முகப்பு
தினமணி கதிர்

நேதாஜியின் நாற்காலி...

வீட்டினுள்ளே ஜன்னல் ஓரமாக நின்று கொண்டு அதன் கதவுகளைத் திறந்து வைத்தவாறு எதிர் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகலிங்கக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:22 AM
பகிர்:

வீட்டினுள்ளே ஜன்னல் ஓரமாக நின்று கொண்டு அதன் கதவுகளைத் திறந்து வைத்தவாறு எதிர் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகலிங்கக் கவுண்டர். அவருக்கு இன்னொரு பெயர் இருந்தது. அது "நாற்காலித் தாத்தா' என்பதாகும். நாற்காலித் தாத்தா என்றால் ஓரளவு மலேசியத் தமிழர்கள் அறிந்த பெயர். நாற்காலித் தாத்தா, மலேசியா என்று கடிதம் போட்டாலே கடிதம் அவர் கைக்குப் போகும் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.

அந்த நாற்காலித் தாத்தா ஒரு தவிப்போடு எதிர்வீட்டையே பார்த்தார். எதிர் வீடு சீனனின் வீடு. பேரப்பிள்ளைக்குப் பிறந்த நாள் என்று வீடு களை கட்டிவிட்டது. வீட்டு வாசலில் காற்றடைத்த பலூன்கள் பலவிதமான நிறங்களில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. வண்ண வண்ண மின் விளக்குகள் சிமிட்டிக் கொண்டிருந்தன. மெல்லிசாய் சீன இசை மிதந்து வந்தது. பேரப்பிள்ளையின் பெயரைச் சொல்லி பெரியவர்கள் மது குடித்து ஆடுவார்கள். விடிய விடிய விருந்து நடக்கும். வருபவர்களுக்கு உட்கார நாற்காலி போதாது என்று அவர் வீட்டில் இல்லாதபோது அந்த வீட்டில் இருந்த நாற்காலிகளை அள்ளிக் கொண்டு போய்விட்டான் சீனன். அவற்றில் நாகலிங்கக் கவுண்டரின் நாற்காலியும் ஒன்று. பார்ப்பதற்கு பழையதானாலும் உயிர் போல பாதுகாத்து வரும் பொக்கிஷம் அது. அவர் இருக்கும்போது கேட்டிருந்தால் கொடுத்திருக்கமாட்டார்.

மகன் எதையும் யோசிக்காமல் சீனன் கேட்டதும் அந்த நாற்காலியைக் கொடுத்து விட்டான். மருந்து வாங்க வெளியே போயிருந்த நாகலிங்கம் திரும்பி வந்து, நாற்காலியைக் காணாமல் கோபமாகி நெருப்பெடுத்து நின்றார். அவரின் உஷ்ணத்தை மகனால் தணிக்க முடியவில்லை. மனைவியை அவரோடு பேசச் சொல்லி அவர் கோபத்தைக் குறைக்க முயன்றான் அவன். மருமகளின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார் அவர்.

""மாமா... எதுத்த வீட்டு சீனன் பேர்த் டே பார்ட்டிக்கு நாற்காலி வேணும்னு கேட்டான். அவரு இருக்கிற நாற்காலிய எடுத்திட்டுப் போன்னு சொல்லிட்டாரு. அவன் தெரியாம உங்க நாக்காலிய எடுத்திட்டு போயிட்டான். சீனன் நல்லவன். பேர்த்டே முடிஞ்சதும் நானே எடுத்திட்டு வர்றேன்..!''

மருமகளின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசாத அவர் மெüனமானார். ஆனாலும் அவர் மனம் மெüனமாய் இருக்கவில்லை. அது அவரைத் தூண்டி அவரைப் பேசவைத்தது...

""பேர்த் டே பார்டிக்கு என் நாக்காலிதான் கெடைச்சுதா? அது எனக்கு பொக்கிஷம். அது எப்பேர்ப்பட்ட நாற்காலி... அதில உக்கார தகுதி உள்ளவன் எவன் இருக்கான்?''

மருமகள் அவரின் உணர்வைப் புரிந்து கொண்டு மெதுவாய்ப் பேசினாள்...

