தினமணி கதிர்

திரைக்கதிர்

நடிகர் திலகம் முதன் முதலில் சினிமாவில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனை பார்க்கும் சீதை வேடம்தான்

ஜி. அசோக்

நடிகர் திலகம் முதன் முதலில் சினிமாவில் போட்டது பெண் வேடம். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனை பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம். 1952-ஆம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த "பராசக்தி'யில் குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜியை கதாநாயகனாக்க தயாரிப்பாளர் பி.ஏ.

பெருமாள் முடிவு செய்த போது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளையே சாரும். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குதான். அந்த படத்தின் பெயர் "வணங்கா முடி'. சிவாஜி நடித்த மொத்த படங்கள் 301. இதில் தமிழ் படங்கள் மட்டும் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2. மலையாளம் 1. கௌரவத் தோற்ற படங்கள் 19. அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது என்பது. அது கடைசி வரையில் நிறைவேறவே இல்லை. "தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் நீங்கள்தான் ரோல் மாடல்' என்று ஒரு முறை பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி சொன்ன போது, "டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் நான் மூன்றாவதுதான்' என சிவாஜி சொல்லியது அவரின் தன்னடக்கத்துக்கு உதாரணம் என்பார்கள்.  

சிம்பு - நயன்தாரா நடிக்கும் படம் "இது நம்ம ஆளு.' சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் டி.ராஜேந்தர் தயாரிக்கும் இந்தக் கதையின், திருப்பு முனை ஒன்றில் கௌரவ வேடத்தில் டாப்ஸி நடிப்பது உறுதியாகியுள்ளது. முன்னணி நடிகைகள் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் கடைசியாக டாப்ஸி ஒப்பந்தமானார். ஒப்பந்தமான கையோடு நிபந்தனை ஒன்றையும் விதித்தாராம் டாப்ஸி. அதாவது, படத்தில் நயன்தாராவும் இருப்பதால் அவருடன் எந்தக் காட்சியிலும் நடிக்க முடியாது என டாப்ஸி சொன்னதாக கூறப்படுகிறது. காரணம், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா முன்னணி வரிசையில் இருக்கும் போது, டாப்ஸி அறிமுகம் ஆனார். டாப்ஸிக்கு அடுத்தடுத்து தெலுங்கில் படங்கள் வெளிவந்தன. பத்திரிகைகள் டாப்ஸியின் வளர்ச்சி பற்றி நயன்தாராவிடம் கேட்ட போது, "யார் அவர்?' என்கிற தொனியில் நயன்தாரா பதிலளித்தாராம். இதனால் அப்போது முதலே டாப்ஸிக்கும், நயன்தாராவுக்கும் பனிப்போர். இதனால் நயன்தாராவுடன் எந்த காட்சியிலும் நடிக்க மாட்டேன் என சொல்லித்தான் "இது நம்ம ஆளு' படத்தில் டாப்ஸி நடிக்கிறாராம். 

மணிரத்னம் நிறைய ஒன் லைன் சொல்லிக் கொண்டே இருக்க, அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பாராம் பி.சி.ஸ்ரீராம். உரையாடலின் போது சொன்ன எந்த விஷயம் எப்படி மெருகேறி படமாக மாறும் என்பது இருவருக்குமே தெரியாதாம். அப்படித்தான் ஒரு நாள் அக்னி நட்சத்திரம் கதை சொன்னார். ""நல்லா இருக்கு மணி... உடனே ஷூட்டிங் கிளம்பலாம்'' என்று பி.சி. சொன்னதும், "நின்னுக்கோரி வரணம்...' பாடல் காட்சிகள் மட்டும் படமாகியிருக்கிறது. திடீரென்று என்ன நினைத்தாரோ ""எனக்கு மனசுக்குள் வேறு ஒரு கதை ஓடிக் கொண்டு இருக்கு. அதை உடனே பண்ணிருவோம்'' என சொல்லி விட்டு "நாயகன்' படத்தை ஆரம்பித்து விட்டாராம் மணி. "நாயகன்' முடித்து ஹிட் ஆன பிறகு, அதே உத்வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட படம் "அக்னி நட்சத்திரம்.' அப்போது சின்னதாக தயங்கிய பி.சி. ""மணி இந்தக் கதையை இப்போ அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். ரெண்டு வருஷம் முன்னாடி யோசிச்ச கதை. இப்போ டிரெண்ட் மாறியிருக்கு. அதுவும் போக, கதையும் ரொம்ப அட்வான்ஸô இருக்கு. கொஞ்சம் டெஸ்ட் பண்ணிக்குவோம்'' என சொல்ல, அதை ஆமோதித்து கொஞ்சம் டெஸ்ட் ஷூட் செய்த பின்னரே படப்பிடிப்புக்கு கிளம்பினாராம் மணிரத்னம்.

