ஸ்ரீமத் பகவத் கீதை
மகரிஷி வியாசரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது, மஹாபாரதம். மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களும் 18 பருவங்களும் கொண்டது.
மகரிஷி வியாசரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது, மஹாபாரதம். மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களும் 18 பருவங்களும் கொண்டது. இதில் பீஷ்ம பருவத்தில் 25வது அத்யாயத்திலிருந்து 42 வது அத்யாயம் வரை உள்ள 18 அத்யாயங்களே ஸ்ரீமத் பகவத் கீதை.
பாரதப் போரின் பத்தாவது நாள் யுத்தத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்ததை அறிந்து மனம் வருந்திய மன்னர் திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் முதல் நாள் முதல் நடந்த அனைத்தையும் மீண்டும் கூறு என்று பணித்தபோது சஞ்சயன் கூறுவதாக வருகிறது.
பகவத் கீதை, உரையாடல் பாணியில் அமைந்துள்ளது. முதல் அத்யாயத்தில் முதல் சுலோகம் மன்னர் திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் கூறுவதாகவும் மற்ற சுலோகங்கள் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனன் உரையாடலாகவும், நடுவில் சில சுலோகங்கள் சஞ்சயன் கூறுவதாகவும் வருகிறது.
Advertisement
ஒரு சுலோகம் என்பது 2 வரிகள் மட்டுமே (சமஸ்கிருதத்தில்) கொண்டது. எந்த விளக்கமும் இல்லாமல் எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சுலோகங்கள் அடங்கிய புத்தகம் 100 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமாகவே இருக்கும். எளிதில் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எல்லோரும் நினைப்பதுபோல் 500 முதல் 1000 பக்கங்கள் வரை கொண்ட நூல் அல்ல. பல்வேறு விளக்கங்களுடன் எழுதப்பட்டதே அந்த புத்தகங்கள். பாரதப் போர் 18 நாட்கள் நடந்தன. போர் நடந்த குருஷேத்திரம் என்னும் இடம் டில்லிக்கு வடக்கேயும் அம்பாலாவிற்கு தெற்கேயும் உள்ளது. இன்றும் அந்த இடம் குருஷேத்திரம் என்னும் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.