏஞ்சல்' படத்தில் ஜப்பான் யுத்தத்திற்கு பின்னர் குடிசைப் பகுதியில் குடிகார டாக்டர் ஒருவர், எலும்புருக்கி நோயில் பாதிக்கப்பட்ட கும்பலைக் காப்பாற்றுவது போல் அமைக்கப்பட்ட கதை என்பதால் அகிராவுக்கு சிறந்த இயக்குநர் என்ற அந்தஸ்து உறுதியானது. 1950-ஆம் ஆண்டு வெளியான "ராஷோமான்', படத்தில் ஒரு விதவையைக் கற்பழித்த சாமுராய் ஒருவன் கொலை செய்யப்படுவதை நான்கு பேர் வித்தியாசமான கோணங்களில் விவரிப்பதை படமாக்கியிருந்தார். இத்திரைப்படத்தை பற்றி அகிரா கூறுகையில், ""மனிதர்கள் எப்போதுமே தங்களுக்குத்தானே நேர்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. தங்களைப் பற்றி சொல்லும்போதுகூட மிகைப்படுத்திச் சொல்வார்கள். இதை மனிதனின் இதயம் ஏற்குமா? என்பது கூட சந்தேகம்தான்...'' என்று சொன்னார்.
திரைப்படத்தில் ஒரே காட்சியை முதன்முதலாக வித்தியாசமான முறையில் நான்கு பேர் விவரிப்பது புதுமையாக இருந்ததால் "ராஷோமான்' 1951-ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான உயர்ந்த அகாதெமி விருதைப் பெற்றது. தொடர்ந்து வெளிவந்த "தி இடியட்' தோல்வியடைந்தாலும் "ராஷோமான்' அளித்த உலக அளவிலான வெற்றி அகிராவுக்கு தன்னம்பிக்கையை அளித்தது. அடுத்து இகுரா (1952), ஸெவன் சாமுராய் (1954), த்ரோன் ஆஃப் பிளட் (1957) ஆகிய படங்கள் அகிராவை புகழ் உச்சிக்குக் கொண்டு சேர்த்தன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இவரது ஸெவன் சாமுராய் 1960-ஆம் ஆண்டில் "தி மெக்னிபிஷண்ட் ஸெவனாக' ரீமேக் செய்யப்பட்டது.
மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி துணிச்சலுடன் "லோயர் டெப்திஸ்' (1957) படத்தை தயாரித்தவர் ஹிடன் போர்ட்ரஸ் (1958) வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதோடு, பெர்லின் உலக திரைப்பட விழாவில் "தங்கக் கரடி' பரிசு பெற்றது. இத்திரைப்படம் பின்னர் ஆலிவுட்டில் "ஸ்டார் வார்ஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சாமுராய் வாள் வீரன் வருவதற்கு முன் ஒரு நகரை தங்கள் வசப்படுத்த இரு கும்பலுக்கிடையே எழும் மோதலை வைத்து படமாக்கிய "யோ ஜிம்போ' (1961) பின்னர் ஆலிவுட்டில் "எ பிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
1965-ஆம் ஆண்டு "ரெட் பியர்ட்' என்ற படத்தை ஆறுமாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக கூறிய அகிரா, தன்னுடைய 16 படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்துவந்த தோஷிரா மைஃபூன் என்ற நடிகரை தாடி வளர்க்கும்படி கூறினார். ஆனால் படம் முடிய இரண்டாண்டுகள் ஆகிவிட்டதால் நடிகர், தயாரிப்பாளர் இருவருக்கும் அகிராவின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது. இருப்பினும் இரண்டாண்டுகள் பொறுமையாக இருந்து படம் முடிவடைந்ததும் இனி அகிராவின் படங்களில் நடிப்பதில்லை என்று கூறி தோஷிரோ மைஃபூன் அகிராவிடமிருந்து விலகினார். எதிர்பார்த்தபடி படமும் வெற்றிபெறவில்லை. பெர்ல் துறைமுக தாக்குதல் அடிப்படையாக வைத்து ஆலிவுட்டில் தயாரித்த "டோரா, டோரா, டோரா' படத்தில் ஜப்பான் தொடர்பான காட்சிகளை மட்டும் அகிரா இயக்கி கொடுத்தார்.
ஆலிவுட்டிலிருந்து ஜப்பான் திரும்பிய அகிரா, 1970-ஆம் ஆண்டு குடிசைப் பகுதியில் வசிக்கும் புத்திசுவாதீனமற்ற சிறுவனை மையமாக வைத்து "தோ தெஸ்காதென்' என்ற படத்தை இயக்கியபோது, கதையம்சம் ஏதுமில்லை என்றாலும் குடிசைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலித்த வகையில் பத்திரிகைகள் பாராட்டினாலும், வர்த்தக ரீதியில் தோல்வியடைந்தது. இதனால் மனநிலை, உடல் நிலை பாதிக்கப்பட்ட அகிரா, 1971-ஆம் ஆண்டு வாளினால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தபோது காப்பாற்றப்பட்டார்.
நான்காண்டுகால இடைவெளிக்குப் பின்னர் 1890-ஆம் ஆண்டில் சைபீரியாவில் வசித்துவந்த பழங்குடியொருவன் வழிகாட்டியாக மாறி இயற்கையின் மர்மங்களை விளக்குவதாக "தெர்ஸூ உஸாலா' என்ற படத்தை இயக்கி வெளியிட்ட போது, இரண்டாவது முறையாக டெனோ டெலோ விருதும், அகாதெமி விருதும் கிடைத்தது. ஜப்பானும், ஐரோப்பிய பிலிம் அகாதெமியும் இவரை பாராட்டி கெüரவித்தது. ஆனால் தொடர்ந்து படம் தயாரிக்க இவரிடம் பணம் இல்லை. ஆலிவுட் டைரக்டர்கள் பிரான்சிஸ் போர்டு கொப்பலோ, ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோர் அவருக்கு பண உதவி அளிக்க முன்வந்தனர். அவர்கள் ஒத்துழைப்புடன் தயாரித்த "காகெமுஷா' வர்த்தகரீதியில் வெற்றிபெற்றதுடன் 1980-ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் துணை விருதையும் பெற்றது.
தொடர்ந்து ரன் (1985), அகிரா குரோசவா ட்ரீம்ஸ் (1990), ராப் ஸோடி இன் ஆகஸ்ட் (1991), மடாட யோ (1992) ஆகிய படங்களை இயக்கி வெளியிட்ட அகிராவுக்கு 1995-ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருது அளிக்கப்பட்டது. "அகிரா குரோசவா ட்ரீம்ஸ்' ஏறக்குறைய அவரது வாழ்க்கையை விளக்குவது போல் எட்டு கனவு காட்சிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டது.
இவரது படங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையையும் சமுராய் வீரர்களின் சாகசங்களையும் விளக்குவதாகவே இருந்தன. "ராப்ஸோடி இன் ஆகஸ்ட்' படத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டபோது, அணுகுண்டு வீசுவதற்கு ஜப்பானே காரணம் என்பதை இவர் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் "வாழ்நாள் சாதனையாளர்' என்ற விருதை பெற்ற முதல் ஜப்பானியர் என்ற வகையில் சர்வதேச திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு.
பெரும்பாலும் ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவந்த அகிரா மரணமடைவதற்கு முன்பு தன்னுடைய 31-ஆவது படத்தை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் "தி ஸீ இஸ் வாட்சிங்' என்ற தலைப்பில் இளம் வயதில் விலை மாதர்களாக மாறும் பெண்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தார். அதற்கான குறிப்புகள், படமாக்க வேண்டிய கோணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருந்தாலும் அவரது ஆசை நிறைவேறவில்லை.