மார்க்கெட்  டல் அடிக்க தொடங்கும் போதெல்லாம் நடிகைகள் வாய்ப்புகளைத் தக்க வைக்க சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அதில் ஒன்று, புதிய தோற்றத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஆல்பங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அனுப்பி வைப்பது. இந்த வரிசையில் தற்போது பூர்ணா. முன்னணி வரிசை என்று இல்லா விட்டாலும், அதற்கு அடுத்த இட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த பூர்ணாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. தமிழ், தெலுங்கில் படங்கள் இல்லாததால் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகி, சிறப்புத் தோற்றம் என கிடைத்தவற்றில் நடித்து வருகிறார். இதனால் திடீரென்று போட்டோ ஷூட் நடத்தினார் பூர்ணா. இதில் விதவிதமான போஸ்கள் கொடுத்த ஆல்பம் தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி தயாரிப்பாளர், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் மேனேஜர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளாராம். முழுக்க முழுக்க மாடர்ன் ஆடைகளில் காட்சி தரும் பூர்ணா, இனி கிளாமருக்கும் நான் தயார் என சொல்லுவதைப் போல் அந்த ஆல்பம் அமைந்திருக்கிறது. தமிழில் இரண்டாவது ஹீரோயினாக இருந்தாலும் சரி என்பதை போல் அவரது தரப்பு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறதாம்.

"டி.ராஜேந்தர் இயக்கிய "ஒரு தலைராகம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சங்கர். தொடர்ந்து "ராகம் தேடும் பல்லவி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், திடீரென்று திரையுலகை விட்டு விலகினார். இந்நிலையில் தற்போது இயக்குநராக "மணல் நகரம்' என்ற படத்தின் மூலம் கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார். முழுக்க முழுக்க துபையில் உருவாகியுள்ள இப்படத்தில் கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் அவதாரம் குறித்து சங்கர்... ""ஒரு தலைராகம்' படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் ரசிகர்களுக்கு நான் இன்னும் "ஒரு தலைராகம்' சங்கர்தான். அந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த ஒரு படத்தால்தான் இத்தனை காலம் நான் திரையுலகில் இருக்கிறேன். "ஒரு தலைராகம்' என்பதுதான் என் அடையாளம். என் மரணத்துக்குப் பின்பும் அதுதான் அடையாளமாக இருக்கும். இயக்குநர் என்பது நான் வெகுநாள்களாக திட்டமிட்ட ஒன்று. அது இப்போதுதான் நடந்தேறி இருக்கிறது. இரு இளைஞர்களுக்குள் நடக்கும் கதையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். முழுக்க முழுக்க துபை என்பது கதைக்கு தேவைப்பட்டது. நிச்சயம் இப்படம் நற்பெயரை உருவாக்கித் தரும்'' என்றார் சங்கர்.

ஒரு பாடலுக்கு ஆடுகிறார் மீனாட்சி... "கருப்பசாமி குத்தகைதாரர்', "மந்திரப்புன்னகை' உள்ளிட்ட படங்களில் நடித்த மீனாட்சிக்கு திடீரென்று வாய்ப்புகள் குறைந்தது. இதனால் தனது தாய் மொழியான பெங்காலியில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நடித்த "துப்பாக்கி' படத்தில் ஒரு காட்சியில் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டதையடுத்து அப்படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் அவருக்கு புது வாய்ப்பு அமைந்திருக்கிறது. இதிலும் ஹீரோயின் வேடம் கிடையாது. ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் "வெள்ளைக்கார துரை'. இதில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் இடம் பெறும் குத்துப்பாடல் ஒன்றில் விக்ரம் பிரபுவுடன் நடிக்க மீனாட்சி ஒப்பந்தமாகியுள்ளார். ""வாய்ப்பில்லாமல் ஒரு பாடலுக்கு ஆட வந்து விட்டேன் என்று எடுத்துக் கொள்ள கூடாது. இந்த ஒரு பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கோலோச்சுவேன்'' என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் மீனாட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT