தன்ஷிகா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் "எண்ணம் புது வண்ணம்'. புதுமுகம் விவேக், அருந்ததி, திவ்யாநாகேஷ், நிழல்கள்ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கஸ்தூரிராஜாவின் உதவியாளர் ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ""நடைப் பயணமாய் போகிற மனசு, காரில் போகும் போது இல்லை. இந்திய நடிகர்களிலேயே அதிக விலை கொண்ட உடைகளை அணிகிறவர் ஜாக்கி ஷெராப் என்பார்கள். இப்போதும் நடை பாதைகளில் உறங்கிய இரவுகளை அவர் மறக்காமல் இருக்கிறார் என ஒரு செய்தி படித்தேன். நடை பாதைகளில் உறங்குபவர்களைப் பார்த்தால், காரை விட்டு இறங்கி அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து மகிழ்ச்சி அடைவது அவரது வழக்கமாம். அதைத்தான் இந்தப் படத்துக்கு கருவாக எடுத்துக் கொண்டேன்'' என்கிறார் இயக்குநர் ராகவன்.
அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் படம் "இரும்பு குதிரை'. இப்படத்தில் பைக் ரேஸ் வீராங்கனையாக நடிக்க லட்சுமிராய்க்கு அழைப்பு வந்தது. உணவு கட்டுப்பாடு, குறித்த நேரத்தில் பயிற்சி உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கால்ஷீட் பெற்றார் இயக்குநர் யுவராஜ். படம் தொடங்கி 60 சதவீதம் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. ஆனால் லட்சுமிராய் இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. நீண்ட நாள்கள் ஆகியும் தன்னை அழைக்கவில்லை என கோபத்தை வெளிப்படுத்தினார் லட்சுமிராய். ""படத்தில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. மற்ற படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்னை உள்ளது'' என மீடியாக்களில் பேசி தீர்த்தார். இதையடுத்து அவர் படத்திலிருந்து வெளியேறியதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் லட்சுமிராயை தொடர்பு கொண்ட படக்குழுவினர் அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். கோபத்திலிருந்த லட்சுமிராய் முதலில் நடிக்க வர மாட்டேன் என கூறினார். ஆனால் இப்போது படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன், டாப்ஸி என பெரும்பாலான ஹீரோயின்களுடன் ஆர்யாவுக்கு நெருக்கம் என்பது போல் கிசு கிசு வெளியான வண்ணம் உள்ளது. அடுத்த கிசுகிசு அமலாபாலுடன். அமலாபாலுக்கு ஆர்யா தாலி கட்டுவது போல் இணைய தள பக்கத்தில் வெளியான புகைப்படம்தான் இந்த லேட்டஸ் கிசு கிசுவுக்குக் காரணம். ஏற்கெனவே இந்த ஜோடி "வேட்டை' படத்தில் இணைந்து நடித்தது. இப்படத்தின் கதைப்படி அமலாபாலுக்கு ஆர்யா தாலி கட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த படம்தான் ஆர்யா - அமலா திடீர் கிசு கிசுவுக்குக் காரணம். "ராஜா ராணி' படம் போல இதுவும் ஒரு ஸ்டண்ட்!
"காதலில் சொதப்புவது எப்படி' படத்துக்குப் பின் பாலாஜி மோகன் எழுதி, இயக்கும் படம் "வாயை மூடி பேசவும்'. மம்முட்டி மகன் துல்கர் சல்மான் இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நஸ்ரியா நஸீம் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென குரலை இழந்து விட்டால் என்னவாகும் என்பதை காதலின் பின்னணியில் நகைச்சுவையாகச் சொல்வதுதான் கதை. ""ப்ளூ ஜூரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திடீரென குரல் பறி போகிறது என்ற ஒரு வரி கதை முதலில் உருவானது. அதை சினிமாவுக்கான கற்பனைகளோடு முழு திரைக்கதையாக மாற்றினேன்'' என்றார் இயக்குநர் பாலாஜி மோகன்.
சுதந்திரத்துக்கு முன்னர் வெளி மாநிலங்களில் படங்களைத் தயாரித்ததன் மூலம் படத் தயாரிப்பில் இறங்கினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். பின்னர் மயிலாப்பூர் பகுதியில் "பிரகதி ஸ்டூடியோ'வை ஏற்படுத்தி படங்களைத் தயாரித்து வந்தார். பின்னர் காரைக்குடியில் உருவான "ஏவி.எம்.நிறுவனம்' சில ஆண்டுகளுக்குப் பின் சென்னை, வடபழனிக்கு மாற்றப்பட்டு இந்தியாவின் சிறந்த படத் தயாரிப்பு நிறுவனமாக மாறியது. ஏவி.மெய்யப்ப செட்டியாரைத் தொடர்ந்து அவரது மகன்களான எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் படத் தயாரிப்பில் இறங்கினர். தொடர்ந்து அவர்களது புதல்வர்களும் மூன்றாம் தலைமுறையாகப் படங்களைத் தயாரித்தனர். தற்போது ஏவி.எம்.சரவணனின் புதல்வரான எம்.எஸ்.குகனின் மகள்கள் அபர்ணா குகன், அருணா குகன் ஆகியோர் நான்காம் தலைமுறையாகப் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தயாரித்துள்ள படத்துக்கு "இதுவும் கடந்து போகும்' என பெயரிடப்பட்டுள்ளது. சிவாஜி தேவ், ஷில்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி இணைய தளத்தில் வெளியாகவுள்ளது.
வெளிநாடுகளுக்கு திருமணமாகிச் செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களைச் சொல்கிற ஹாலிவுட் படமாக உருவாகிறது "பிளட் அண்ட் கர்ரி'. ஹாலிவுட் உலகில் தவிர்க்க முடியாத தமிழரான ஜாக் ஏ.ராஜசேகர் இப்படத்தை தயாரிக்கிறார். ரஜினியின் "எந்திரன்' படத்துக்கு தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பங்காற்றிய இவர், இங்கிருந்து அமெரிக்கா செல்லும் இயக்குநர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளார். தற்போது "பூலோகம்' படத்தில் பணியாற்றி வரும் இவர், இந்தியர்களுக்கான அடையாளமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். அதுல் ஷா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. திருமணமாகிச் செல்லும் இந்திய பெண்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள். கலாசார வேறுபாடுகளை களைவதற்கு அவர்கள் படும் சிரமங்கள்... கலாசார, பண்பாட்டிலிருந்து மீள முடியாத சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் சொல்வதுதான் கதை. முதல் காட்சியிலேயே மனைவி இறந்து விட, அதிலிருந்து விரியும் கதையாக உருவாகியுள்ளது திரைக்கதை. உலகம் முழுவதும் ஒரே நாளில் இப்படம் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.