தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாந்திக்கு... பானகம்!

வாந்தி ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் கவனிக்க வேண்டும். நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம், மார்புச் சளி, வயிற்றில் அதிகமான அமிலச் சுரப்பு,

எஸ். சுவாமிநாதன்

எனது 41/2  வயதுடைய பேரன் பால், பழம், இட்லி, தோசை, சாதம் என எந்த உணவுவகைகளைச் சாப்பிட்டாலும் சிறிது நேரம் கழித்து வாந்தி எடுக்கிறான். வாரத்தில் மூன்று நாட்களாவது இவ்வாறு வாந்தி எடுக்கிறான். மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகள் கொடுத்து சரியாகி விடுமென்கிறார்கள். ஆயுர்வேதமுறைப்படி இந்நிலையை மாற்ற ஏதேனும் வழி உள்ளதா?

அ.அய்யப்பன், மார்த்தாண்டம்.

வாந்தி ஏற்படுவதற்கான காரணத்தை முதலில் கவனிக்க வேண்டும். நெஞ்சுக்கட்டு, ஜலதோஷம், மார்புச் சளி, வயிற்றில் அதிகமான அமிலச் சுரப்பு, பித்தப் பையில் சுரப்பு அதிகம், மலச்சிக்கல் முதலியவற்றினால் வாந்தி உண்டாகும். வாந்தியில் கபம் அதிகமா? பித்தம் அதிகமா? என்பதை அறிந்து கொள்வது அவசியம். கபதோஷத்தின் அளவு வயிற்றில் அதிகமிருந்தால் வாந்தி வெள்ளை நுரையுடன் உணவுடன் சேர்ந்து கெட்டியாக வெளியேறும். அதை வெளியேற்ற அரிசித் திப்பிலி, இந்துப்பு, வசம்பு, மலங்காரைப் பூ இவற்றைச் சூரணம் செய்து, தேனில் குழைத்து நாக்கில் தடவி, கொஞ்சம் வெந்நீர் புகட்டினால் உடனே வாந்தியாகி விடும். இந்த மருந்துகள் அனைத்தும் சேர்த்து சுமார் ஐந்து கிராம் முதல் எட்டு கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். மருந்தின் அளவிற்கு இருமடங்கு தேன் குழைத்துக் கொள்ளுதல் நல்லது. இதனால் இந்த வாந்தியின் மூலமாக வயிற்றிலுள்ள கபதோஷம் விலகி விடும். துளசி, வெற்றிலை, கற்பூர ஓமவல்லி இவற்றின் தனிச்சாற்றை தேனுடன் கலந்தும் கொடுக்கலாம். கபத்தினால் ஏற்படும் வாந்தி இதன் மூலம் நிவிருத்தியாகும்.

வாந்தியில் புளிப்பு வாடை, மஞ்சள், பச்சை நிறத்தோற்றம் இருப்பின் பித்தக் கோளாறு உள்ளது என்பதை ஊகித்து அறியலாம். வாந்தியானது, நுரையின்றி கொஞ்சம் நீர்க்க இருக்கும், வாடையும் கடுமையாக இருக்கும். அதில் சிறு பேதிக்கு மருந்து கொடுத்தல் நல்லது. இதற்கு கோரோசனை மாத்திரை அல்லது அவிபத்தி சூரணம் விசேஷம். பாலில் கோரோசனையைக் குழைத்துத் தரலாம். ஒருதரம் வாந்தி உண்டு பண்ணி மேல் குடலையும் சுத்தம் செய்து மலப்ரவிருத்தி மூலம் கீழ்குடலையும் சுத்தம் செய்யும் அவிபத்தி சூரணம் சுமார் 2 1/2 கிராம் அளவில் எடுத்து ஐந்து மில்லி தேன் குழைத்து நக்கிச் சாப்பிட்டால் நன்றாக பேதி ஏற்பட்டு அதனுடன் பித்தமும் வெளியேறிவிடும். இதில் ஏதேனும் ஒன்றைச் செய்தால் போதுமானது.

மயிலிறகின் முடி பாகத்தை கரியாக்கி அதன் தூளைக் குழைத்துக் கொடுத்தல் மிகப் புராதனமான குடும்ப வைத்யமுறையாகும். சுமார் ஆறு அரிசி எடை மயில் தோகைக் கருக்குடன் அரிசித்திப்பிலி சூரணம் இரண்டு அரிசி எடை சேர்த்துக் கொடுத்தல் கப வாந்திக்கும், தான்றிக்காயின் தோல் சூரணம் நான்கு அரிசி எடை சேர்த்துக் கொடுத்தல் பித்த வாந்திக்கும் மிகவும் நல்லது. இந்த மருந்து வாந்தியுடன் விக்கலையும் போக்கக் கூடியது.

வாந்தியை நிறுத்தவும், பசியின்மையைப் போக்கவும், நா வறட்சி, நாக்கில் ருசியின்மை, வாயில் தித்திப்பு, கசப்பு, புளிப்பு உணரப்படுதல், நாக்கில் நீர் ஊறுதல், உமட்டுதல் போன்றவற்றுக்கு, தோல் நீக்கிய இஞ்சிச் சாறு 125 மி.லி.யை நன்கு தெளிய வைத்து, எலுமிச்சம்பழச்சாறு 250 மி.லி.யுடன் சேர்த்து, 750 கிராம் சர்க்கரையும் கலந்து மெல்லிய துணியால் வடிகட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். இளம்பாகாக  வரும்போது கீழே இறக்கி ஆற வைத்து ஏலக்காய்த்தூள்  ஒரு கிராம், பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை, குங்குமப்பூ ஒரு சிட்டிகை இவற்றை நன்கு அரைத்து பானகத்தில் சேர்த்து கலக்கிவிடவும். இதற்கு ஜம்பீராதிபானகம் என்று பெயர்.

ஒரு நாளில் இரண்டு, மூன்று வேளை சாப்பிடலாம். வேளைக்கு ஒன்றிரண்டு டீ ஸ்பூன் வீதம், தண்ணீர் கலந்தோ கலக்காமலோ, உணவிற்கு முன்போ, பின்போ நன்கு சுவைத்துச் சாப்பிடக் கொடுக்கவும். இப்பானகம் பல்வேறு வகையில் உபயோகிக்கக் கூடியது. தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கியிருப்பதால் பலருக்கும் ஏற்படும் வாயில் கசப்பு, புளிப்பு, புளித்த ஏப்பம், வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்ச்சி, உணவில் வெறுப்பு, கண், கை, கால்களில் லேசாக எரிச்சல், இவற்றுடன் ஏற்படும் அஜீரணத்துக்கும், தலைச்சுற்றுதல், மயக்கம் போன்ற கோடைக்கால உபாதைகளுக்கு உணவிற்குப் பிறகு 2 -3 வேளை இதைச் சாப்பிட மிகவும் நல்லது. உணவைச் செரிக்க உதவும் புளிப்பு திரவங்கள் சரியாகச் சுரக்காமலும், ஈரல் சரியே வேலை செய்யாமலும் ஏற்படும் அஜீரணத்துக்கு உணவிற்கு ஐந்து பத்து நிமிடங்களுக்கு முன்னர் இந்த பானகத்தைச் சாப்பிட்டு, உணவை ஏற்க அந்த அஜீரணம் மாறிவிடுகிறது.

கர்ப்பிணிக்கு கருத் தரித்தது முதல் சில மாதங்களுக்கு மசக்கையால் ஏற்படும் இனந்தெரியாத கலக்கம், உமிழ்நீர் சுரத்தல், குமட்டல், வாந்தி, பசிக் குறைவு முதலிய உபத்திரவங்களைப் போக்குவதற்கும் ஏற்ற சிறந்த மருந்து.

சிறுபிள்ளைகளின் வாந்தியை நிறுத்தக் கூடிய வில்வாதி

லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம், ஜீரகாரிஷ்டம், பிப்பல்யாஸவம், மாதீபல ரஸôயனம் போன்ற ஆயுர்வேத

மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வர நிறைவான பலனை விரைவாகப் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT