எனது 16 வயதுடைய மகள் பத்தாம் வகுப்பில் படிக்கிறாள். நல்ல புத்திசாலிப் பெண். ஆனால் படிப்பில் நாட்டமில்லாமலும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதும், கோபப்படுவதும், வாக்குவாதம் செய்வதுமாக இருக்கிறாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நிலையாக இருக்கமாட்டாள். மேலும் தலைவலியாலும், காதுவலியாலும் அவதிப்படுகிறாள். அவை குணமாகி என் மகள் நன்கு படித்து, நற்குணத்துடன் வாழ்வில் முன்னேற ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள் எவை?
சாந்தி, கோயமுத்தூர்.
ஸாதகம் என்றொரு பித்தம் இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அறிவு, நுண்ணறிவு, தன்னிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவற்றை அளித்து தனக்கு விருப்பமான புலப்பொருளடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளுதல் இவற்றால் ஸாதக பித்தம் என்று வழங்கப்படுகிறது. இந்த ஸாதக பித்தத்தை ஊக்குவிப்பதற்கு வயிற்றிலுள்ள பாசகம் என்ற உணவை செரிக்கச் செய்யும் பித்தத்தின் நேரடியான உதவி தேவையிருக்கிறது. உண்ணும் உணவிலிருந்து அது சத்தான பகுதியையும், மலத்தையும் பிரிக்கிறது. தன் இருக்கையில் இருந்துகொண்டே ஸாதக பித்தத்திற்கு ஊட்டம் அளிப்பதால் இந்த பாசக ஸாதக பித்தங்களுக்கிடையே உள்ள தொடர்பானது சிறப்பாக அமையும் பட்சத்தில் உங்கள் மகள் படிப்பில் நாட்டம் உள்ளவளாகவும், செயல்களில் ஒரு நிதானத்தையும் அடைவாள்.
காலையில் வெதுவெதுப்பாக புழுங்கலரிசிச் சாதத்துடன் சிறிது பயற்றம் பருப்பு தூக்கலாகவும், துவரம் பருப்பு குறைவாகவும் மஞ்சள்தூளுடன் வேகவைத்த பருப்பை கலந்து ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடச் செய்யவும். அப்படிச் சாப்பிடும்போது ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய சாரஸ்வதக்ருதம் எனும் நெய்மருந்தை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அரை ஸ்பூன் சாரஸ்வத சூரணத்துடன் குழைத்து, கால் ஸ்பூன் சுத்தமான தேனும் விட்டு நன்றாகக் கலந்து உணவிற்கு நடு நடுவே நக்கிச் சாப்பிடும்படி மகளுக்கு உபதேசிக்கவும். இதன் மூலம் இம்மருந்தின் வீரியமானது சாதத்துடன் கலப்பதால் பாசக பித்தம் அதை நன்றாக உள்வாங்கி அதன் சாராம்சமான பகுதியை விரைவாக இதயத்திலுள்ள சாதக பித்தத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். நல்ல நினைவாற்றலும், பேச்சுவன்மையும் இம்மருந்தின் மூலம் தங்கள் மகளுக்குக் கிடைக்கும். காதுவலி, தலைவலி போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி நன்கு கண்டறிந்து அதன் பிறகு மருந்துகளைச் சாப்பிடுவது நல்லது. சில பிள்ளைகள் பள்ளியைத் தவிர்ப்பதற்காக இதுபோன்று கூறுவது இயல்பாக இருப்பதால், உண்மையறிந்து அதன் பிறகு மருத்துவரை ஆலோசிக்கலாம்.
பொதுவாக தலைக்கு ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய ப்ரம்மீ தைலத்தை அவள் பெண்ணாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாகிய நாட்களில் காலையில் சிறிது தேய்த்து ஊறவைத்து அதன் பிறகு தலைக்குக் குளிப்பதால் படிப்பில் நல்ல நாட்டம், நினைவுத் திறன் போன்றவை மேம்படும். அன்று முழுவதும் பள்ளியில் நடந்த சம்பவங்களை இரவில் மகளை வரிசைப்படுத்திக் கூறச் செய்வதால் அவளுடைய புத்தி மற்றும் நினைவாற்றல் நன்றாக மேம்படும்.
சாரஸ்வதாரிஷ்டம் எனும் மருந்தை காலை, இரவு உணவிற்கு பிறகு சாப்பிடக் கொடுக்கவும். இம்மருந்துகளை சுமார் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து படிக்க வேண்டிய நிர்பந்தமிருப்பதால் உடல் மற்றும் மனம் வாட்டம் அடையாமலிருக்க இரவு உணவாக பச்சைப் பயறு வேகவைத்த கூட்டுடன் எண்ணெய் சேர்க்காத கோதுமையில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டியைச் சாப்பிடக் கொடுக்கலாம். இந்த சுக்கா ரொட்டிக்கான மாவைப் பிசையும்பொழுது ஒன்றிரண்டு டீ ஸ்பூன் கல்யாணக க்ருதம் எனும் ஆயுர்வேதமருந்தைச் சேர்த்துக் கொண்டால் மனவலிமையும் உடல் வலிமையும் நன்றாகக் கூடுவதுடன் பாடத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் வளரும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.