தினமணி கதிர்

திரைக்கதிர்

மதுரை, லுங்கி, அரிவாள், முறுக்கு மீசை என பார்த்த "சுப்பிரமணியபுரம்' சசிகுமாரா இது? இத்தாலி, ஸ்விட்சர்லாந்தில் டூயட், மும்பை ஹீரோயின்,

ஜி. அசோக்

மதுரை, லுங்கி, அரிவாள், முறுக்கு மீசை என பார்த்த "சுப்பிரமணியபுரம்' சசிகுமாரா இது? இத்தாலி, ஸ்விட்சர்லாந்தில் டூயட், மும்பை ஹீரோயின், சந்தானம் - சூரி காமெடி என "பிரம்மன்' படத்துக்காக தன் சினிமா பாணியையே மாற்றியிருக்கிறார். ""வரிசையாக ஒரே மாதிரியான சினிமாக்கள் வந்த போது, நானும் அந்த மாதிரி ஆள் என்று பலரும் நினைத்து விட்டார்கள். கொடைக்கானல் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தவன் என்றால் நம்ப ஆள் இல்லை. அதனால்தான் அதிரடியாக ஒரு படம். ஃபாரின் டூயட், கலர் கலர் ஆடைகள்... இருந்தாலும் முந்தைய என் படங்கள் ஏதோ ஒரு நோக்கத்துக்காக எடுக்கப்பட்டவை. அதே எல்லையில் இந்த படமும் நிற்கும். படத்தின் இயக்குநர் சாக்ரடீஸ் மூன்று வருடங்கள் எனக்காகக் காத்திருந்து, ""நீங்கதான் நடிக்கணும்'' என விடாப்படியாக நின்றார். அந்த காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நினைத்தது மாதிரியே அழகாக வந்திருக்கிறது படம். படைக்கிறவன் பிரம்மன். இதுதான் கதை. குடும்பம், காமெடி, காதல், நட்பு என எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான படம். எதையாவது மாற்றி செய்தால், உனக்கு அதுதான் வரும் என அறிவுரை சொல்லுவார்கள். ஆனால் அதையெல்லாம் விட்டு, மனசுக்கு பிடித்ததை அழகாக செய்து முடித்திருக்கிறேன்.''

"பொன்மனம்', "கார்மேகம்' உள்ளிட்ட படங்களை இயக்கியதோடு கவுண்டமணி - செந்தில், வடிவேலு போன்றவர்களுக்கு பல படங்களில் காமெடி காட்சிகள் எழுதி கவனம் ஈர்த்தவர் எஸ்.பி.ராஜ்குமார்.  சிறிது காலமாக காமெடி காட்சிகள் எழுதுவதைத் தவிர்த்து பட இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் இயக்கும் படம் "பாக்கணும் போல இருக்கு'. எப்.சி.எஸ்.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிக்கிறார். பரதன், கீர்த்திகா, சூரி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர்...""காமெடி காட்சிகள் என்னைப் பெரிய அளவில் கவனிக்க வைத்திருந்தாலும், விஜய் நடிப்பில் இயக்கிய "சுறா' எனக்குப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கவுண்டமணி - செந்தில், வடிவேலு என இரு தரப்பு காமெடிகளுக்கும் வெவ்வேறு களங்களில் செயல்பட வேண்டியிருந்தது. இரு தரப்பு காமெடிகளையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆனால் இப்போது காமெடி பாணி முற்றிலும் மாறி விட்டது. அந்த பாணியில்தான் "பாக்கணும் போல இருக்கு' படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர்.

"த்ரிஷ்யம்' மலையாளப் படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனா நடித்திருந்தார்.  தமிழ் ரீமேக்கிலும் கமல்ஹாசன் ஜோடியாக மீனாவே நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.  கமல்ஹாசனின் விருப்பமும் மீனா நடிக்க வேண்டும் என்பதுதான். "த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாள வாய்ப்புகள் மீனா வசம் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளன.  மீனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பத்தால், திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகைகள், கதைக்கு முக்கியத்துவம் உள்ள வாய்ப்புகளில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இளையராஜாவின் குடும்பத்திலிருந்து இன்னொரு இசையமைப்பாளர்... "அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா, 100 படங்களை கடந்துள்ளார்.  கார்த்திக் ராஜா, பவதாரணி இருவரும் அவ்வப்போது தனியாக இசையமைப்பதுடன் இளையராஜாவின் இசைக்குழுவில் பணியாற்றி வருகிறார்கள்.   இந்த வரிசையில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவா "மகா மகா' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சஸ்பென்ஸ், த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாகி வருகின்றன. வேலை நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்லும் தமிழ் இளைஞனுக்கு அங்குள்ள பெண் மீது காதல். திடீரென அப்பெண் காணாமல் போய் விட, அங்குள்ள போலீஸ் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டாரா? என்பதுதான் கதை.

ஆஸ்திரேலியப் பெண் மெலிசா கதாநாயகியாக நடிக்கிறார்.  புதுமுகம் மதிவாணன் கதாயநாயகனாக நடிப்பதோடு, கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

"பரதேசி' படத்தையடுத்து பாலா இயக்கும் படத்தின் களம் கரகாட்டக் கலை. தஞ்சை வட்டார பகுதிகளில் இன்றும் கரகாட்டக் கலையை நம்பி வாழும் கலைஞர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதத்தில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கரகாட்டத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதன் பாரம்பரியம் பற்றிய விவரங்களை பாலா சேகரித்திருக்கிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி வேடத்துக்கு ஸ்ரேயா  தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்ரேயா கடைசியாக "ரவுத்திரம்' படத்தில் நடித்திருந்தார். 2 வருடங்களுக்கு பின் தற்போது இவருக்கு பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக இதுவரை ஏற்காத வேடத்தில் ஸ்ரேயா நடிக்கவுள்ளார். இதனால் கரகாட்டப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார் ஸ்ரேயா. முதற்கட்டமாக 6 நாள்களில் 12 பாடல்களை இப்படத்துக்காக பதிவு செய்து விட்டார் இளையராஜா. சினிமா பாடலாசிரியர்களை தவிர்த்து கரகாட்டப் பாடல்கள் அதிக அளவில் இப்படத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. செழியனின் ஒளிப்பதிவில் விரைவில் தொடங்க இருக்கிறது படப்பிடிப்பு. இதற்கிடையில் மிஷ்கின் இயக்கும் படத்தை தனது பாலா ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க இருக்கிறாராம் பாலா.

சூர்யாவுடன் நடிக்கும் "அஞ்சான்' படம் தொடர்பாக சமந்தாவைப் பற்றி இணையதளங்களில் வெளியாகிய சர்ச்சைக்குரிய தகவல்கள். இப்படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்பட்ட போது சமந்தாவின் புகைப்படங்கள் இடம் பெறவில்லையாம். இதனால் அவர் கோபம் அடைந்து, வருத்தத்தில் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது. ""சமீபத்தில் "அஞ்சான்' படம் தொடர்பாக நான் கோபம் அடைந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளிவருகின்றன. எனக்கு வேண்டாதவர்கள் கிளப்பி விடும் வதந்திதான் அது. எந்தவொரு விஷயம் பற்றி நான் பேட்டி கொடுத்தாலும் அது தொடர்பாக என் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவேன். "அஞ்சான்' பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சூர்யா - லிங்குசாமி கூட்டணியில் நடிக்க வெகு நாள்கள் காத்திருந்தேன். அது இப்போதுதான் கைக்கூடி வந்திருக்கிறது. பெரிய படங்களில் நடிக்கும் போது மற்றவர்களுக்கு அது பொறாமையை ஏற்படுத்துவது இயல்புதான்'' என தனது டிவிட்டர் பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT