ஜெய்ஹிந்த் உருவானது எப்படி?
இந்திய தேசியக் கொடியை ஏற்றியவுடன் சல்யூட் அடிப்பதும் பின்னர் தேசிய கீதத்தை இசைப்பதும் வழக்கமான சம்பிரதாயமாகும். தலைமை ஏற்பவர் உரை முடிந்ததும்
இந்திய தேசியக் கொடியை ஏற்றியவுடன் சல்யூட் அடிப்பதும் பின்னர் தேசிய கீதத்தை இசைப்பதும் வழக்கமான சம்பிரதாயமாகும். தலைமை ஏற்பவர் உரை முடிந்ததும் ""ஜெய்ஹிந்த்'' என்று உரத்தக் குரலில் கூறும் வழக்கம் எப்போது தோன்றியது?
1942-ஆம் ஆண்டில்தான் சுதந்திர வேட்கையை எழுப்பும் வகையில் "வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அதே ஆண்டில் மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது "செய் அல்லது செத்து மடி' என்ற வாக்கியம் சரித்திர முக்கியத்துவம் பெற்றது. அதைப்போல் 1945-ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தினர் மீது பிரிட்டிஷார் விசாரணை நடத்தத் தொடங்கியபோதுதான் "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை உருவாயிற்று.
உண்மையில் இந்த வார்த்தை திருவனந்தபுரத்தில் பிறந்த செண்பகராமன் பிள்ளை, தன் ரத்தத்தில் ஊறிய சுதந்திர வேட்கையின் காரணமாக இளம் வயதிலேயே தன் நண்பர்களைச் சந்திக்கும்போது ""ஜெய்ஹிந்த்'' என்று கூறுவாராம். நாளடைவில் இது பிரபலமடையத் தொடங்கியது.
1908-ஆம் ஆண்டில் செண்பகராமன் மேற்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். வெளிநாட்டில் இருந்தாலும் அவரது மனதில் தாய்நாட்டைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கி இருந்தது. பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். 1914-ஆம் ஆண்டில் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அருகே வந்து சென்ற ஜெர்மனியின் எம்டன் யுத்தக் கப்பலில் கடற்படைத் தளபதியாக செண்பகராமன் பணியாற்றினார். (செண்பகராமன் வந்து சென்றதை நினைவுகூறும் வகையில் அவரது சந்ததியினர் இன்றளவும் அதே தினத்தில் சென்னை வந்து அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்).
1933-ஆம் ஆண்டு வியன்னாவில் முதன்முதலாக செண்பகராமன் பிள்ளை நேதாஜியைச் சந்தித்தபோது ""ஜெய்ஹிந்த்'' என்று கூறி வணக்கம் தெரிவித்தது நேதாஜியை மிகவும் கவர்ந்தது. இந்திய தேசிய ராணுவ வட்டாரத்தில் ராணுவ வீரர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ""ஜெய்ஹிந்த்'' என்று கூறுவது வழக்கமாயிற்று.
1941-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இந்திய ராணுவ கைதிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய நேதாஜி, அவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது நேதாஜியின் வீர உரைகளால் கவரப்பட்ட அபிட் உசைன் ஜப்ரானி என்பவர், ""இதுவரை என்னுடைய வாழ்க்கையில் பெரிய அளவில் சாதனை ஏதும் செய்யவில்லை. என்னுடைய படிப்பை விட்டுவிட்டு உங்களுடன் சேர விரும்புகிறேன்'' என்று கூறினாராம். நேதாஜியின் செயலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் நியமிக்கப்பட்ட அபிட், இந்திய தேசிய ராணுவ மேஜராகவும் உயர்த்தப்பட்டார்.
1941-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, ஜெர்மனியில் சுதந்திர இந்தியா மையத்தில் நடந்த கூட்டத்தில், ""இனி நம்முடைய ராணுவ வீரர்களும், இந்திய சுதந்திரத்திற்காகப் போராட விரும்புகிறவர்களும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது ""ஜெய்ஹிந்த்'' என்று சொல்ல வேண்டும்'' என்ற தீர்மானத்தை நேதாஜி நிறைவேற்றினார்.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரமடைந்த அன்று செங்கோட்டையில் முதல் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்த முதலாவது இந்தியப்பிரதமரான ஜவகர்லால் நேரு தன்னுடைய உரையை முடித்த பின்னர், ""ஜெய்ஹிந்த்'' என்று உரத்துக் கூறியது, கூடியிருந்தவர்கள் அனைவரையும் பெருங்குரலில் ""ஜெய்ஹிந்த்'' என்று கூற வைத்தது.
அப்போது முதல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இறுதியில் ""ஜெய்ஹிந்த்'' என்று கூறுவது வழக்கமானது.