""பேர்த் டே பார்டி முடிஞ்சதும் நானே போயி எடுத்திட்டு வர்றேன்...''

நாகலிங்கம் பதில் பேசாது யோசித்தார். சீனனின் பார்ட்டி எப்போது முடியும் என்று கணக்குப் போட்டுப் பார்த்தார். பதில் கிடைக்கவில்லை. பார்ட்டி முடிய பத்தும் ஆகலாம். பன்னிரண்டும் ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம். பத்து மணிக்கு கேக் வெட்டிவிட்டு பெரியவர்கள் மது குடிக்கத் தொடங்குவார்கள். அது சுலபமாய் முடியுமா? அது முடிந்தால்தான் நாற்காலியைக் கேட்கலாம். காலையில் பார்க்கலாம் என்றால் பாழும் அவர் மனம் கேட்கமாட்டேன் என்கிறதே... வற்புறுத்திக் கேட்டால், இந்த பழைய நாற்காலிக்காக இந்த இந்தியன் துடிக்கிறானே... என்று சீனன் நினைக்கலாம். சீனனைப் பொறுத்தவரையில் அது ஒரு பழைய நாற்காலி. கறுப்பு நிறத்தில், அந்தக் காலத்தில் தேக்கு மரத்தால் சீனன் ஒருவனிடம் சொல்லிச் செய்தது. ஒரு குறுநில மன்னன் உட்கார அலங்காரப் பிடிகளுடன் கவர்ச்சியாய் எடுப்பாய் செய்யப்பட்ட நாற்காலி.... அதற்கு வயது 40 மேலிருக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அந்த நாற்காலியில் உட்காராவிட்டால் அவருக்கு அந்த நாளே விடியாது. எங்காவது பயணம் போனால் கூடுமானவரை இரவு தங்காமல் திரும்பிவிடுவார். அதையும் மீறி இரவு தங்குவதாக இருந்தால், தன் படுக்கை அறையில் அந்த நாற்காலியை வைத்து பூட்டிவிட்டுப் போவார். அடிக்கடி அதைத் துடைப்பார். வேறு எவரும் அந்த நாற்காலியில் உட்காரக் கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் ஒரு பழைய வேட்டியால் மூடிவைப்பார். நாற்காலி மீதான அவரின் அக்கறையும் ஆசையும் அவரின் மனைவியை "உனக்கு அதுதான் பொண்டாட்டி..' என்று கிண்டல் செய்ய வைத்தது. அதற்கு அவர், ""ஆமாண்டி... அது உன்னைப் போல் திட்டாது. கடிக்காது....'' என்பார்.

""அப்படியா? அப்ப அதையே வைச்சு மாரடிக்க வேண்டியதுதானே?'' என்று மனைவி அவரை வார்த்தையால் அழுத்துவாள்.

அப்போதெல்லாம் நாகலிங்கம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மெüனமாவார். அவரின் அந்த மெüனத்தின் பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு அவளுக்குத் தெரியுமா? அப்படியே தெரிந்தாலும் அதனைப் புரிந்து கொள்கிற அறிவு அவளுக்கு இருக்குமா என்ன?...

சிங்கப்பூர் ஜப்பானியரின் ஆட்சிக்குள் சுருண்டு

கிடந்த காலம். மனித நடமாட்டமே பகலோடு முடிந்து போயிருந்த நேரம். இரவில் மின் வெளிச்சம் இன்றி இருட்டுக்குள் வீட்டில் மனிதர்கள் முடங்கியிருந்தனர்.

ஒருநாள் இரண்டு பேர் நாகலிங்கம் வீட்டிற்கு வந்தார்கள். இருவரும் ராணுவ உடையில் இருந்தார்கள்... "வந்தேமாதரம்... ஜெய்ஹிந்த்' என்றார்கள். பதிலுக்கு அவரும் பக்கத்துவீட்டு ராவுத்தரும் "வந்தேமாதரம்' என்றார்கள். வந்தவர்களில் ஒருவன் தமிழில் பேசினான். இன்னும் மூணு நாள்ல எங்க தலைவர் நேதாஜி முனியப்பர் கோயில் மைதானத்தில பேசப் போறாரு. நீங்க மட்டுமில்ல உங்க சொந்தக்காரங்க எல்லாரையும் வரச் சொல்லுங்க. நாங்கள்ளாம் தலைவரு ராணுவத்த சேர்ந்தவங்க...

தகவல் சொல்லி முடிந்ததும் வந்தேமாதரம் எனச் சொல்லிவிட்டுப் பக்கத்து வீட்டிற்குப் போனார்கள். பக்கத்து வீட்டு ராவுத்தர் புருவங்கள் உயர முகம் மலர நேதாஜி வர்றாரா? எப்பேர்ப்பட்ட தலைவர்... அவர் பாக்க கெடைக்கணுமே! எப்படின்னா பயணத்த தள்ளிப் போடுறேன்.. இப்பவே சீனன்கிட்டே சொல்லிட்டு வர்றேன்.... என்ற ராவுத்தர் அவசரமாக வெளியே புறப்பட்டார்....

நாகலிங்கம் வீட்டை ஒட்டியே முனியப்பர் திடல் இருக்கிறது. சொல்லப்போனால் முனியப்பர் திடலுக்கு ஐந்து நிமிடத்தில் நடக்கலாம். அந்த திடலுக்கு நேதாஜி வருவது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தெரிந்தவர்கள் எல்லோரிடமும் நேரில் போய் திடலுக்கு நேதாஜி வருவதைச் சொன்னார். திடலுக்குப் போக கதர் குல்லா, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டார். எவரைப் பார்த்தாலும் நேதாஜி, அவர் வீட்டிற்கு வருவதாக நினைத்துப் பேசத் தொடங்கினார். நாகலிங்கத்தின் மனைவியோ பயப்படத் தொடங்கினாள்.

""வெள்ளக்காரன் கண்டா என்னா ஆகுமோ?'' நாகலிங்கம் சிரித்தார்.

""உனக்கு அறிவு இல்லையா? வெள்ளக்காரன் சிங்கப்பூர்ல எவன் இப்ப இருக்கான்? ஜப்பான்காரன்தான் இருக்கான். ஊரையே அவன் புடிச்சிட்டான். ஜப்பான்காரனும் நேதாஜியும் கூட்டு. சிங்கப்பூர்ல இருந்து ஒரு வானொலி ஒலிபரப்பே நடக்குது'' என்று ஒரு விரிவான கதையைச் சொன்னான். அப்போது வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தார் அவர். வெளியே சீனன் ஒரு நாற்காலியோடு சிரித்துக் கொண்டு நின்றான். அவருக்குத் தெரிந்த சீனன். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தெரியும்.

""நாகா... நாக்காலி செஞ்சாச்சு.... பாரு...''

சீனன் கொண்டுவந்த நாற்காலியைப் பார்த்தார். இரண்டு மாதத்திற்கு முன் தேக்கு மரத்தில் செய்யச் சொன்னது. இப்போதுதான் கொண்டு வருகிறான். நாற்காலியை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்தார் அவர். பிறகு அதில் உட்கார்ந்து பார்க்கப் போனவர் ஏதோ ஒரு நினைவில் உட்காரவில்லை. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து உட்கார வேண்டும் என்று அவர் முடிவு கட்டினார். வேறு எவருமே அதில் உட்காரக் கூடாது என்று மனைவியிடம் சொல்லிவிட்டு ஒரு வேட்டியை எடுத்து நாற்காலியை மூடினார்.

பிறகு வீட்டிலிருந்த பஞ்சாங்கத்தை எடுத்து நல்ல நாளும் நேரமும் தேடினார். இன்னும் நாலு நாளில் வரும் திங்கட்கிழமை நல்ல நாள், வளர்பிறை காலை 9-30 லிருந்து 10-30 க்குள் நல்ல நேரம். காலையில் குளித்துமுழுகி சாமி கும்பிட்டுவிட்டு உட்காரப் பொறுத்தமான நேரம். மனைவியிடமும் சொல்லிவிட்டார். மனைவி அவரைக் கிண்டல் செய்தாள்... நாற்காலியில் உக்கார நல்ல நேரம் பாக்கணுமா?

""இது நா சொல்லி செஞ்சது, அதும் தேக்கு மரத்தில செஞ்சது. ஒக்கார நல்ல நேரம் பாக்கணும்!''

ஞாயிற்றுக்கிழமை. முனியப்பன் திடலே அலங்காரத்தில இருந்தது. ஒரு மேடை போட்டிருந்தார்கள். நீண்ட குழல் ஒலிபெருக்கிகள் எல்லாத் திசையிலும் கட்டியிருந்தார்கள். கூட்டம் ஐந்து மணிக்கு என்றபோதும் நாகலிங்கம் மூன்று மணிக்கே புறப்பட்டார். அவரோடு பக்கத்து வீட்டு ராவுத்தரும் புறப்பட்டார். இருவரும் காந்தி குல்லாய் போட்டிருந்தார்கள். குல்லாய் போடுவதற்காக வழக்கமாக அணியும் தொப்பியை நாகலிங்கம் வீட்டில் கழற்றிவைத்தார் ராவுத்தர்..

நேதாஜியை நேருக்கு நேர் பார்ப்பதற்காக மேடைக்கு அருகில் போய் இருவரும் நின்றார்கள்...

இருவரும் மேடைக்கு அருகில் போய் மேடையில் போட்டிருந்த நாற்காலிகளைப் பார்த்தார்கள். மிகவும் பழைய நாற்காலி. அவனுக்குள் "இவங்களுக்கு வேற நாக்காலி கெடைக்கலியா?' என்ற கேள்வி சுழன்றது. ஆனால் ராவுத்தர் மேடையருகே நின்ற ராணுவ சிப்பாயிடம், ""மேடையில நாக்காலி போட்டிருக்கீங்க. தலைவர் ஒக்கார நல்ல நாக்காலி உங்களுக்கு கெடைக்கலியா?'' என்று கேட்டார்.

அந்த சிப்பாய் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ""கெடைக்கலீங்க.. கெடைச்சா போடுவோம்!'' என்றான்.

ராவுத்தர் நாகலிங்கத்தைப் பார்த்தார். அவர் ராவுத்தரின் பார்வையைப் புரிந்து கொண்டு, ""என்கிட்ட தேக்கு மரத்தில செஞ்ச நாக்காலி இருக்கு... நானே இன்னும் ஒக்காரல.. எடுத்திட்டு வரவா?''

""ம்... கொண்டாங்க... தலைவர் ஒக்காரலாமே...''

நாகலிங்கம் வீட்டுக்குப் போனார். அவருக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தெரியவில்லை. அந்த நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். மேடையில் இருந்த நாற்காலியை எடுத்துவிட்டு  நாகலிங்கத்தின் தேக்குமர நாற்காலியைப் போட்டார்கள். அது மற்ற நாற்காலியை விட உயரமாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது.

முனியப்பர் திடலில் பெருங்கூட்டமே கூடிவிட்டது. குறித்த நேரத்தில் நேதாஜி ராணுவ ஜீப்பில் வந்து இறங்கினார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மேடைக்கு வந்து நாகலிங்கத்தின் நாற்காலியில் உட்கார்ந்தார். நாகலிங்கத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி... எப்பேர்ப்பட்ட தலைவர். பிரிட்டிஷ்காரனே பயப்படுகிற தலைவர். அவர்அந்த நாற்காலியில் முதன் முதலாய் உட்கார்ந்தது வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பரிசாக நினைத்தார். அவர் நாற்காலியை செய்து கொண்டு வந்த சீனனை மனதுக்குள் பாராட்டினார். தலைவர் நேதாஜி உட்கார்ந்து விட்டுப் போகிற காலமறிந்து நாற்காலியைக் கொண்டுவந்து கொடுத்தானே!

ஒரு மாமன்னரைப் போல் நாற்காலியில் உட்கார்ந்திருந்த நேதாஜியையே பார்த்தார்... நாகலிங்கம். நேதாஜி எழுந்து பேசியபோது அவரின் வார்த்தைகள் மந்திரமாய் அவருக்குள் நுழைந்தன...

மேடையைவிட்டு இறங்கிய நேதாஜியை நெருங்கிப் பார்க்க மக்கள் முண்டியடித்தார்கள். நாகலிங்கத்தால் அவரை நெருங்க முடியவில்லை. ஆனால் நேதாஜி போகிற வரை அவரையே பார்த்த அவர், அவர் போனபிறகு மேடைக்குப் போய் அந்த நாற்காலியைத் தொட்டுக் கும்பிட்டு அதைத் தூக்கிக் கொண்டு போனார்...

வீட்டுக்குள் நாற்காலியோடு போன அவர் தன் மனைவியைக் கூப்பிட்டு, "இந்த நாக்காலியில தலைவர் நேதாஜி உக்காந்தாரு. இது தனியாவே இருக்கட்டும். வேற யாரையும் ஒக்காரவைக்க வேணாம்....'' என்று சொல்லிவிட்டு, ஒரு வேட்டியை அதன் மேல் போர்த்தினார்.

""அப்படின்னா.. பெட்ரூமில வைங்க'' என்றாள் நாகலிங்கத்தின் மனைவி.

இப்போது வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ராவுத்தர் உற்சாகத்தோடு நின்றார்...

""நீர் எங்க போனீர்?''

""கூட்டத்திலே சிக்கிட்டேன். ஆனா தலைவர பக்கத்திலயே பார்த்தேன். ஆமா நீர் எங்க போனீர்?''

""நானா தலைவர் நாக்காலியில ஒக்காந்ததை பார்த்துக்கிட்டே இருந்தேன். யாருக்கும் கெடைக்காதது நாசெஞ்செடுத்த புது நாக்காலியில் தலைவர் ஒக்காந்த அந்த நெனப்பு சாகிற வரைக்கும் போதும்''

அந்த நாற்காலியில் வேறு எவரும் உட்கார்ந்தது இல்லை. ஆனால் இன்று அது சீனன் வீட்டில்... அவரால் தாங்க முடியவில்லை.

சிங்கப்பூரைவிட்டு மலேசியாவுக்குக் குடியேறியபோது எத்தனையோ பொருட்களைச் சிங்கப்பூரிலேயே விட்டு வந்தவர் அந்த நாற்காலியை மட்டும் விடவில்லை. மலேசியாவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.

இரவெல்லாம் நாகலிங்கக் கவுண்டர் தூங்கவில்லை. நாற்காலியை நினைத்துக் கொண்டே படுக்கையில் கிடந்தார் அவர்.

விடிந்தது. ஆறுமணிக்கெல்லாம் எழுந்து விடுகிற நாகலிங்கம் படுக்கையைவிட்டு எழும்பவே இல்லை. எல்லாரையும் காலையில் எழுப்பிவிடுகிற அவரை எட்டு மணிக்கு மேல் எழுந்த மகனும் மருமகளும் எழுப்பிவிடப் பயந்தார்கள். படுக்கையைவிட்டு எழுந்ததுமே நாற்காலியைக் கேட்டால்?

நாகலிங்கக் கவுண்டர் படுத்ததும் பன்னிரண்டு மணிக்கு மேல் சீனன் வீட்டில் அடிதடிச் சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க மகனும் மருமகளும் போனார்கள். பர்த் டே பார்ட்டிக்கு வந்த இருவர் குடிபோதையில் போட்ட சண்டையில் ஒருவன் நாகலிங்கத்தாரின் நாற்காலியைத் தூக்கிப் போட அதன் கைப்பிடி உடைந்து போனது. சண்டையை விலக்கிவிட்ட சீனன் கவலையோடு அந்த நாற்காலியை ரிப்பேர் செய்து தருவதாகச் சொன்னான். அவன் செய்வான். ஆனால் அப்பாவிடம் அதை எப்படிச் சொல்வது?

காலை பதினொரு மணிக்கு மேலாகியும் நாகலிங்கக் கவுண்டர் எழும்பவே இல்லை. ஒருநாளும் அவர் இப்படிப் படுத்திருந்ததே இல்லையே. படுக்கையருகே போய்  உடலைத் தொட்ட அவருடைய மனைவியின் அலறல் அந்த வீட்டையே குலுக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.