திலீப்குமார் - சாயிராபானு காதல்!
1967 ஆம் ஆண்டில் "ஸ்கிரீன்' சினிமா பத்திரிகையில் நான் எழுதிக் கொண்டிருந்த போதே திலீப்குமாரைப்
"திலீப்குமார் - தி சப்ஸ்டான்ஸ் அண்ட் தி ஷேடோ' என்ற தலைப்பில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமாரின் சுயசரிதையை எழுதியுள்ள "ஸ்கிரீன்' உதயதாரா நாயர் தன்னுடைய அனுபவத்தை சொல்கிறார்:
1967 ஆம் ஆண்டில் "ஸ்கிரீன்' சினிமா பத்திரிகையில் நான் எழுதிக் கொண்டிருந்த போதே திலீப்குமாரைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். தன்னைச் சந்திப்பவர்களிடம் பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் சகஜமாக பழகும் தன்மை இவரிடம் இருந்தது. ஒரு மாணவியாக சினிமா எழுத்தாளர் என்ற முறையில் நான் அவரை படப்பிடிப்புகளின் போது கூர்ந்து கவனித்து வியந்ததுண்டு. அவரது மனைவி சாயிராபானு என்னுடைய நெருங்கிய தோழி என்பதால் திலீப்குமாரை சிறந்த நடிகராகவும் மனிதராகவும் உணரும் வாய்ப்பு கிடைத்தது.
தன்னைப் பற்றி பிறரிடம் அவ்வளவு சுலபமாக எதையும் கூற விரும்பாத அவர், தன்னுடைய சுயசரிதையை எழுதும்படி என்னிடம் கூறியது மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். திரையுலகத்திற்கு வெளியில் உள்ள சிறந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். திலீப்குமாரின் வாழ்க்கை அனுபவங்களை அறிய அவர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.
திரையுலகில் அவருக்கு குரு என்று யாரும் இருந்ததில்லை. நடிகராக வேண்டுமென்ற ஆசையும் இல்லை. 1942ஆம் ஆண்டில் தன்னுடைய "பாம்பே டாக்கி' அலுவலகத்தில் தேவிகாராணி இவரைச் சந்தித்தபோது நடிகராக ஒப்பந்தம் செய்து கொண்டார். அவருக்கு அப்போது மாத சம்பளம் ரூ.1250. ஒரு நடிகர் என்ற முறையில் அவர் தன்னுடைய அனுபவங்களை நினைவில் வைத்திருப்பது அதிசயம்தான்.
சினிமா என்பது ஒரு சுலபமான வியாபாரமல்ல என்பதை விரைவில் உணர்ந்த அவர் சினிமா உலகம் போட்டி நிறைந்தது என்பதோடு வெற்றியைத் தக்கவைக்க கடினமாக உழைக்க வேண்டுமென்று நினைத்தார். ஆனால் அது ஓர் இரக்கமற்ற கடின உழைப்பு என்பது அவரது கருத்தாக இருந்தது.
அவர் என்னிடம் ஒருமுறை கூறினார். ""நீங்கள் சமையல் செய்தாலும், காய்கறிகளை வாங்கினாலும் அதில் ஒரு அவுன்ஸ் சக்தியையாவது செலவழிக்க வேண்டும். எதையுமே சுலபமாகச் செய்யலாம் என்று நினைக்கக் கூடாது.
சினிமா உருவாக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். செட் டிசைன், ஒளிப்பதிவு, இயக்கம் என்று அனைத்து துறைகளையும் கவனித்தார். மற்றவர்கள் பணியில் தான் குறுக்கிடுவதாக நினைக்கக்
கூடாது என்ற எண்ணத்துடன்தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் குறையின்றி வரவேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார். நான் அவரது சுயசரிதையை எழுதி முடிக்க பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஏனெனில் எழுதத் தொடங்கியதும் அவர் பரபரப்பாக இருந்தார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்புடையவராகவும் இருந்தார். மேலும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டவில்லை. எப்போது நேரம் கிடைத்ததோ அப்போது மட்டுமே சந்தித்து வந்தோம். அனைத்து தகவல்களும் கிடைத்த பின்னர் ஒரே ஆண்டில் புத்தகத்தை எழுதிமுடித்தேன். அவ்வப்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரிடம் படித்து காட்டுவேன். அவராகவே படிக்க மாட்டார். அதுதான் எனக்கு குறையாக இருந்தது. ஆனால் சாயிராபானு ஒவ்வொரு வார்த்தைகளையும் வரிகளையும் கூர்ந்து படிப்பார்.
அவர்களுக்கு திருமணமாகி இப்போது 48 ஆண்டுகளாகின்றன. திலீப்குமாரின் முந்தைய வாழ்க்கை மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி சாயிராவுக்கு தெரியும். அவர்களுடைய ஒப்புதலுக்கு பிறகே அனைத்து சம்பவங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அனைத்து தகவல்களும் உண்மையானதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறவள் நான். எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பமாகும்.
சாயிராபானு, திலீப்குமார் மீது கொண்ட காதல் நிஜமானது அல்ல என்று நான் அவ்வப்போது அவரிடம் கூறுவதுண்டு. உண்மையில் அவரது காதல் நிஜத்தைவிட தெய்வீகமானது. புராணக்கதைகளில் பெண்கள் கணவனை மீட்டுத்தரும்படி கடவுளிடம் வேண்டுவது போன்றது அவரது காதல். திலீப்குமார் உடல் நலமின்றி ஏதும் சாப்பிடாமல் இருந்தால் இவரும் ஏதும் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார். அவரை எங்கே இழந்து விடுவோமோ என்ற பயம் அவருக்கிருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது உயிரையே வைத்திருக்கிறார், சாயிரா. அண்மையில் திலீப்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவரது படுக்கைக்குப் பக்கத்தில் தரையிலேயே படுத்து கிடந்தார், நர்ஸ்களின் உதவியைக் கூட அவர் கேட்டதில்லை. தானே அத்தனை பணிவிடைகளையும் செய்தார். எப்போதும் அவரையே உற்று பார்த்துக் கொண்டிருப்பார். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
""அவர் ஏன் வெளுத்தாற்போல் காணப்படுகிறார்? ஏன் இன்று மவுனமாக இருக்கிறார்?'' என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அன்றையதினம் அவருடன் பகல் 3 மணி வரை இருந்தேன். பின்னர் அவரை அவசர சிகிச்சைப்பிரிவு அறைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வந்தது. அவருக்கு ஏற்பட்ட லேசான மாரடைப்பிலிருந்து டாக்டர்கள் அவரை காப்பாற்றிவிட்டனர். தற்போது அவருக்கு 92 வயதானலும் சாயிராவின் அக்கறையிலும் கவனிப்பிலும் எந்தவித மாறுதலும் இல்லை, சாயிராவை பொறுத்தவரை அவர் திலீப்குமாரின் ரசிகை, மனைவி, நெருங்கியதோழி, தாய் என பல்வேறு முகங்களை கொண்டவராகவே நான் அவரை பார்க்கிறேன். அவர் இல்லாமல் சாயிராவால் தனித்திருக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவின் போது அவரை காப்பாற்றுவதை ஒரு சவாலாகவே ஏற்று அவர் செயல்பட்டார் என்பதுதான் உண்மை.
ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து விமானத்தில் திரும்பும்போது திலீப்குமாரை சந்தித்த சாயிராபானு அந்த நிமிடமே அவரது தாயாரிடம் கூறினாராம். ""இதுவரை படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன் பணத்தையெல்லாம் திருப்பி கொடுத்துவிடு. நானும் அவரும் சேர்ந்து கணவன் - மனைவியாக வாழ்வதைவிட வேறு வழி இருப்பதாக தெரியவில்லை'' இதை கேட்டு சாயிராவின் தாய் நசீமாபானு மட்டுமல்ல. திலீப்குமாரும் அதிர்ச்சியடைந்தாராம்.
அப்போது சாயிராபானு திரையுலகில் உச்சகட்டத்தில் இருந்தார். உடனே திலீப்குமார், ""யோசித்து முடிவெடுக்க நம் இருவருக்கும் போதுமான நாள்கள் இருக்கின்றன அவசரப்படாதே'' என்று கூறினாராம்.
"" யோசித்து முடிவெடுப்பதற்குள் வயதாகிவிடும். வயதான பிறகு ஆசைகளை நிறைவேற்றுவதில் அர்த்தமே இல்லை'' என்று சாயிரா, திலீப்குமாரைத் திருமணம் செய்து கொள்வதில் பிடிவாதமாக இருந்தார். அப்போது சாயிராவுக்கு 22 வயதுதான். திலீப்குமார் நல்ல அனுபவமும் படிப்பாற்றலும் பெற்றிருந்தார். வெகு சீக்கிரத்தில் அவருக்கு சமமாக அனைத்தையும் கற்றுணர்ந்து அவரது மனதை முழுமையாக புரிந்து கொண்டார். ஐந்து வயதில் அவரது பெற்றோர்கள் பிரிந்துவிட்டதால் தனக்கென்று ஒரு பாதுகாப்பை அவர் தேடிக் கொண்டதாகவே கருதினேன்.
திலீப்குமாரை, சாயிரா மணந்து கொண்டது அவரது இரண்டு சகோதரிகளுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் சாயிராவை எப்படி நடத்தினார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன். சாயிராவிடமிருந்து திலீப்குமாரை பிரிக்க திட்டமிட்டதுடன் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படியும் தூண்டினர். சாயிராவுக்கு குழந்தை பேறு இல்லை என்பதே அவர்கள் இவரை வெறுப்பதற்கு காரணமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையை இருவருமே மிகவும் பொறுமையுடன் கையாண்டனர். திருமணத்திற்கு முன்பு காமினி கவுசல், மதுபாலாவுடன் தொடர்பிருந்ததை திலீப்குமார் இந்தப் புத்தகத்தில் நாகரீகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைஜெயந்திமாலா, வஹிதா ரஹ்மான் ஆகியோருடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டாலும் நாங்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தோம்'' என்கிறார்.
பன்னிரண்டு குழந்தைகளில் நான்காவதாக பிறந்த யூசுப்கான் பின்னர் திலீப்குமாராக மாறியபோதும் தன் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்து கொடுப்பதில் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அவர் சொல்ல மறுத்த பல தகவல்களையும், செய்த தான தருமங்களையும் திரையுலகைச் சேர்ந்த நடிக - நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள், நண்பர்கள் மூலமாக சேகரித்துள்ளேன். பல்வேறு நல திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் எந்த நேரத்திலும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
"லாரன்ஸ் ஆப் அரேபியா' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அவர் உதறிதள்ளியதும் உண்டு. இரண்டாம் கட்ட நடிகராக அதில் நடிக்க விரும்பாததே காரணமாகும். இதே போன்று சத்தியஜித்ரே படத்திலும் கதைக்கு தேவையான ஒருசில காட்சிகளில் மட்டும் நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார். எப்போதுமே தான் ஒரு இந்திய நடிகராக இருப்பதையே பெருமையாக கருதினார்.
சினிமாத்துறை முழுக்க முழுக்க வியாபாரமாக மாறியபோது நானும் சினிமா பத்திரிகை துறையிலிருந்து விலகிவிட்டேன். அமிதாப்பச்சன் வருகைக்கு பின்னர் திரையுலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. பணமும் புகழும் மட்டுமே குறிக்கோளாக மாறிவிட்டது. இன்றைய தினத்தில் கோடிக் கணக்கில் சம்பாதிப்பதையே நடிகர்கள் விரும்புகிறார்கள். திறமையை வெளிப்படுத்தும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். கலைக்காக சேவை செய்பவர்கள் குறைந்துவிட்டனர்.